கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 27, 2010

கலெக்டர்கள் மாநாடு: கலைஞர் பேச்சு



தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5-வது ஆண்டு நடந்து வரும் நிலையில், மாவட்ட கலெக்டர்களின் 2 நாள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது.

பழைய தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

காலை 9.30 மணிக்கு மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி வரவேற்புரை ஆற்றினார். 9.35 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி மாநாட்டை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார்.

அப்போது அவர், ‘’

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே!

தலைமைச் செயலாளர் அவர்களே!

அரசு உயர் அலுவலர்களே!

மாவட்ட ஆட்சித் தலைவர் களே! நண்பர்களே!

அனைவருக்கும் எனது வணக் கம்.

2006-இல் ஆட்சிப் பொறுப்பேற்றதுமுதல், கடந்த நான்கு ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் வாய்மையுடன் நிறைவேற்றி - வாக்குறுதியில் இடம் பெறாத பல புதிய திட்டங்களையும் உருவாக்கி தமிழக மக்களின் மனமார்ந்த பாராட்டுகளை இந்த அரசு தொடர்ந்து பெற்று வருகிறது என்பதனை நானும், நீங்களும் நன்கு அறிவோம்!

இந்தப் பணிகள் மேலும் தொடரவேண்டும்; அதற்குரிய வகையில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் மக்களுக்கு எந்தெந்த வகையில் பயன் அளிக்கின்றன; அவை, மேலும் பயனளித்திட எந்தெந்த வகையில் செயலாற்றிட வேண்டும்; இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை எப்படி குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்றிட வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்வதற்கும்; அதில் கள அனுபவங்களோடு நீங்கள் வழங்கும் ஆலோசனைகளைக் கேட்டு அறிவதற்கும் வாய்ப்பாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம், எரிவாயு இணைப்புடன் அடுப்புகள் வழங்கும் திட்டம், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டம், வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம் என்பன போன்ற திட்டங்களையெல்லாம் எப்படி இவர்களால் தொடர்ந்து செயல்படுத்த முடியும் - என்று அய்யப்பாடு எழுப்பியோரை எல்லாம் புறந்தள்ளி, மக்கள் பணியே மகேசன் பணி என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, அந்தத் திட்டங்களை எல்லாம் வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறோம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, கோவை மாநகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். பல இலட்சம் மக்கள் கூடிய அந்த மாநாட்டில் அனைத்துப் பணிகளையும் மிகச் சிறப்பாக மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரையும் மனமாரப் பாராட்டுகிறேன்.

ஆதிதிராவிடர் சமுதாய மேம்பாட்டில் சிறப்புக் கவனம் செலுத்திவரும் இந்த அரசு, இதுவரை இல்லா அளவில் 2010-2011ஆம் நிதியாண்டில், ஆண்டுத் திட்ட மொத்த நிதியில்,

19 விழுக்காட்டிற்கும்மேல் 31 ஆயிரத்து 828 கோடி ரூபாயை ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கீடு செய்து, பல சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஒதுக்கப்பட்ட தொகை முழுதும் ஆதிதிராவிடர் நலனுக்காகச் செலவழிக்கப்பட வேண்டும் என்பது இந்த அரசின் குறிக்கோளாகும்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியையும், குறைந்த விலையில் மளிகைப் பொருள்களையும் வழங்கி மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே என்ற பெருமையை நாம் பெற்றுள்ளோம்.

இச்சூழ்நிலையில், நியாய விலைக் கடைகள் பொதுமக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்திடும் வண்ணம் மேலும் நேர்த்தியான முறையில் செயல்படுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முழு ஈடுபாட்டுடன், ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தின்கீழ் ஒரு கோடியே
52 இலட்சத்து 80 ஆயிரம் பெட்டிகள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 35 இலட்சத்து 86 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எல்லோர்க்கும் தொலைக் காட்சிப் பெட்டிகளை வழங்கி; வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலக்கை நிறைவேற்றிட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டுமென விரும்புகிறேன்.

உடல் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வேலை செய்து வரும் விவசாயத் தொழிலாளர்களுக்கான நல வாரியம் உட்பட 32 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 7 இலட்சத்து 6 ஆயிரத்து 375 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, 18 இலட்சத்து 20 ஆயிரத்து 326 அமைப்பு சாராத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சுமார் 855 கோடியே 43 இலட்சம் ரூபாய் பல்வேறு நலத்திட்டங்களின்கீழ் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லை எனும் நிலையை உருவாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதிலும் உள்ள 21 இலட்சம் குடிசைகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றிடும், ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தில், முதற்கட்டமாக இந்த நடப்பு நிதியாண்டில் ஒரு பயனாளிக்கு 75 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய்ச் செலவில் 3 இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளது. முழுவதும் மாநில அரசின் நிதியில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து
12 ஆயிரத்து 618 ஊராட்சிகளிலும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த மகத்தான திட்டத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மிகுந்த முன்னுரிமை அளித்து, முனைப்புடன் செயலாற்றி 3 இலட்சம் கான்கிரீட் வீடுகளையும் 31.3.2011க்குள் கட்டி முடித்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடியிருப்பும் மத்திய அரசு வழங்கும் 33,750 ரூபாயுடன் தமிழக அரசு வழங்கும் 26,250 ரூபாயையும் சேர்த்து இதுவரை 60 ஆயிரம் ரூபாய்ச் செலவில் கட்டப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ், ஒரு குடியிருப்புக்கு தமிழக அரசு வழங்கும் நிதி 26,250 ரூபாய் என்பதில், மேலும் 15,000 ரூபாய் கூடுதலாகச் சேர்த்து இனிமேல் 41,250 ரூபாயாக வழங்கிட தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின்கீழ்; ஒவ்வொரு குடியிருப்பையும் இனி 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் 2,514 ஊராட்சிகளில் 507 கோடியே 82 இலட்சம் ரூபாய்ச் செலவில் இத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இத்திட்டத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ள அனைத்துப் பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றிட மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நிதியாண்டின் இறுதியில் இத்திட்டம் நிறைவுறும்பொழுது, நாட்டிலேயே ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு நூலகம் மற்றும் ஒரு விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்த ஒரே மாநிலம் என்ற பெருமையினைத் தமிழ்நாடு பெறும் என்பதை நினைவில் கொண்டு இத்திட்டப் பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டுகிறேன்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் தொடர்ந்து பணிகள் வழங்கிடுவதையும், தொழிலாளருக்குரிய வாராந்திர ஊதியத் தொகையில் - குறைபாடுகளின்றிச் சரியாகவும், தாமதமின்றியும் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சியர்கள் இடைவிடாது கூர்ந்து கண்காணித்திட வேண்டுகிறேன்.

நிலவரி, நன்செய் நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50 ரூபாய் என்று இருந்ததை 5 ரூபாய் என்றும், புன்செய் நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ரூபாய் என்று இருந்ததை 2 ரூபாய் எனவும், இந்த அரசு குறைத்ததால் 2009 சூலை முதல் ஏறத்தாழ 50 இலட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.

செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பம் நெல் உற்பத்தித் திறனை 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. எனவே, இத்தொழில்நுட்பத்தை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி அதிக பரப்பில் செம்மை நெல் சாகுபடி மேற்கொள்ளத் தேவையான அனைத்து முயற்சிகளையும் ஊக்கப்படுத்திட வேண்டுகிறேன்.

தென்னிந்திய தென்னைச் சாகுபடியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளையேற்று தென்னை விவசாயிகள் நல வாரியம் அமைக்கப்படுமென்றும், தென்னை விவசாயத்தை தோட்டக் கலைத் துறையின் கீழ் சேர்க்கப்படும் என்றும், விவசாயிகளிடமிருந்து உரித்த தேங்காயைக் கொள்முதல் செய்வது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருக்கிறேன்.

இவற்றின் மீது தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஏழை எளிய மக்களுக்கு உயிர்காக்கும் உயர் சிகிச்சைகளை உடனடியாக அளித்திடும், ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ 23.7.2009 அன்று தொடங்கப்பட்டது. 19-8-2010 முடிய இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1 கோடியே 33 இலட்சத்து 60 ஆயிரத்து 439 குடும்பங்களில் இருந்து; ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 273 ஏழை மக்களுக்கு 415 கோடியே 47 இலட்சம் ரூபாய்ச் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளைச் செய்து சாதனை படைத்துள்ளது இந்த அரசு.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய சமூகநலத் திட்டங்களில் வழங்கப்படும் நிதியுதவியை 1.4.2010 முதல் 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இந்த அரசு. 2006-2007 முதல் இந்நாள் வரை பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் மொத்தம் 4 இலட்சத்து 27 ஆயிரத்து 787 பெண்களுக்கு 663 கோடியே 76 இலட்சம் ரூபாய் திருமண நிதியுதவி வழங்கியதோடு, நடப்பு ஆண்டிற்கு மேலும் 300 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை எளிய பெண்களின் வாழ்வு மலர வழிவகுக்கும் இத்திட்டங்களின் மூலம் உரிய நிதி, முழுவதும் -குற்றங்குறைகளுக்கு இடமில்லாமல் உரிய நேரத்தில் உரியவர்களுக்கு வழங்கப்பட விழிப்போடு செயலாற்றிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

எனது சிந்தையில் எப்பொழுதும் நிறைந்திருப்பது மக்கள் நலப் பணிகள் மட்டும் தான். ஒவ்வொரு நொடிப் பொழுதையும் மக்கள் நலனுக்காகவே நான் செலவழித்து வருகிறேன். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் - கிராமத்தில் பிறந்தவராயினும், நகரத்தில் பிறந்தவராயினும், அவர் - எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்று வாழ வேண்டும்; அவர்கள் அப்படி வாழ்ந்திடத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றையும் அவர்களுக்கு அளித்தாக வேண்டும் என்பதுதான் இந்த அரசின் குறிக்கோள்.

அதற்கேற்ப, கடந்த நான்காண்டுகளில் தமிழக அரசு செயல்படுத்திவரும் சமூக நலத் திட்டங்களால் மனிதவளக் குறியீட்டில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு நலத்திட்ட உதவியைப் பெற்று மகிழ்ந்துள்ளது என்பது இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கும் நற்சான்றிதழ் ஆகும்.

உணவு உற்பத்தி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. தொழில் துறை, சிறுதொழில் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறோம்.

இவை காரணமாக, தமிழகத்தை மத்திய அரசு பாராட்டுகிறது. உச்சநீதிமன்றம் பாராட்டுகின்றது; அயல்நாட்டுப் பிரதிநிதிகள் பாராட்டுகிறார்கள்; அண்டை மாநில அரசுகள் பின்பற்றுகின்றன. இந்தப் பாராட்டுகளையெல்லாம் தொடர்ந்து நாம் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்த அளவுக்கு நம்முடைய பணியை மேற்கொள்ளத் திட்டமிடும் நிகழ்வாக இந்த மாநாடு அமைய வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்து, மாநாட்டை தொடங்கி வைத்து, உங்களுடைய ஆலோசனைகளை எதிர்நோக்கி அமைகிறேன்’’என்று பேசினார்.





No comments:

Post a Comment