தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயர வைகை அணை அமைந்துள்ளது.
இந்த அணையின் மூலம் மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 8 ஏக்கர் நிலங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 1,996 ஏக்கர் நிலங்களும் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 39 ஏக்கர் நிலங் களும் என மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரத்து 43 ஏக்கர் நிலங்கள் ஒரு போக பாசனவசதி பெறும்.
ஆண்டு தோறும் இந்த 3 மாவட்ட விவசாய பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து செப்டம்பர் மாதம் தண்ணீர் திறப்பது வழக்கம் ஆகும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் வைகை அணையில் இருப்பு இல்லாததால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனிடையே வைகை மற்றும் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, மத்திய மந்திரி மு.க.அழகிரி, வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சருக்கு பரிந்துரை செய்தார். இதனை அடுத்து, வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,800 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து, வைகை அணையில் இருந்து நேற்று காலை 8 மணியளவில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 3 மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணை மதகை, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி பொத்தானை திறந்து வைத்தார்.
இதனை அடுத்து 5 சிறிய மதகுகளில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்தது. அந்த தண்ணீரில், அமைச்சர் தமிழரசி மலர்களை தூவினார்.
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 45 நாட்களுக்கு தண்ணீர் தொடர்ந்து விடப்படும். அதன்பிறகு பருவமழை தவறி பெரியாறு அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லை என்றால், நீர் இருப்பை கணக்கில் கொண்டு முறைப்பாசனம் தேவைக்கு ஏற்ப அமல் படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment