கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 23, 2010

என்னை ஏன் தாக்குகிறார்கள்?ரஜினியை ஏன் தாக்குவதில்லை: கலைஞர் பேச்சு


சென்னை அருகே உள்ள பையனூரில் திரைப்பட கலைஞர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக, தமிழக அரசு 96 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி இருக்கிறது.அங்கு `கலைஞர் நகரம்' என்ற பெயரில் பிரமாண்டமான திரைப்பட நகரம் உருவாகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா,இன்று காலை 10 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி பேசினார்.

அப்போது அவர், ’’மழையின் காரணமாக இடம் மாறி இங்கே அமர்ந்து அருமையான சொற்பொழிவுகளை எல்லாம் வாழ்த்துரைகளையெல்லாம் கேட்டு மகிழ்கின்ற வாய்ப்பைப் பெற்று - பையனூரில் நடைபெற்றிருந்தால் என்ன சிறப்பும் சீரும் இருந்திருக்குமோ அந்தச் சிறப்புக்கும், சீருக்கும் எள் முனையளவும் குறையாமல்,

இந்த மண்டபத்தில் இந்த விழா மிகச் சிறப்புற நடைபெற்று - நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

விழாவின் காரணமாக ஏற்பட்ட மகிழ்ச்சி மாத்திரமல்ல; என்னை பொறுத்தவரையில், இன்றைக்குத் திரைப்படத் தொழிலாளர்கள் அவர்களுடைய குடும்பத்தினர் குடியேறி வாழ்க்கை நடத்துவதற்கு 15 ஆயிரம் இல்லங்கள் தயாராகின்ற அத்தகைய ஒரு முயற்சியை மேற்கொண்ட திரைப்படத் தொழிலாளர் சங்கத்தின் நண்பர்கள் - குகநாதன் போன்றவர்கள் இராம நாராயணன் போன்றவர்கள் - அவர்கள் எடுத்த முயற்சிக்கு கிடைத்த இந்த வெற்றியை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடவே விரும்புகிறேன்.

திரைப்படத் துறையில் இன்று நேற்றல்ல; ஏறத்தாழ 60 ஆண்டு காலத்திற்கு மேலாக கலைத் துறையிலே ஈடுபாடு கொண்டவன் நான்.


ஒரு பட்டிமன்றம் கூட நடைபெறுவது உண்டு. “கருணாநிதிக்கு கலைத் துறையினால் பெயரா? அரசியல் துறையால் பெயரா?” என்றெல்லாம்கூட பட்டிமன்றம் நடத்துவார்கள்.

நான் அந்த பட்டிமன்றத் தலைவரைப் பார்த்து சொல்லும் போது, “நீங்கள் தீர்ப்புக்கு ஒன்றும் திண்டாடத் தேவையில்லை. கலையும், அரசியலும் கலந்ததால் ஏற்பட்டது தான் கருணாநிதிக்கு இந்தப் பெயர் என்று சொல்லி பட்டிமன்றத் தீர்ப்பை வழங்கி விடலாமே” என்று நான் சொல்வது உண்டு.

அரசியலிருந்து கலைத் துறைக்கு வந்தவனா அல்லது கலைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவனா என்ற கேள்விக்கு இன்னும் பல பேருக்குப் பதில் தெரியவில்லை. பதில் கிடைக்கவில்லை என்று சொல்லமாட்டேன்.

கிடைத்தாலும் சொல்லத் தெரியவில்லை பல பேருக்கு. அந்த வகையில், கலை, அரசியல் இரண்டையும் நாம் வெவ்வேறாகப் பார்க்காமல், கலையை எந்த அளவுக்கு அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டுமோ அந்தளவிற்குப் பயன்படுத்தி, அதன் காரணமாக அரசியலில் பல வெற்றிகளைப் பெறுவதற்கு நானும், என்னுடைய இயக்கமும் காரணமாக இருந்திருக்கிறோம்.


ஆனால், இதிலே எங்களுடைய வளர்ச்சியை மாத்திரம் பார்க்காமல், இந்தத் துறையிலே இருந்து வியர்வை வடிக்கின்ற தொழிலாளர்கள், பாடுபடுகின்ற பாட்டாளிகள் அவர்கள் வாழ வேண்டும்.

அவர்கள் வாழ்வதற்குத் தேவையான ஒரு குடியிருப்பைக்கூட அவர்களுக்கு நம்மால் செய்து தரமுடியவில்லை என்றால், வேறு எப்படித் தான் அவர்களை நாம் வாழ வைக்க முடியும் என்று எனக்கு ஏற்பட்ட கவலை; ஒன்றல்ல, இரண்டல்ல; பல ஆண்டு காலமாக என்னுடைய மனதை வருத்திக் கொண்டே இருந்தது. பெரிய ஆடம்பரமான வீடுகளைக் கட்டுகிறார்கள், எங்கே? ஸ்டுடியோக்களில். ஆடம்பரமான மாளிகைகள் அமைக்கிறார்கள், எங்கே? ஸ்டுடியோக்களில். ஆடம்பரமான பாலங்களைக் கட்டுகிறார்கள், அணைகளைக் கட்டுகிறார்கள், எங்கே? யார் கட்டுவது? படத் துறையிலே இருக்கிற தொழிலாளர்கள். அவைகளெல்லாம் எதற்காக? படக் காட்சிகளுக்கு கட்டப்படுகின்றவை. ஆனால், அந்த இடங்களில் அவர்களால் வாழமுடிகின்றதா? வாழக்கூடிய தகுதியோ, வாய்ப்போ அவர்களுக்குக் கிடைக்கிறதா என்றால், அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

அப்படிக் கிடைக்காத காரணத்தினால்தான், நம்முடைய திரைப்படத் தொழிலாளர்கள், தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அந்தத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கோரிக்கையை வைத்து இந்த அரசு இதை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டார்கள். இந்த அரசிடத்தில் திரைப்படத் துறையின் மூலமாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஒன்று, இரண்டல்ல; வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் முடிந்த வரையில் நிறைவேற்றி வைத்துள்ள அரசு தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை நான் இங்கே மிகுந்த பெருமையோடு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

நம்முடைய படத் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புக்கான கட்டணங்கள் மிக அதிகமாக இருக்கின்றது, நாங்கள் வெளிப்புறப் படப்பிடிப்புக்குச் சென்றால், மிக அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது, ஆகவே படத்தயாரிப்புக்கான செலவு அதிகமாக ஆகிறது, அதை நீங்கள் குறைத்துத் தர வேண்டுமென்று கேட்டபோது, நான் எவ்வளவு என்று அதை ஆராய்ந்தபோது, தொல்பொருள் ஆய்வுத் துறையின்கீழ் உள்ள கலைச் சின்னங்கள் இருக்கின்ற இடங்களுக்குச் செலுத்தி வந்த படப்பிடிப்புக் கட்டணம் ஓர் இடத்திற்கு ஒரு நாளைக்கு 5000 ரூபாய் என்று இருந்தது. அதை 1000 ரூபாய் என்று குறைத்து ஆணை பிறப்பித்தேன். ஏனைய இடங்களுக்கு 2500 ரூபாய் என்பதை 1996ஆம் ஆண்டு 500 ரூபாய் என்று குறைத்து உத்தரவிடப்பட்டது.

இராஜாஜி மண்டபம் இருப்பது உங்களுக்குத் தெரியும். இப்போது கட்டப்பட்டு முடிவடைகின்ற தருவாயில் இருக்கின்ற புதிய தலைமைச் செயலக, சட்டமன்ற வளாகம் இருக்கிறதே, அதற்குப் பக்கத்திலே இருக்கின்ற ராஜாஜி மண்டத்தில் படப்பிடிப்பு என்றால், தி.மு. கழக ஆட்சியில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று இருந்தது.

ஆனால் 2003ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சியிலே இல்லை. வேறு எந்த ஆட்சி இருந்தது என்று நான் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் அரசியல் ஆகி விடும். தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் ராஜாஜி மண்டபத்தில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்றிருந்த படப்பிடிப்புக் கட்டணம் - 2003இல் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் ரூபாய் என்று உயர்த்தப்பட்டது.

கேட்டால் இரண்டு பூஜ்யங்கள் தானே அதிகம் என்று சொல்வார்கள். 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி ஏற்பட்ட பிறகு, அந்த ஒரு இலட்சம் ரூபாய் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயாகக் குறைத்தார்கள். ஆனால், 2006ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு அந்தக் கட்டணம் நாள் ஒன்றுக்குப் பத்தாயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டது.

படப்பிடிப்பு நடத்தப்படும் அவுட் டோர் இடங்களில், வகை - 1 என்ற பிரிவில் இடம் பெறும் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் என்று விதிக்கப்பட்டிருந்த கட்டணத்தை, 5 ஆயிரம் ரூபாய் என்றும் - ஐயாயிரம் ரூபாய் என்று விதிக்கப்பட்டிருந்த கட்டணத்தை, 3 ஆயிரம் ரூபாய் என்றும் தி.மு. கழக ஆட்சிக் காலத்திலே குறைத்தோம்.

இவ்வளவிற்கும் பிறகும் நம்முடைய படத் தயாரிப்பாளர்கள், திரைப்பட அரங்குகளுக்குச் சொந்தக்காரர்கள் என்னைச் சந்தித்து கேளிக்கை வரியிலே தங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்ட போது - நான் அவர்களிடம் கேட்டேன் - கேளிக்கை வரியிலே நான் உதவி செய்கிறேன் - நீங்கள் எனக்காக என்னுடைய தமிழ் மொழியிலே உதவி செய்ய வேண்டுமென்று கேட்டேன். என்ன என்று கேட்டார்கள். நீங்கள் எடுக்கின்ற படங்களுக்குப் பெயரிடும்போது - தமிழிலே பெயரிட வேண்டும் என்று கூறினேன்.

அப்படி தமிழிலே திரைப்படங்களுக்கு பெயரிட்டால், கேளிக்கை வரியே இல்லாமல் இந்த அரசு உத்தரவிடும் என்று சொன்னேன். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதன் காரணமாக இப்போது அவர்கள் எடுக்கின்ற திரைப்படங்கள் எல்லாம் தமிழ் மொழியிலே தான் பெயரிடப்படுகின்றன. அதன் காரணமாக தமிழ் நாட்டில் கேளிக்கை வரியே இல்லை என்ற ஒரு நிலையை உருவாக்கி யிருக்கிறோம்.

இவைகளையெல்லாம் சொல்லுகின்ற காரணத்தால் ஏதோ சினிமாவுக்கு கருணாநிதி அறுபதாண்டு காலமாக அதிலே இருக்கின்ற காரணத்தால், இவைகளை யெல்லாம் செய்கிறான் என்று யாரும் கருதக் கூடாது. ஏனென்றால் அரசியலில்; “ஒரு அரசு செய்தாலும் குற்றம் - செய்யாவிட்டாலும் குற்றம்! இதுதான் அரசியல்.” நான் அந்த அரசியல் பற்றிய வியாக்ஞானங்களுக்கு அதிகம் செல்ல விரும்பவில்லை. காரணம் இந்த விழா முழுக்க முழுக்க கலைத் துறை நண்பர்களுக்காக, கலைத் துறையிலே தங்களுடைய வியர்வையை வடித்துப் பாடுபட்ட தொழிலாளத் தோழர்களுக்காக நடத்தப்படுகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு விழா.

இந்த விழாவிற்கு வருகின்ற நேரத்தில், காலையில் நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அந்தப் பத்திரிகையிலே ஒரு விகடத் துணுக்கு. என்ன விகடத் துணுக்கு என்றால் - “கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக - கலைஞர் கதை வசனத்தில் - கலைஞர் பேரன் தயாரிப்பில் - கலைஞர் பேரன் இயக்கத்தில் - கலைஞர் பேரன் நடித்த - புத்தம் புதிய திரைக்காவியம் - கலைஞர் டி.வி. யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்” என்று இப்படியொரு விளம்பரம் போன்ற விகடத் துணுக்கு. அந்தப் பத்திரிகையைப் படித்தவர்கள் எல்லாம் இதைக் கண்டிருக்கக் கூடும். “அடடே……!” என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது இது.

என்ன; கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா? அந்தக் குடும்பம் மாத்திரமல்ல. நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவிலே பிரிதிவி ராஜ் கபூர், பிரமாண்டமான நடிகர்.

மாநிலங்களவையிலே எட்டாண்டு காலம் உறுப்பினராக இருந்தவர். நானும் மறைந்த நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், அவருடைய சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி அவர்களும் மைசூரில் “நாம்” திரைப்படத் திற்காக சென்று பணியாற்றிக் கொண்டிருந்த போது - மைசூரில் பிரிதிவி ராஜ் கபூரின் நாடகம் “பதான்” என்ற தலைப்பிலே நடைபெற்றது. அதைக் காண நாங்கள் சென்றிருந்தோம். பிரிதிவி ராஜ் கபூர் நடித்தார். அவர் பல படங்களில் நடித்தார். “அக்பர்” அவர் நடித்த படம் தான்.

நீங்கள் கண்டிருப்பீர்கள். நாங்கள் பார்த்த “பதான்” நாடகத்தில், முக்கிய வேடத்தில் அமர்ந்திருக்கும் அவர், தன்னுடைய மனைவியை அழைத்து இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது - வாய் நிறைய தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டு - சிரிப்பு வந்த காரணத்தால் அடக்க முடியாமல், அதை படுக்கை அறையிலேயே துப்புவார்.


அந்தக் காட்சியை ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் அந்தத் தியேட்டரே அதிரக் கூடிய அளவிற்கு கையொலி செய்து வரவேற்பார்கள். அதை அவ்வளவு பெரிய நடிப்பாக மக்கள் கருதுகின்ற அளவிற்கு - அவ்வளவு பெரிய மகத்தான நடிகர் பிரிதிவி ராஜ் கபூர் - அவருடைய மகன் ராஜ் கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்களவையிலே உறுப்பினராக இருந்தவர் அல்லவா? ராஜ் கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசீ கபூர் அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரந்தீவ் கபூர் இந்தக் கபூர்கள் எல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா? கலைஞர் வீட்டில் மாத்திரம் உதய நிதி, கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது. இதற்காக ஒரு பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை.

ஆனால் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரிதிவி ராஜ் கபூரின் பேரன் பேத்தி கொள்ளுப் பேரன், பேத்தி வரை இருக்கலாம் கலைத் துறையிலே - மற்றவர்களின் இல்லங்களில் இருக்கலாம் - என்னுடைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு இருக்கலாம், பிரபுவின் மகன் துஷ்யந்த்; - அவர் இருக்கலாம், ஆனால் கருணாநிதி மாத்திரம் இருக்கக் கூடாது.

ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அதை ஒழிக்க வேண்டும், அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய நோக்கமே தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்திற்கு வரும்போது, பிரிதிவி ராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். (கைதட்டல்) என் பெயர் ஞாபகத்திற்கு வந்த போது, நம்முடைய ரஜினி அவர்களின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். நான் ஏதோ அவர் மீது கோபத்தாலோ, பொறாமையாலோ இதைச் சொல்லவில்லை.

ரஜினி காந்த் அரசியலிலே முழுக்க முழுக்க இல்லாத காரணத்தால், அவரை விட்டு விடுகிறார்கள். நான் அரசியலிலே முழுக்க முழுக்க இருக்கின்ற காரணத்தால், கலைத் துறையிலே எனக்கு இருக்கின்ற ஈடுபாடு தான் காரணம் என்று சொன்னால், என்னைப் போன்ற அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள், கலைத் துறை நண்பர்களை எப்படி நேசிக்க முடியும்?

கலைத்துறையிலே எப்படி தொடர்பு கொள்ள முடியும்? கலைத்துறையிலே உள்ள யார் எதிர்த்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படாமல், நட்புணர்வும், நேச உணர்வும் கொண்டிருக்கின்ற காரணத்தால் தான் தம்பி பாரதிராஜா இங்கே சொன்னதைப் போல இன்று நேற்றல்ல - ஆண்டாண்டு காலத்திற்கும் அவர்கள் என்னை நினைக்கின்ற அளவிற்கு - நான் அவர்களை நினைக்கின்ற அளவுக்கு அந்த இனிய தொடர்பு எங்களிடத்திலே இழைந்தோடிக் கொண்டிருக்கின்றது. அதை யாரும், எவரும் எந்த வகையிலும் தடுக்க முடியாது என்பதையும் அப்படி தடுக்க முடியாது என்பதற்கு பலமான சுவராகத் தான் பையனூரில் 15 ஆயிரம் பேருக்கான வீடுகள் கட்டப்பட்டு, திறக்கப்பட வுள்ளன என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு அந்த வீடுகளைக் கொடுப்பதற்காக நன்றியறிவிப்பு விழாவாக இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவிலே கேரளத்தில் இருந்தும், ஆந்திரத்தில் இருந்தும், மும்பையிலிருந்தும் வந்து கலந்து கொண்ட தமிழகத்திலே உள்ள கலைத் துறையிலிருந்தும் வந்து கலந்து கொண்ட நண்பர்கள், பெரியவர்கள், அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் பணி இதே முறையில் என்றென்றும் தொடரும் - கலை உலகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரண பெருமகனுக்கு மாத்திரமல்ல – அவர்கள் ஒரு நடிகராக இருந்தாலும் சரி, நடிகராக இல்லாமல் இருந்தாலும் சரி, அவர்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளை நான் என்றென்றும் செய்து கொண்டேயிருப்பேன். அதைத் தான் தம்பி சரத் குமார் இங்கே பேசும்போது குறிப்பிட்டார்.

காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக எவ்வளவு பேர் இன்றைக்குக் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள், அதிலே ஒரு இளைஞரை மருத்துவ மனையிலே தான் கண்ட காட்சியை இங்கே அவர் எடுத்துச் சொன்னார். அதைப் போலவே கலைத் துறையிலே நம்முடைய மம்மூட்டி அவர்கள் ஒரு நாள் சென்னைக்கு தொடர்பு கொண்டு தொலைபேசியிலே என்னிடம் பேசினார். என்ன என்று கேட்டேன். ஒரு செய்தியைச் சொன்னார்.

பிரபல நடிகர் ஹனீபா - கேரளத்தில், கர்நாடகத்தில், ஆந்திராவில், தமிழகத்தில் பல படங்களில் நடித்துப் பெருமை பெற்றவர். அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது, இறந்து விடவும் கூடும், அப்படி ஏதாவது ஆகி விட்டால் எங்கள் ஊர், திருவனந்தபுரத்திற்கு அவருடைய உடலை அனுப்பி வைக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மம்மூட்டி என்னிடம் கேட்டார். சரி, அப்படியே செய்கிறேன் என்று சொல்லி விட்டு, ஏதோ, எவரையோ அனுப்பச் சொல்லி யாரிடமோ சொல்லி விட்டு அப்படியே விட்டு விடவில்லை. அனுப்பி ஆயிற்றா என்று கேட்டும்,

அதற்குப் பிறகும் வந்து சேர்ந்ததா என்று மம்மூட்டிக்கு போன் செய்து கேட்டும் - அந்த அளவிற்கு ஒரு கலைத் துறையிலே உள்ள நண்பரின் கஷ்டங்களைப் பற்றி, உணர்ந்தவன், அதிலே என்னை இணைத்துக் கொண்டவன், என்றைக்கும் மனித சமுதாயத்திலே யாருக்கு என்ன ஊறு நேருகிறதோ, யாருக்கு எந்தக் கேடுபாடு வரினும் அவற்றில் என்னையும் இணைத்துக் கொண்டு - அவைகளை நீக்குவதிலே முதல் ஆளாக நான் இருப்பேன்.

தமிழகத்திற்கு மாத்திரம் முதல்வர் அல்ல - இந்தத் தயவுதாட்சண்யங்களிலும் நான் முதல் ஆளாக இருப்பேன் என்று குறிப்பிட்டு உங்களுடைய அன்புக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்

No comments:

Post a Comment