மத்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் 18.08.2010 அன்று மாலை 4.45 மணிக்கு கோபாலபுரம் இல்லம் வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். மாலை 4.50 மணி முதல் 5.45 மணி வரை சந்திப்பு நடைபெற்றது. நிருபமா ராவுடன் தமிழக தலைமை செயலர் ஸ்ரீபதி, பொதுத் துறை செயலர் ஜோதி ஜெகராஜன் உடன் வந்தனர்.
பின்னர் நிருபமா ராவ் கூறியதாவது:
இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை பற்றி முதல்வர் கருணாநிதியுடன் விவாதித்தேன். இலங்கை தமிழர் நிலை குறித்தும், இலங்கை தமிழர் நல்வாழ்வு குறித்தும் மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, போர் முடிந்த பகுதியில் தமிழர்கள் மறுவாழ்வு பற்றியும், மறு குடியமர்வு, புனரமைப்பு நடவடிக்கைகள் பற்றியும் பேசினோம். .எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த பிரச்னையில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் தங்கள் வீடு திரும்ப, இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழர் பகுதியில் விவசாயம் மீண்டும் தொடங்கவும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீண்டும் இயங்கவும் மத்திய அரசு மிக விரிவான திட்டம் செயல்படுத்தப்படும். பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 2.5 லட்சம் வீட்டு உபயோக பொருட்கள் கொண்ட பாக்கெட்டுகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. 50000 வீடுகள் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் முன்மாதிரி திட்டமாக 1000 வீடுகள் கட்டப்படும். சிலர் தங்கள் வீடுகளை பழுது பார்த்து தருமாறும், சிறிய பணிகளை மேற்கொள்ளுமாறும் கோரி வருகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டிற்குள் இந்திய தூதரக அலுவலகம் திறக்கப்படும். அங்கு வாழும் தமிழ் மக்கள் தேவைகளை அறிந்து செயல்பட இந்த அலுவலகம் உதவியாக இருக்கும்.
இலங்கை தமிழர்களுக்கும் தென்னிந்திய தமிழர்களுக்கும் இடையே பாரம்பரிய கலாச்சார தொடர்பு உறவு இருந்து வருகிறது. இந்த தொடர்பு சமீபகாலமாக பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த உறவு மீண்டும் மலர வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்.
தொடர்ந்து, நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
இலங்கைக்கு சிறப்பு தூதர் எப்போது செல்வார்?
அடுத்த மாதம் தொடக்கத்தில் மூத்த அதிகாரி இலங்கை செல்ல இருக்கிறார். அவர் போர் நடந்த பகுதிகள், பாதிக்கப்பட்ட பகுதிகள், தமிழர் வாழும் பகுதிகளுக்கு சென்று மறுவாழ்வு பணிகள், வளர்ச்சிப் பணிகளை பார்வையிடுவார்.
அங்கு இயல்பு வாழ்வு திரும்ப தேவையான நடவடிக்கைகள், மத்திய அரசு இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆராய்வார்.
புனரமைப்பு நடவடிக்கை துரிதமாக நடக்கிறதா?
பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறோம். பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. அண்மையில் ராஜபக்ஷே வந்த போதும் இந்த கருத்து வலியுறுத்தப்பட்டது. மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையும் இந்தியாவும் சுமுகமாக இணைந்து செயல்படுவது மிகவும் அவசி யமாகும்.
இவ்வாறு நிருபமா ராவ் கூறினார்.
No comments:
Post a Comment