பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாலசுப்பிரமணி (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்), குணசீலன் (யாதவ மகாஜன சங்கம்), கோபாலகிருஷ்ணன் (யாதவர் பேரவை), ராமகிருஷ்ணன் (தேவர் பேரவை), கரிக்கோல்ராஜ் (நாடார் பேரவை), சக்திவேல் (குலாலர் சங்கம்), சாமுவேல் (இந்திய சுவிசேஷ லுத்தரன் சபை), முகமது ஜமாலி (சுன்னத் ஐக்கிய ஜமாத்), அதியமான் (ஆதி தமிழர் பேரவை), நாகராஜன் (தொட்டிய நாயக்கர் சங்கம்), அனந்தராமன் (நாயுடு மக்கள் சக்தி இயக்கம்), ராஜமாணிக்கம் (முத்தரையர் சங்கம்) உள்ளிட்ட 27 அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று காலை 10.50 மணிக்கு தலைமை செயலகம் வந்தனர்.
முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர் துரைமுருகன், ஜி.கே.மணி உடன் இருந்தனர். சுமார் 25 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை முதல்வர் கருணாநிதியிடம் தந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மக்களின் எழுத்தறிவு, திருமண விவரம், வாழ்நாள், வேலை, பொருளாதார நிலை போன்ற விவரங்களை ஒருங்கிணைக்காமல் தலைகளை மட்டும் எண்ணி கணக்கெடுப்பு நடத்துவதில் எந்த பயனும் இல்லை. எனவே தமிழகத்தில் சமூக பொருளாதார நிலை குறித்த விவரங்களை உள்ளடக்கிய சாதிவாரி கணக்கெடுப்பை தனியாக நடத்த வேண்டும். இதற்கான ஆணையை தாமதமின்றி உடனே பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வரை சந்தித்துப் பேசியது பற்றி...?
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று 27 சங்கங்களை சார்ந்த தலைவர்கள் ஒன்றுபட்டு முதல்வரை சந்தித்து இருக்கிறோம். சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது.
நாங்கள் கொடுத்த மனுவை படித்த முதல்வர், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. இதை நானும் தொடர்ந்து சொல்லி வருகிறேன். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஜனார்த்தனத்தை வரவழைத்து அது குறித்து அவரிடம் பேசி நல்ல முடிவு எடுக்கிறேன் என்று உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment