இலங்கைதமிழர்களின் மறுவாழ்வு குறித்து மக்களவையில் நேற்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “ இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்தியா அனுப்பிய நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் அவர்களுக்கு கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகையில் இந்திய&இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:
இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்தியாவின் சார்பில் செஞ்சிலுவை சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா.சபை
கமிஷன் மூலம் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள், தமிழர்களுக்கு கிடைக்கிறதா என்பதை குறிப்பிட்ட கால அடிப்படையில் மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சே சமீபத்தில் இந்தியா வந்தபோது, அவரிடம் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். 1987ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய & இலங்கை ஒப்பந்த அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அப்போதுதான் இலங்கையில் அமைதியும் சுமூக நிலையும் நிலவும்.
அகதிகள் முகாம்களில் 35,000 முதல் 40,000 பேர் மட்டுமே உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அவர்களையும் விரைவில் தங்கள் இருப்பிடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களின் நிலையை அறிந்து கொள்ள இம்மாத இறுதியில் இலங்கை செல்வேன். இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.
இலங்கைத் தமிழர்களின் நிலைமைகளை அறிந்து கொள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்ற அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதை ஏற்க மறுத்த கிருஷ்ணா, அதற்கான நேரம் இன்னும் கனியவில்லை என்று கூறினார்.
No comments:
Post a Comment