அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்திய மருத்துவக் குழுமம் அளித்துள்ள பரிந்துரையின் பேரில் மத்திய அரசு வரும் 2011&2012 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்த போது தெரிவித்துள்ளது.
கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தொழில் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வினை 2007&2008ம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது.
இதனால், சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அத்துடன் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் விரும்பிப் பணியாற்றும் நிலை விரைவில் ஏற்படும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை மாநிலங்களின் கல்வி முறையை நிர்வகிப்பதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாக கருதப்படுகிறது. மேலும், இந்த முறையால் மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையில் ஒரு குழப்பநிலையை உருவாக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் முறையைப் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ள புதிய முறையினால் இந்த இடஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த இயலாத நிலை ஏற்படும். எனவே, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி சேர்கையில் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க இயலாது.
தமிழக அரசு சமூக நீதி கோட்பாடுகளை நடை முறைப்படுத்தி வரும் மாநிலம் என்பதால் இந்த முறை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன்களைப் பாதிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே, தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்து ஒரு நல்ல முடிவு எடுக்குமாறு பாரத பிரதமர், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர்களை கேட்டுக் கொண்டு முதல்வர் கருணாநிதி நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment