திருவாரூர் மாவட்ட வேளாண்மை விற்பனை குழு தலைவராக இருப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் அண்ணன் ஆவார்.
தட்சிணாமூர்த்தியின் மனைவி தனம் அம்மாள் கடந்த மாதம் 23-ந்தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கோவில் திருமாளத்தில் காலமானார். அவரது உருவப்பட திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள முதலமைச்சர் கருணாநிதி சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு புதுச்சேரி, கடலூர், வழியாக சிதம்பரத்துக்கு நேற்று முன்தினம் (09.10.2010) இரவு வந்தார். அங்கு பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
நேற்று (10.10.2010) காலை அங்கிருந்து முதலமைச்சர் கருணாநிதி, காரில் புறப்பட்டு கொள்ளிடம், மயிலாடுதுறை வழியாக கோவில் திருமாளத்துக்கு வந்தார். அங்கு, தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர். கருணாநிதியை வர வேற்றனர். வீட்டு
முன்பு தி.மு.க. கொடியை கருணாநிதி ஏற்றி வைத்தார்.
முதல்வர் கருணாநிதி தமது மைத்துனர் கோயில் திருமாகாளம் கோ. தட்சிணாமூர்த்தியின் துணைவியார் - மறைந்த தனம் அம்மையாரின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
அவர், ‘’இப்படியொரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு விரைவில் - இவ்வளவு குறுகிய இடைக்காலத்தில் நான் வருவேன் - இதை நடத்தி வைப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால், மறைந்த என்னுடைய அருமைத் தங்கை தனம் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்து, வீட்டுப் பணிகளை ஆற்றியது மாத்திரமல்ல; நாட்டுப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற என்னுடைய மைத்துனர் தட்சிணாமூர்த்தி போன்றவர்களை ஊக்கப்படுத்துகின்ற அந்த வகையிலும், அருந்தொண்டாற்றிக் கொண்டிருந்தவர்.
அவருடைய மறைவு - அந்தச் செய்தியை - படுத்து தூங்கிக் கொண்டிருந்த எனக்கு விடியற்காலையிலே என்னை எழுப்பி என்னுடைய துணைவியார் சொன்னபோது, சிறிது நேரம் அதனை என்னால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால், சிலநேரங்களில் நம்பமுடியாதவைகள் நடந்து விடுகின்றன. அப்படி நடந்த நிகழ்ச்சி தான், தனம் அவர்களுடைய மறைவு நிகழ்ச்சி.
இங்கே எனக்கு முன்னால் பேசியவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல, மறைவதும், பிறப்பதும் உலகில் இயற்கையானவை என்றாலும்கூட, வள்ளுவர் சுட்டிக்காட்டி யிருப்பதைப்போல,
“நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு ”
என்பதுபோல, நேற்று இருந்தவர் இன்றைக்கு இல்லை என்பதுதான் இந்த உலகத்திற்குப் பெருமை என்று உலகினுடைய பெருமையை எடுத்துச் சொல்வதைப் போல, அந்தத் துக்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.
அத்தகைய ஒரு சோக நிகழ்ச்சி என்னுடைய மைத்துனர் தட்சிணாமூர்த்தி அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்று - அவர் ஒரு பெருந்துணையை இழந்துள்ள இந்தச் சூழலில், படமாகிவிட்ட திருமதி தனம்மாள் அவர்களுடைய புகழை நாம் போற்றுவதும், அவர் மூலமாக இந்த வட்டாரத்திலுள்ள பெண்மணிகள் மாத்திரமல்ல; நாட்டிலுள்ள எல்லாப் பெண்மணிகளும், தமது கணவரையும் போற்றி, குடும்பத்தையும் போற்றி - இவர்களெல்லாம் உள்ளிட்ட இந்தச் சமுதாயத்தினுடைய முன்னேற்றத்திலும் பங்கு கொண்டு, அந்த முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகின்றவர்களுடைய உழைப்பிற்கு மரியாதை செய்து, அதிலும் பங்கு பெற்று வாழ்வதுதான் சிறப்பான வாழ்வு. அந்தச் சிறப்பான வாழ்வை வாழ்ந்து காட்டியவர் குடும்பம், இந்தக் குடும்பமாகும்.
என்னுடைய திருமணத்திற்காக என்னுடைய உறவினர்கள் பெண் பார்த்தபோது, தட்சிணாமூர்த்தி அவர்களுடைய தங்கையைக் குறிப்பிட்டு என்னிடத்திலே சொன்னார்கள்.
நான் உடனடியாக அதற்கு ஒத்துக்கொண்டதற்குக் காரணமே, மிகமிகச் சாதாரண ஒரு குடும்பம், நடுத்தரக் குடும்பத்திற்கும் அடுத்த நிலையிலே உள்ள ஒரு குடும்பம் - அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலே இருக்கிற பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டால் தான், வாழ்க்கையிலே மோதுதல் இல்லாமல், நிம்மதியாக வாழ்க்கையை நடத்த முடியும் என்பதற்காகத்தான், அதனை ஏற்றுக்கொண்டு, நான் தட்சிணாமூர்த்தி அவர்களிடத்திலே அதைப்பற்றிப் பேசி - எனக்கு ஒரு மாப்பிள்ளைத் தோழனாக திருவாரூரிலே இன்னொரு தட்சிணாமூர்த்தி - தென்னன் - அந்தத் திருமணத்திற்கு ஏற்பாடுகளைச் செய்து, 1948 ஆம் ஆண்டு அந்தத் திருமணம் நடந்தது.
அதற்குப் பிறகு திருவாரூரிலே உள்ள என்னுடைய குடும்பம் சேலத்திற்குச் செல்லவும் கோவைக்குச் செல்லவும், இறுதியாக சென்னை மாநகரத்திலே குடியேறவுமான ஒரு சூழ்நிலை ஏற்பட்ட போதுதான், இங்கே பேசிய நண்பர்கள் எடுத்துக்காட்டியதைப்போல, நான் பல பதவிகளில் அமர்ந்திருந்த வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் கூட - தங்கள் குடும்பத்தினுடைய வளத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல், எப்படி எனக்கு மைத்துனரான போது இருந்தாரோ, அந்த நிலையிலேயே இருந்து எத்தகைய உயர்வும் தனக்குத் தேவை என்று கருதாமல், அதே சூழ்நிலையில் இந்த இயக்கத்திற்குப் புகழ் சேர்க்கும் வகையிலே, இந்த வட்டாரத்திலே உள்ளவர்களுடைய அன்பை, மதிப்பைப் பெற்று - அப்படிப் பெற்ற மதிப்பையும் அன்பையும் இயக்கத்திற்காகச் செலவிட்டு, அதன்மூலமாக எனக்கும் பெருமை சேர்த்துள்ளவர் தட்சிணாமூர்த்தி அவர்கள்.
அவருடைய அருமைத் துணைவியாராக வாழ்ந்து - என்னுடைய அன்புத் தங்கையாகத் திகழ்ந்து, இன்றைக்கு மறைந்து படமாகிவிட்ட தனம் அம்மாள் அவர்களோடு - அவர் நடத்திய வாழ்க்கையும் - நான் திருவாரூருக்கு வரும்போதெல்லாம் - சென்னைக்கு அவர்கள் வரும்போதெல்லாம் - என்னைக் காணும்போது, அவர்கள் சிந்திய பாசஉணர்வும், அவர்கள் கொட்டிய அன்பும் என்றைக்கும் மறைக்க முடியாதவையாகும்.
அத்தகைய ஒரு மாசற்ற மாணிக்கத்தை - என்னுடைய அருமை மைத்துனர் தட்சிணாமூர்த்தி அவர்கள் இழந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதை நானும் உணர்கிறேன்.
இருந்தாலும்கூட, துன்ப துயரங்களை துடைத்துக் கொள்வதும், தொடர்ந்து மற்ற அலுவல்களைப் பார்ப்பதும்தான் இந்த இயக்கத்திலே உள்ளவர்கள் கடைப்பிடிக்கக்கூடிய ஒரு நல்ல நிலை என்பதை தந்தை பெரியார் அவர்களும், அவருக்கு அடுத்து அறிஞர் அண்ணா அவர்களும், நமக்கு உணர்த்திச் சென்றிருக்கிறார்கள்.
எனவே, அவ்வழியில் நம்முடைய தட்சிணாமூர்த்தி அவர்கள் நடந்து, கொள்கைப் பற்றோடு, கொள்கை உறுதியோடு வாழ வேண்டும், நீண்ட காலம் வாழ வேண்டும். அவருடைய பிள்ளைகள் எல்லாம், பேரன், பேத்திகளெல்லாம் - நான் இங்கே வந்ததும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னைச் சந்திக்கிறார்கள்.
அப்படிச் சந்திக்கின்ற அந்தப் பேரப் பிள்ளைகள், கொள்ளுப் பிள்ளைகள் அவர்களையெல்லாம் நான் பார்த்தபோது, அவர்கள் என்னிடத்திலே காட்டிய அன்பை எண்ணும்போது, “இவ்வளவு இடைக்காலத்திலே அவர்களைச் சந்திக்காமல் இருந்து விட்டோமே’’ என்ற அந்த உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது.
இங்கே இந்த கிராமத்திற்கு வந்து அவர்களுடைய வீட்டிலே உணவருந்திச் செல்லவோ அல்லது விருந்து அருந்திச் செல்லவோ கூட எனக்கு வாய்ப்பில்லை. ஒருமுறை நானும், இரண்டு, மூன்று தோழர்களும், எனது மைத்துனரின் அழைப்பின்பேரில், இங்கே வந்து அவருடைய இல்லத்திற்குள் நுழைந்ததுதான் தாமதம். சுமார் 500 பேர் கழகத் தோழர்களும், இந்த வட்டாரத்து மக்களும் உள்ளே வந்து விட்டார்கள்.
எங்களுக்கு விருந்துக்காக வைக்கப்பட்ட அந்தத் தட்டுக்களையெல்லாம் அவர்கள் தூக்கிக் கொண்டு - சிலர் பேர் கையிலும், சில பேர் தலையிலும் வைத்துக் கொண்டு வெளியே ஓடிச் செல்ல நேரிட்டது. அவர் எங்களைத் தேடி அலைந்து, பிறகு நாங்கள் இங்கேயிருக்கிறோம் என்று சொல்லி, அப்படிப்பட்ட ரகளையெல்லாம் நடைபெற்றது - கலவரமாக அல்ல - களிப்பாட்டம். அந்த அளவிற்கு இந்த வட்டாரத்திலே உள்ள கிராம மக்கள் எங்களிடத்திலும், இந்தக் குடும்பத்தினரிடத்திலும் அன்பு வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அன்பான சூழ்நிலையில் வளர்ந்து,
வாழ்ந்த என்னுடைய தங்கை தனம் அம்மாள் அவர்கள் - இன்றைக்குப் படமாகி ஆகிவிட்ட இந்த நிகழ்ச்சி எனக்கு தாங்கமுடியாத வேதனையைத் தருகின்றது என்றாலும்கூட; தாங்கித்தான் தீரவேண்டுமென்கின்ற உறுதியோடு, அதனைத் தாங்கிக்கொண்டு, என்னைப்போலவே, நம்முடைய தட்சிணாமூர்த்தி அவர்களும் இந்தச் சோகத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும் - குடும்பத்திற்காக, குழந்தை குட்டிகளுக்காக, பேரன் பேத்திகளுக்காக, நமக்காக - என்று இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன், வணக்கம்’’என்று பேசினார்.
No comments:
Post a Comment