ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை என்று கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெலன்டேவிட்சன் தெரிவித்தார்.
ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத் நாடு முழுவதும் நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து ஹெலன் டேவிட்சன் கையெழுத்திட்டதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் என அறிவித்துள்ளது.
இதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹலன் டேவிட்சனும் கையெழுத்திட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு ஹெலன் டேவிட்சனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஹெலன் டேவிட்சன் கூறியதாவது, மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் பலர் வந்து என்னிடம் மனு அளிக்கிறார்கள். அதுபோலவே ஸ்ரீஅனுமன் சக்தி ஜாகரன் சமிதி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் தலைமையில் ஒரு குழுவினர் வந்து மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்டதை உறுதி செய்யும் வகையில்தான் கையெழுத்திட்டிருந்தேன்.
ஆனால், அதை சிலர் திரித்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து நான் கையெழுத்திடவில்லை. திமுக தலைமைக் கழகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் கிடைக்கப் பெற்றுள்ளது. இதுகுறித்து புதன்கிழமை (அக்டோபர் 27) விரிவான விளக்கம் அனுப்பிஉள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment