கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 24, 2010

கோவை,திருச்சி கூட்டங்களால் மக்கள் அலை அதிமுக பக்கம் சாய்ந்திருக்கிறதா?கலைஞர் பதில்


முதல்வர் கருணாநிதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு முதல்வர் அளித்த பதில்களும்:


செய்தியாளர் :- சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பாக இரண்டு மில்லியன் டாலர் இந்தியாவிற்கு வருவாயாகக் கிடைக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அப்படி வந்தால் மாநிலங்களுக்கும் பங்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா?


கலைஞர் :- அப்படிப்பட்ட எல்லா கருத்துக்களையும், அறிவிப்புகளையும் ஆழமாகச் சிந்தித்து எடுத்த முடிவு தான் இன்று திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். அந்தத் தீர்மானத் திலேயே பெரிய அளவிலான விவாதம் மற்ற மாநிலங்கள் இணைந்து நடத்த வேண்டிய விவாதம் தேவை என்பதை வலியுறுத்தியிருக்கிறோம். அதை மனதில் வைத்துத் தான் மத்திய நிதியமைச்சர் அவர்களும் கருத்து தெரிவித்துள்ளார்.


செய்தியாளர் :- நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்துவது பற்றி தி.மு.க.வின் கருத்து என்ன? டெல்லியிலே உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கூட ஊதியத்தை உயர்த்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் யாராவது உங்களைச் சந்தித்துக் கேட்டார்களா?

கலைஞர் :- இன்றைய கூட்டத்தில் ஊதிய உயர்வு பற்றி விவாதிக்க வில்லை. அவர்களுக்கு நியாயமான அளவுக்கு ஊதியம் கொடுப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.


செய்தியாளர் :- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு. கழகத்தைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறாரே?

கலைஞர் :- அதெல்லாம் முடிந்து போன விவகாரம்.

செய்தியாளர் :- தமிழ்நாட்டில் தி.மு. கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியைப் பற்றி காங்கிரசிலே உள்ள யாருக்கும் அதைப்பற்றி விமர்சிக்க அதிகாரம் தரவில்லை. கட்சியின் தலைமைக்கு எரிச்சல் ஊட்டுகின்ற அளவில் அப்படி பேசுவதற்கு அனுமதி இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் அறிவித்திருக்கிறாரே, அதைப்பற்றி தி.மு.க. என்ன கருதுகிறது?


கலைஞர் :- மகிழ்ச்சியடைகிறேன். கூட்டணி தர்மத்தைக் கடைப் பிடித்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

செய்தியாளர் :- சேது சமுத்திரத் திட்டம் தொடர்ந்து தி.மு. கழகம் வலியுறுத்தி வருகின்ற திட்டம். அண்மைக் காலமாக அந்தத் திட்டத்தை கிடப்பிலே போட்டு விட்டார்களே?


கலைஞர் :- சாத்திர சம்பிரதாயங்கள் - மூட நம்பிக்கைகள் - இவைகளின் காரணமாகத் தான் சில நேரங்களில் சேது போன்ற மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட வேண்டிய நிலைமைக்கு உள்ளாகின்றன.

செய்தியாளர் :- அ.தி.மு.க. “கவுண்ட் டவுன்” தொடங்கி விட்டதாக ஜெயலலிதா சொல்றாங்களே?

கலைஞர் :- “ரிசல்ட்” வரும்போது எல்லாம் தெரிகிறது.

செய்தியாளர் :- தலைமை தகவல் ஆணையர் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளவில்லை. ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு அவர்கள் விளக்கம் சொல்லி யிருக் கிறார்களா?


கலைஞர் :- அந்த அம்மையார் முதல் அமைச்சராக இருந்த போது, இதே மாதிரி தலைமை தகவல் ஆணையர் தேர்தலை நடத்தியிருக் கிறார்கள். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பேராசிரியர் அவர்கள் அந்தக் கூட்டத்திற்குச் சென்று தன்னுடைய கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். மூன்று பேர் கொண்ட அந்தக் கூட்டத்தில் அப்போது முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவும், அமைச்சர் பொன்னையனும் யாரைத் தேர்வு செய்தார்களோ, அந்தப் பெரும்பான்மை யை ஏற்றுக் கொண்டு முடிவெடுக்கப்பட்டது. பேராசிரியர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் நாகரிகமாக பெருந்தன்மையோடு அந்தத் தேர்வுக்கு ஒத்துழைத்தார். செய்தியாளர் :- நேற்று அவர் ஏன் வரவில்லை என்பதற்கு ஜெயலலிதா அரசுக்கு விளக்கம் தெரிவித்திருக்கிறாரா?

கலைஞர் :- அவர் எப்போதுமே காவேரி பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினால் நானே கைப்பட கடிதம் எழுதுவேன். அவருடைய ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் தான் கடிதம் எழுதுவார். என்னைப் பொறுத்தவரையில் எந்த அனைத்துக் கட்சிக் கூட்டமாக இருந்தாலும் - எந்தப் பொருள் பற்றிய கூட்டமாக இருந்தாலும் நானே கையெழுத்திட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதுவது வழக்கம். அதைப் போல நான் அந்த அம்மையாருக்கு எழுதியிருக்கிறேன். ஆனால் காவேரி பிரச்சினை ஆனாலும், இலங்கைப் பிரச்சினை ஆனாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை ஆனாலும் - எந்தப் பிரச்சினை ஆனாலும் அந்தக் கூட்டங் களுக்கு அவர் வரவும் மாட்டார். சில நேரங்களில் கடிதம் எழுதுவார். அந்தக் கடிதத்தில் என்னை அல்லது அரசை தரக் குறைவாகத் தாக்கி அதனால் நான் வரவில்லை என்று சொல்வார்.
செய்தியாளர் :- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சமீப காலமாக தி.மு.கழக அரசைத் தாக்கி - கடுமையாகக் குற்றஞ்சாட்டி - பொதுக் கூட்டங்களை, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறாரே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- அவர்கள் கட்சியை வளர்க்க அவர்கள் பாடுபடுகிறார்கள். அவ்வளவு தான்.


செய்தியாளர் :- தலைமை தகவல் ஆணையராக யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்? அதற்காக எத்தனை பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள்?

கலைஞர் :- அந்தத் தகவல்களை - முழு விவரங்களை நான் சொல்ல விரும்பவில்லை. காரணம் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்த விவரங்களை நான் சொல்லக் கூடாது.

செய்தியாளர் :- கோவை, திருச்சி நிகழ்ச்சிகளில் ஜெயா கலந்து கொண்ட பிறகு, மக்களின் அலை அ.தி.மு.க. பக்கம் சாய்ந்திருப்பதாக சொல்கிறார்களே?

தலைவர் கலைஞர் :- ஒரு சில பத்திரிகைகள் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதே பத்திரிகைகள் தான் அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்திற்கு இரண்டு இடம் கூட வராது என்று செய்திகளை வெளியிட்டார்கள். முடிவு உங்களுக்கே தெரியும்.

செய்தியாளர் :- எதிர்க்கட்சித் தலைவருக்கு கூடுகின்ற கூட்டத்தைப் பார்த்து......

கலைஞர் :- கூட்டப்படுகின்ற கூட்டத்தைப் பார்த்து.......

செய்தியாளர் :- புதுவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்திருப்பதாகவும், அதைப் போல தமிழ்நாட்டிலும் நடத்த வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறாரே?

கலைஞர் :- நாங்கள் டாக்டர் ராமதாஸ் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதாக இல்லை. அவர் சொல்வதில் நல்லவைகளாக இருந்தால் அதைக் கேட்போம். சாதிவாரி கணக்கெடுப்பு தி.மு. கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. நாங்களும் அதை வலியுறுத்து கிறோம். அதற்காக அகில இந்திய அளவிலே அந்த முயற்சி நடைபெறும்போது அந்தப் பணி நிறைவேற்றப்படும்போது - அதன் தொடர்ச்சியாக இல்லாமல்; குறுக்கே நாங்கள் தமிழ்நாட்டிலே மாத்திரம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது. அப்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆகிற செலவை மத்திய அரசு தான் ஏற்கும். அதற்கான வேண்டுகோளை மத்திய அரசிடம் வைப்போம். இந்தச் சாங்கியங்கள் எல்லாம் நடைபெற்றுத் தான் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆரம்பிக்க முடியும்.
செய்தியாளர் :- மதுவிலக்கை அமல்படுத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று சொல்லியிருந்தீர்களே?

கலைஞர் :- பரிசீலனை செய்வோம் என்று தான் சொன்னேனே தவிர, எத்தனை நாட்களில் என்று சொல்லவில்லையே?

செய்தியாளர் :- நேற்றையதினம் சில மாற்றுத்திறனாளிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாக எங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- உடனடியாக விசாரித்து அது உண்மையா என்பதைப் பற்றி அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

செய்தியாளர் :- தி.மு.க. வில் புதிய கட்சிகள் ஏதாவது கூட்டணி அமைக்க முன்வருமா?

கலைஞர் :- நீங்கள் எல்லாம் சேர்ந்து “நிருபர்கள் கட்சி” என்று ஒன்று ஆரம்பித்து ஒரு கொடியைப் போட்டுக் கொண்டால் உங்களோடு கூட்டணி அமைப்பதைப் பற்றி பேசலாம்.

செய்தியாளர் :- அரிசி கடத்தல் பற்றி செய்தி வருகிறதே?

கலைஞர் :- அப்படி கடத்துபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதைப் பற்றி நீங்கள் வெளியிடுவதில்லை.

செய்தியாளர் :- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும், சர்வ தேச நாடுகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும், ஐ.நா. சபைக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் கூட இலங்கை அதிபர் நிறைவேற்றவில்லை என்று எல்லோரும் சொல்கிற சூழ்நிலையில் மத்திய வெளி உறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் அவர்கள் உங்களை வந்து பார்த்தார்கள். அதன் தொடர்ச்சியாக ஏதாவது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?

கலைஞர் :- இதே கருத்தை நான் நிருபமா ராவ் அவர்கள் என்னைச் சந்தித்த போது அவர்களிடம் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன்.

அவர்களும் அதை மத்தியிலே உள்ளவர்களிடம் தெரிவித்து நான் கேட்டுக் கொண்டுள்ளவாறு அங்குள்ள நிலவரங்களை அறியவும் - இலங்கை அரசு வழங்கியுள்ள வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப் பட்டிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவும் முயற்சிகளை மேற் கொள்வதாக உறுதியளித்திருக்கிறார்கள். அதற்கான தூதுக் குழு ஒன்று அல்லது தூதுவர் ஒருவர் விரைவில் அனுப்பப்படுவார் என்பதை என்னிடத்திலே உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

செய்தியாளர் :- அந்தத் தூதுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது இடம் பெறுவார்களா?

கலைஞர் :- இல்லை.

செய்தியாளர் :- சில கட்சிகள் தூதுவரை அனுப்புவதை விட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி அங்கேயுள்ள நிலவரத்தை ஆராயலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். வேறு சில கட்சிகள் தூதுவரை அனுப்புவதே தேவையற்ற ஒன்று என்று சொல்லியிருக்கிறார்கள்.

கலைஞர் :- இதற்கு நான் என்ன செய்ய முடியும்? இவைகள் எல்லாம் செய்திகள்


No comments:

Post a Comment