கத்தார் நாட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி ஆகியோருக்கு, முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தை சேர்ந்த 43 மீனவர்கள், மீன்பிடித் தொழிலுக்காக சவுதி அரேபியா மற்றும் பக்ரைன் நாடுகளுக்காக சென்றுள்ளார்கள். அவர்கள், கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது, தங்களை அறியாமல், கத்தார் நாட்டு கடல் எல்லைப்பகுதிக்குள் சென்று விட்டார்கள். அந்த 43 மீனவர்களையும், கத்தார் நாட்டு அரசாங்கம், கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு அவர்களை விடுவிப்பது தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். தமிழக மீனவர்கள் சிறைப்பட்டிருப்பது பற்றி, கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் வாடும் தமிழக மீனவர்களுக்கு சட்டரீதியாக உதவி அளித்து, மனிதாபிமான அடிப்படையில் அந்த அப்பாவி மீனவர்களை விடுவிப்பதற்காக கத்தார் நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment