About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Wednesday, October 20, 2010
தி.மு.க. அரசின் மக்கள் நலத் திட்டங்கள் (1967-2010)
தமிழகத்தில் 40 ஆண்டுகாலம் தொடர்ந்து நீடித்த காங்கிரஸ் ஆட்சி 1967-ல் முடிவுக்கு வந்தது. அந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) 138 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துது. அக் கட்சியின் பொதுச்செயலாளரான அறிஞர் அண்ணா (சி.என்.அண்ணாதுரை) முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி முதன்முறையாக ஆட்சி அமைத்த வரலாற்று சாதனை தி.மு.கவின் மூலமாகத் தமிழகத்தில் நடந்தது.
"மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப் பட்டு வந்த தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி , ஆங்கிலம் தமிழ்- உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இனி தமிழ்நாடுதான் என்ற தீர்மானத்தை 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் அண்ணா. நடைமுறைக்கு வந்த இச் சட்டத்தின் மூலம் இந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரினைப் பெற்றது.
வடமொழியான சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லிலி புரோகிதரால் நடத்தி வைக்கப்படும் இந்து திருமண முறையானது தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானது என்பது திராவிட இயக்கங்களின் கொள்கையாகும். அதனால் சீர்திருத்த முறையிலான சுயமரியாதை திருமணங்களை பெரியார் நடைமுறைப்படுத்தி வந்தார். இந்தத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அண்ணா ஆட்சிக்காலத்தில் 1967-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட ஏற்பளிக்கும் சட்ட முன்வடிவை அப்போதைய சட்ட அமைச்சர் மாதவன் தாக்கல் செய்தார். பின்னர் சுயமரியாதை திருமணச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
திராவிட இயக்கக் கொள்கையின் அடிப் படையில் அறிஞர் அண்ணா கொண்டு வந்த மற்றொரு முக்கியமான சட்டம் இருமொழிக் கொள்கை. தமிழகப் பள்ளிகளில் கட்டாய இந்தியை அகற்றிவிட்டு, தமிழ்-ஆங்கிலம் எனும் இருமொழிகளே நீடிக்கும் எனும் தீர்மானத்தை 23-1-1968 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். தமிழகத்தில் இன்றுவரை இந்த இருமொழிக் கொள்கையே நீடிக்கிறது. இந்தியைத் திணித்து தமிழை பின்தள்ளும் முயற்சிகளைத் தடுக்கவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்ணாவின் அமைச்சரவையில் போக்கு வரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்ச ராக பொறுப்பு வகித்து வந்தார் கலைஞர் மு.கருணாநிதி. அதுவரை தனியார் வசம் இருந்த பேருந்துகள் முதன்முறையாக நாட்டுடைமையாக்கப்பட்டன. இந்தியாவில் முதன்முறையாக பேருந்துகள் நாட்டுடைமை யாக்கப்பட்டது தமிழகத்தில்தான். இதன் காரணமாக, மக்களின் தேவையையும் அவசியத் தையும் உணர்ந்து கிராமப்புறங்கள் உள்பட பல வழித்தடங்களிலும் பேருந்துகள் இயங்க ஆரம்பித்தன.
ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசித் திட்டம், புன்செய் நிலங்களுக்கான வரி ரத்து, குடிசைவீடுகளுக்கு தீ பிடிக்காத கூரை உள்ளிட்டவை அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களாகும்.
1969-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக கலைஞர் மு.கருணாநிதி பொறுப்பேற்றார். 1969 முதல் 1971 வரையிலும் முதல்வராகப் பொறுப்பு வகித்த கலைஞர், அதன் பிறகு நடந்த தேர்தலிலும் பெருவெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். 1971 முதல் 1976 வரை இரண்டாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்தார். 1969 முதல் 1976 வரையிலான அவரது ஆட்சிக் காலத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
மனிதர்களை மனிதனே இழுத்துச் செல்லும் வகையிலான கைரிக்ஷாக்கள் அப்போது அதிகளவில் இருந்தன. இப்படி இழுத்துச்செல்வது மனிதகுல அவமானம் என்பதால் கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டன. அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டன. இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்த தமிழகத் திட்டங்களில் இது ஒன்றாகும்.
குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை கலைஞர் தொடங்கினார். இதன் மூலம் பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. இத்திட்டமும் இந்திய அளவில் முன்னோடித் திட்டமாகும்.
சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றும் உரிமையுடையவர்களாக இருந்தனர். "இந்தியஅளவில் சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியேற்றும் உரிமையுடையவர் களாக இருக்கும்போது, மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தலைமை வகிக்கும் முதல்வர்களுக்கு கொடி ஏற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும்' என்று குரல் கொடுத்தவர் கலைஞர். அவரது குரல் ஓங்கி ஒலிலித்ததையடுத்து, 1972-ஆம் ஆண்டு சுதந்திரத்தின் வெள்ளி விழாவையொட்டி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினத்தில் அந்தந்த மாநில முதல்வர்கள், தலைமைச் செயலகத்தில் கொடியேற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்.
அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, பார்வையற்றோருக்கு அறுவை சிகிச்சை செய்து கண்ணாடிகள் வழங்கும் கண்ணொளி திட்டம், பிச்சைக் காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காக இரவலர் இல்லங்கள் அமைத்தது, இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் வேளாண் பல்கலைக்கழகம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கென தனி அமைச்சரவை, நில உச்சவரம்பு சட்டம், விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலிலி நிர்ணயம் , உயர் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, விதவைகள் மறுமணத்திற்கு நிதியுதவி, கலப்பு மணத் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை ஆகியவை 1969 முதல் 1976 வரையிலான கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசின் முற்போக்குத் தன்மை கொண்ட முக்கியமான மக்கள் நலத் திட்டங்கள் ஆகும்.
13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1989-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலில் தி.மு.க மீண்டும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக தமிழக முதல்வரானார் கலைஞர் மு.கருணாநிதி. 1989முதல் 1991 வரையிலான இரண்டு ஆண்டுகாலம் மட்டுமே நீடித்த இந்த ஆட்சியிலும் நிறைய அளவில் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் பாசன வசதிக்காக மின்மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 1989-ல் நடை முறைக்கு வந்தது. ஆற்றுநீருக்கு அண்டை மாநிலங்களைத் தமிழகம் நம்பியிருக்க வேண்டிய சூழல் நிலவுவதால், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி பாசனம் செய்ய இந்த இலவச மின்சாரத் திட்டம் பெரும்பலன் தந்தது.
ஆண்களைச் சார்ந்தே பெண்கள் வாழ வேண்டும் என்ற நிலைமை மாறி, அவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்று பாடுபட்டவர் பெரியார். 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் பெண்களுக்கு குடும்பச் சொத்தில் பங்கு தர வேண்டும் என்ற தீர்மானத்தை அவர் நிறைவேற்றியிருந்தார். 60ஆண்டுகள் கழிந்து 1989-ல் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது.
இடஒதுக்கீட்டின் மூலமாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று உயர்வதற்காக தமிழகத்தில் நிலவி வந்த இடஒதுக்கீட்டு அளவை 69 சதவீதமாக உயர்த்தியது கலைஞர் தலைமையிலான அரசு. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 30%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என 69% இடஒதுக்கீடு 1989 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
1989-ஆம் ஆண்டு தர்மபுரியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முதன்முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டன. பெண்கள் ஒருங்கிணைந்து சுயதொழில் வாய்ப்பைப் பெருக்கும் இத்திட்டம் இன்று மாநிலம் முழுவதும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு ஆகியவை இந்த 2 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட மேலும் பல முக்கியத் திட்டங்களாகும்.
தமிழக முதல்வராக 1996-ஆம் ஆண்டில் நான்காம் முறையாகப் பொறுப்பேற்றார் கலைஞர் மு.கருணாநிதி. தமிழகத்தின் தலைநகரம் மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும் ஏனைய அந்நிய மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்ததை மாற்றி சென்னை என அனைத்து மொழிகளிலும் அழைக்கும்படி பெயர் மாற்றம் செய்தார்.
கிராமப்புற மக்கள் தங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படைத் திட்டங்களை அரசு நிதியுதவியுடன் அவர்களே செயல் படுத்தும் வகையிலான நமக்குநாமே திட்டத்தைக் கொண்டு வந்தார். கிராமப்புற மேம்பாட்டுக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது. இவையிரண்டும் கிராமப்புறங்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கானத் திட்டங்களாகும்.
விவசாயிகள் தங்களின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் ஏமாறுவதும், அவர்களின் உழைப்பை இடைத் தரகர்கள் உறிஞ்சி பெருத்த இலாபம் பெற்றுக் கொழுப்பதும் வழக்கமாக இருப்பதால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளை அவர்களே சந்தையில் விற்று நேரடியாகப் பலன் பெறும் வகையில் உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தார் கலைஞர் மு.கருணாநிதி.
தமிழர்கள் என்ற உணர்வை மறந்து சாதிவாரியாக மக்கள் பிரிந்திருப்பதுடன் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளும்கூட அக்கிரகாரம், குடியானவர் பகுதி, சேரிப்பகுதி என வருண அடிப்படையில் பிரிந்திருப்பதும் அடுத்த தலைமுறையிலேனும் மாறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், அனைத்து சமுதாயத்து மக்களும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையிலான பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழகத்தில் 100-க்கும் மேற் பட்ட இடங்களில் சமத்துவபுர குடியிருப்பு களைத் திறந்து வைத்தார்.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவர்கள் தங்கள் கல்விக்காகப் பயணம் செய்வது சுமையாக இருக்கக்கூடாது என இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழில் அறிவியல் வளர்ச்சிகள் உலகத்தின் போக்குக்கு ஈடாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் கணினித் தமிழை மேம்படுத்தும் விதத்தில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, கணினித் தமிழில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் வெற்றிகரமாக நடைபெறலாயின.
குக்கிராம மக்கள் எளிதில் நகரப் பகுதி களை அடைவதற்கு வசதியாக தனியார் மூலம் சிற்றுந்துகள் (மினி பஸ்) இயக்கும் திட்டத்தை திமு.க அரசு நடைமுறைப்படுத்தியது. நான்கு முறை முதல்வரான கலைஞர் மு.கருணாநிதி தனது பதவிக்காலமான ஐந்தாண்டுகளை முழுமையாக நிறைவு செய்தது இந்த 1996-2001 ஆட்சிக்காலத்தில்தான்.
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலில் தி.மு.கழகம் தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களில் வெற்றிபெற்றது. தமிழகத்தின் முதல்வராக ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்றார் கலைஞர். 2006 மே 13-ஆம் நாள் பதவியேற்பு விழா நடந்த மேடையிலேயே தனது தேர்தல் வாக்குறுதிப்படி 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி, சத்துணவுத் திட்டத்தில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றக் கையெழுத் திட்டு நடைமுறைப்படுத்தினார்.
தேர்தல் வாக்குறுதியின்படி , குடும்ப அட்டைகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. விறகு அடுப்பு-மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றைப் பயன்படுத்தும் ஏழைப் பெண்கள் படும் அவதியைத் தவிர்க்கும் விதத்தில் அவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப் படுகிறது. அண்ணா நூற்றாண்டு தொடக்க தினமான 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் முதல் 1 கிலோ அரிசி 1ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
அரசின் தரிசு நிலங்களை மேம்படுத்தி அதனை ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய 3 மாதங்களும் பிந்தைய 3 மாதங்களும் தலா 1000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் மகப்பேறு உதவித் திட்டம், படித்தும் வேலைகிடைக்காத இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை, ஆதரவற்ற முதியோருக்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை, திருமணமாகாத மூத்த பெண்மணிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை உள்ளிட்ட பல நலத் திட்டங்கள் கலைஞர் அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சமுதாயத்தில் கல்வி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சமூகக் கட்டமைப்பிலும் ஒடுக்கப்பட்டும் சமுதாயத் தினர் உயர்வு பெறும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானச் சட்டம், இஸ்லாமியர்களுக்கு கல்வி-வேலை வாய்ப்புகளில் 3.5% தனி இடஒதுக்கீடு, அருந்ததியர் சமுதாயத்தினருக்கு 3% உள் ஒதுக்கீடு, அரவாணிகள் என அழைக்கப் பட்டோரை திருநங்கைகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கென தனி நல வாரியம், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு நல வாரியம், ஊனமுற்றோர் என இழிவாக ஒதுக்கப்பட்டவர்களை மாற்றுத் திறனாளிகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கெனத் தனி அமைச்சகத்தை உருவாக்கி அதன் மூலமாக வேலைவாய்ப்பு உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருதல் என அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என ஐ.நா.மன்றம் வழிகாட்டியிருப்பதை இந்தியாவிலேயே முதன்முறையாகச் செயல் படுத்தியிருக்கும் மாநிலம் தமிழகம்தான்.
விபத்து, விஷக்கடி உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கும் கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும் சேவையாற்றும் விதத்தில் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பலரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. 108 என்ற எண்ணுக்குத் தொலைபேசி செய்து இச்சேவையை எளிய மக்களும் பெற முடியும். ஏழைகளுக்கும் உயர் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர் களின் உயிர் காக்கப்படவேண்டும் என்பதற்காக 2009-ஆம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி முதல் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாகக் கடந்த ஓராண்டில் இதயநோய், புற்றுநோய், சிறுநீரக நோய், நரம்பியல் நோய், எலும்பு முறிவு போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களிலிலிருந்து ஏறத்தாழ 2 இலட்சம் பேர் உரிய சிகிச்சைகளின் மூலம் காப்பாற்றப் பட்டுள்ளனர்.
குடிசைகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 2010-ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் நாள் கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களின் பங்கேற்புடன் தொடங்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் 21 லட்சம் நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு, குடிசைகளை முற்றிலுமாக இல்லாமல் செய்யவேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.
தொழில்துறையில் தமிழகத்தின் வளர்ச்சிக்குத் துணைநிற்கும் வகையில் சென்னைக்கு அருகே கார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளிட்டவை பன்னாட்டு மூலதனத்துடன் நிறுவப்பட்டு, உற்பத்தி வருவாயும் வேலைவாய்ப்பும் பெருக்கப்பட்டுள்ளன.
கல்வியில் தமிழக மாணவர்கள் முன்னேற்றம் காண்பதற்கு வசதியாக பல்வேறு பாடத்திட்டங்களுக்குப் பதிலாக ஒரே பாடத்திட்டத்துடனான சமச்சீர் கல்வி முறை, ஒரு குடும்பத்திலிலிருந்து முதல் தலைமுறையில் பட்டதாரியாகும் மாணவர்களுக்கு தொழிற் கல்வியில் கட்டணம் இலவசம், சிந்தனையாற்றலை மேம்படுத்தும் தாய்மொழியை எதிர்காலத் தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது என்பதற்காக பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடம், பள்ளி மாணவர்களுக்கு ஊட்டமளிக்கும் வகையில் சத்துணவில் வாரம் 5 முட்டைகள் எனப் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய வளமும், பண்பாட்டுப் பெருமையும் கொண்ட தமிழ்மொழிக்கு மத்திய அரசின் செம்மொழித் தகுதியைப் பெறுவதில் முனைப் பாக இருந்த கலைஞர் மு.கருணாநிதி, 2010 ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினையும் தமிழ் இணைய மாநாட்டினையும் நடத்தி தமிழின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றிருப்பதுடன், தமிழில் படித்தோருக்கு அரசுப் பணிகளில் 20% வேலை அளிப்பதற்கான அவசரச் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளார்.
விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள், மாணவர்கள், தொழில்முனைவோர், அரசு ஊழியர்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் என அனைத்து தரப்பு மக்களுக்குமானத் திட்டங்கள் பல தி.மு.க அரசினால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதன் பலன் அந்தந்த மக்களுக்கு முழுமையாகச் சென்றடையும் விதத்தில் அரசு இயந்திரங்கள் செயல்படுவதே மக்களாட்சிக்கான இலக்கணமாக அமையும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment