
அவதூறு செய்தி பரப்பிய ஜெயா டிவி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மன்னிப்பு கேட்க வேண்டும், தலா ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் அனுராதா, துணைத்தலைவர் சுனில், சீனியர் நிருபர் ரமணி, செய்தி ஆசிரியர் தில்லை மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், அதன் முதன்மை ஆசிரியர் ஆதித்ய சின்ஹா, வெளியீட்டாளர் ஜூகுஜூன்வாலா ஆகியோருக்கு மு.க.அழகிரி சார்பில் அவரது வக்கீல் பிரேம்ராஜ் அம்புரோஸ் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது. இவரது உழைப்பு, சேவைக்கு கிடைத்த பரிசுதான் மத்திய கேபினட் அமைச்சர் பதவி. இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகழ்பெற்ற மத்திய அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தற்போது இவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் முக்கிய எதிர்கட்சியான அதிமுக, பொய்யான வதந்திகளை திரும்பத் திரும்ப பரப்பி வருகிறது. அக்.22ம் தேதி பிரசுரமான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதல்பக்கத்தில் டெல்லி ஏர்போர்ட்டில் ராஜாவை அவமானப்படுத்திய அழகிரி என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. உள்நோக்கம் கொண்டது. ஜெயா டிவியில் ஒளிபரப்பிய செய்தியை தீரவிசாரிக்காமல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பலர் அழகிரியை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் அவருக்கு இருந்து வரும் நன்மதிப்பிற்கு பாதிப்பையும், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment