பொது மக்கள் கேட்கும் தகவல்களை வழங்குவதற்கு சென்னையில் மாநில தகவல் ஆணையம் செயல்படுகின்றது. தலைமை தகவல் ஆணையராக எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளார். இவரின் பதவிக் காலம் வரும் 31ம் தேதி முடிகிறது.
புதிய தலைமை ஆணையராக தற்போதைய தலைமைச் செயலர் ஸ்ரீபதி நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கை தெரிவிக்க வேண்டுமென்ற தகவல் ஆணைய உத்தரவை ஸ்ரீபதி எதிர்த்ததாகவும், எனவே அவரை தகவல் ஆணையத்தில் நியமிக்கக் கூடாது என தகவல் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஸ்ரீபதியை நியமிக்கக் கூடாது என்று தகவல் அறியும் உரிமை சட்ட இயக்கம் சார்பில் நித்யானந்த், ஜெயராமன், சரவணன், மாதவ் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவிடம் மனு தந்தனர். அதை ஜெயலலிதா, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழு கூட்டம் கோட்டையில் நேற்று நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். குழுவின் இன்னொரு உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா வரவில்லை. அதே சமயம், கடந்த முறை, எஸ்.ராமகிருஷ்ணனை தேர்வு செய்த போது, ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த அன்பழகன், தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் புதிய ஆணையர் தேர்வு செய்யப்பட்டார். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. புதிய தலைமை தகவல் ஆணையராக டி.ஆர்.ராமசாமி, சமீபத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தாஷீலா நாயர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
No comments:
Post a Comment