11 ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த 5 இலட்சத்து 68 ஆயிரத்து 359 மாணவ, மாணவியர்க்கு149 கோடியே 58 இலட்சம் ரூபாய்ச் செலவில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழகத்திலுள்ள அரசு-அரசு உதவி பெறும்-அரசின் ஒரு பகுதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிட,
பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட அனைத்து சமுதாயங்களையும் சார்ந்த மாணவ மாணவியர் அனைவருக்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் 2 இலட்சத்து 51 ஆயிரத்து 108 மாணவர்களுக்கும், 3 இலட்சத்து 17 ஆயிரத்து 251 மாணவிகளுக்குமாக மொத்தம் 5 இலட்சத்து 68 ஆயிரத்து 359 மாணவ, மாணவியர்க்கு 149 கோடியே 58 இலட்சம் ரூபாய்ச் செலவில் இலவச மிதிவண்டிகளை வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.
முதலமைச்சர் கருணாநிதி இன்று (6.10.2010) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில் 7 மாணவர்களுக்கும், 7 மாணவிகளுக்கும் இலவச மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்துகள் கூறி, தமிழகம் முழுவதிலும் மிதிவண்டிகள் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
மிதிவண்டிகளைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியர் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி, தலைமைச் செயலாளர் எஸ். மாலதி,
ஆதிதிராவிடர் நலத்துறை முதன்மைச் செயலாளர் திரு. விஸ்வநாத் ஏ. ஷெகாங்கர், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் தேவ ஜோதி ஜெகராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைச் செயலாளர் து.நா. இராமநாதன், ஆதிதிராவிடர் நல ஆணையர் பொ.சிவசங்கரன், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் பெ.மு.பஷீர் அஹமது,
இ.ஆ.ப., மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் ப.அண்ணாமலை, பழங்குடியினர் நல இயக்குநர் உ.இரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment