கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 26, 2010

பேரவையில் ஜீவானந்தம் படம் - முதல்வர் கருணாநிதி தகவல்


திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமியின் ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நேற்று சென்னையில் கலைஞர் அரங்கில் நடந்தது. முதல்வர் கருணாநிதியிடம் வெள்ளி செங்கோல் வழங்கிய கோவிந்தசாமி, 18 ஆயிரம் பேர் தி.மு.க.வில் சேருவதற்கான உறுப்பினர் விண்ணப்ப படிவங்களையும் முதல்வரிடம் வழங்கினார். கட்சியில் இணைந்தவர்களை வாழ்த்தி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து கோவிந்தசாமி ஆதரவாளர்கள் இணைகிறீர்கள். கோவிந்தசாமி இணைவதற்கு காத்திருக்கிறார். திருப்பூர் பனியனுக்குப் பெயர் பெற்ற ஊர். அதனால் பனியன், சட்டை உதாரணத்தை சொல்கிறேன். ஒரு மனிதன் உடை உடுத்துகிற நேரத்தில் பனியனை முதலிலே போட்டு கொண்டு, அதற்கு பிறகுதான் சட்டையை அணிந்து கொள்வான். என் வழக்கம் அப்படித்தான். இப்போது பனியன் போன்ற உங்களையெல்லாம் அணிந்திருக்கிறேன், இணைத்திருக்கிறேன். சட்டை எப்போது அணியப் போகிறேன் என்பதை விரைவில் அறிந்து கொள்ளவிருக்கிறீர்கள்.
எனக்கு மார்க்சிஸ்ட் கட்சியை உடைத்து அதிலேயிருந்து ஆயிரக்கணக்கானவர்களை தி.மு.க.வுக்கு இழுக்க வேண்டுமென்ற எண்ணம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட அடிப்படை நோக்கம் கொண்டவனல்ல நான். ஆனால், நல்ல எண்ணம் கொண்ட ஒரு கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டுமென்று யார் எண்ணினாலும், அவர்களுக்கு அஞ்சக் கூடியவனல்லன் நான் என்பதை பல நேரங்களில் நிரூபித்து காட்டியிருக்கிறேன். மணலி கந்தசாமி, ஜீவானந்தம் போன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களோடு உழைத்தவன் நான். இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி என்று இரண்டு தலைமையிலே உள்ளவர்களுக்கும் நான் நெருக்கமான நண்பனாக விளங்கியவன். அவர்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இன்றைக்கும் நண்பனாக இருப்பவன்.
அவர்கள் ஒருவேளை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். காரணம், அவர்கள் இன்றைக்கு சேர்ந்து இருக்கிற இடம் அப்படி. உண்மைத் தொண்டனாகிய கோவிந்தசாமியை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், சேர்வார் தோஷம்; சேர்ந்த இடம் அப்படி. அதனால்தான் கோவிந்தசாமியின் தியாகம், உழைப்பு, பேச்சாற்றல், செயலாற்றல் ஆகியவற்றை அவர்கள் பொருட்படுத்தவில்லை. பொருள்படு த்தாமலே அவரைப் போக விட்டு விட்டார்கள். போ என்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.
அவர் இங்கே வந்திருப்பது ஆறுதல் பெறுவதற்காகத்தான். கட்டுப்பாடு என்று கூறி, அவரை கட்சியிலேயிருந்து வெளியேறு என்று கட்டளையிட்ட போது நான் அவரை அழைத்துப் பேசியது என் கட்சிக்கு வா என்று சொல்கிற அற்பப் புத்தியோடு அல்ல. அவரை அழைத்து மருந்து தடவினேனே தவிர, அவருக்கு நான் ஆறுதல் கூறினேனே அல்லாமல், ஆசை காட்டி இங்கே வந்து விடு என்றல்ல.
நான் 2வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த நேரத்தில் ஒரு நாள் மணலி கந்தசாமியும் சுப்புவும் வந்தார்கள். மணலி உங்கள் தலைமையிலே தி.மு.க.வில் சேர விரும்புகிறார் என்றார் சுப்பு. ‘நீங்கள் பெரிய தலைவர், நீங்கள் இந்தக் கட்சிக்கு வரக் கூடாது. நீங்கள் வருவது எனக்கு பெருமை என்றாலும்கூட உங்களுக்கு பெருமை ஆகாது, ஆகவே நீங்கள் அங்கேயே இருக்க வேண்டும்’ என்று நான் சொன்னேன்.
மணலிக்குக் கோபம் வந்து, நீ என்னை வேண்டாமென்று சொன்னால் நான் வேறு கட்சிக்கே போய் விடுகிறேன் என்று சொல்லி வேறு கட்சிக்கே போய் விட்டார். அந்த மணலி கந்தசாமி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஒரு விழாவிலே பேசும் போது தமிழ்நாட்டிலே உள்ள விவசாயிகள் குடியிருந்த இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக, கம்யூனிஸ்ட் இயக்கம் சிந்தாத ரத்தம் இல்லை, கொடுக்காத உயிர் இல்லை. அப்போதெல்லாம் கிடைக்காத இந்த சுதந்திரம் கருணாநிதியின் பேனாவிலிருந்து சிந்திய ஒரு துளி மையினால் கிடைத்திருக்கிறது என்றார்.
மார்க்சிஸ்ட் இயக்கத்தின் வி.பி.சிந்தன் என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாள் விழாவிற்கும் என் வீட்டிற்கு வருவார். ஒரு சிகப்புத் துண்டை போர்த்துவார். இது எங்கள் கட்சி அனுமதிக்காத ஒன்று, இருந்தாலும் உங்களிடம் உள்ள தனிப்பட்ட அதன்பின் காரணமாக இதை உங்களுக்கு அணிவிக்கிறேன் என்று சொல்லி அணிவிப்பார்.
இப்படியெல்லாம் கம்யூனிஸ்ட் இயக்கத்திலே நண்பர்கள், தலைவர்கள் உண்டு. அவர்களுடைய வழியை பின்பற்றினார் கோவிந்தசாமி என்பதற்காக அவருக்கு தண்டனை தரப்பட்டது. நான் அவருக்கு உங்கள் சார்பாக அபயம் அளித்திருக்கிறேன். கம்யூனிஸ்ட்கள் அடிக்கடி தங்களுடைய கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்கள் அல்ல. ஆனால் ஏதோ ஒரு மாயை, இப்போது அவர்கள் தங்களுடைய கொள்கையை மாற்றுவதையே கொள்கையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறுதாவூர் பற்றி அரசிடம் கொண்டு வந்து மனு கொடுத்து, அதை காலி செய்யச் சொன்னவர்களும் இதே கம்யூனிஸ்ட்கள்தான். இன்றைக்கு அதைப் பற்றி மூச்சு விடாமல் இருப்பவர்களும் இதே கம்யூனிஸ்ட்கள்தான்
இதை நான் சொல்வதற்கு காரணம், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்பதில் அவர்கள் தலைகீழாக நிற்கிறார்கள். அதற்காக கங்கணம் கட்டிக் கொண்டு இன்றைக்கு தி.மு.க.வை, தி.மு.க அரசை, சாதனைகளை மறைக்கப் பார்க்கிறார்கள். நிச்சயமாக அதை மறைக்க முடியாது. தி.மு.க. அரசின் சாதனைகள் மங்கவும் மங்காது. சிவபுண்ணியம் ஒரு நாள் என்னிடம், ‘எல்லா படங்களையும் வைத்திருக்கிறீர்கள் ஜீவானந்தம் படம் வைக்க வேண்டாமா’ என்று கேட்டார். அவரோடு சேர்ந்து கோவிந்தசாமியும் இதே கேள்வியை கேட்டார். நான் அப்போது, அதற்கான நேரம் வரும் போது வைக்கப்படும் என்று சொன்னேன். இப்போது நேரம் வந்து விட்டது, ஜீவானந்தம் படம் அந்த மண்டபத்திலே, இந்த நாளை முன்னிட்டு வைக்கப்படும்.
கோவிந்தசாமி தலைமையில் திருப்பூர் வட்டாரத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தி.மு.க.வில் இணைகிறோம் என்று சொல்கிற இந்த நாளை நான் நெஞ்சிலே தாங்கி ஜீவானந்தம் படம் கோட்டை கொத்தளத்திலே, சட்டமன்றம் நடைபெறுகின்ற இடத்திலே வைக்கப்படும். இது அவருக்கு நான் காட்டுகிற மரியாதை. கோவிந்தசாமியிடமும், சிவபுண்ணியத்திடமும் காட்டுகின்ற அன்பு. இவ்வாறு கருணாநிதி பேசினார்.
கோவிந்தசாமி பேசுகையில், ‘தி.மு.க. ஆட்சி சாதனைக்கு பாராட்டு விழா நடத்த அனுமதி கேட்டதால் என்னை வெளியேற்றினார்கள். என்னை கட்சியிலிருந்து வெளியேற்றியதாக எனக்கோ, சட்டப் பேரவை தலைவருக்கோ கடிதம் அனுப்பவில்லை. விரைவில் என்னை தி.மு.க.வில் இணைத்து கொள்வேன்’ என்றார். முன்னதாக, அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வரவேற்றார். அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொங்கலூர் பழனிச்சாமிஉள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment