கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, October 24, 2010

உழைப்பு, ஒற்றுமை இருந்தால் வெற்றி உறுதி - முதல்வர் கருணாநிதி


உழைப்பு, ஒற்றுமை இருந்தால் நம் அணிக்கு வெற்றி உறுதி என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று (23.10.2010) வெளியிட்ட அறிக்கை:
ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிகள், எதிர்க் கட்சிகளாவதும், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிகளாவதும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கருவிகளாக விளங்குவதைப் புறந்தள்ளிவிட முடியாது. ஆளுங்கட்சி என்ற ஆணவப் போக்குடன் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதும், எதிர்க் கட்சியாகவே இருக்க வேண்டுமா என்ற எரிச்சலில், எதையும் பேசுவது, எதற்காகவும் போராடுவது, ஏனோதானோவென்று ஆளுங்கட்சியை விமர்சிப்பது, இவையெல்லாம் ஜனநாயகத்தில் ஏற்புடையது என்று எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்த அடிப்படைக் கருத்தை அடியோடு மறந்துவிட்டு, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியையும், அதனுடன் தோழமை கொண்டு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிற தி.மு.க. அணியையும் கடுமையான தாக்குதலை நடத்தியே, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று ஒரு அணியைத் திரட்டுவதற்கான ஆயத்தங்கள் அனைத்திந்திய அளவிலும், தமிழக அளவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இன்றுள்ள அரசியல் நிலையை மாத்திரம் அளந்து பார்த்தோ, எடை போட்டுப் பார்த்தோ எந்த முடிவையும் எடுக்க விரும்பாமல், சாதி, மத வேறுபாடுகள், மனித நேயத்திற்கு மாறான செயல்கள், மூட நம்பிக்கைகள் என்ற அடிப்படையில் நடைபெறும் முயற்சிகள் எதுவாயினும் அது இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடியதாகவும், மத நல்லிணக்கத்திற்கு மாறுபட்டதாகவும், திராவிட இன உணர்வுகளைச் சிதைக்கக் கூடியதாகவும், அன்னைத் தமிழின்பால் கொண்டுள்ள பற்றினை அசைக்கக் கூடியதாகவும் அமையுமேயானால் அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் வாய்மூடி மவுனியாக திமுக இருந்ததுமில்லை; இருக்கப் போவதுமில்லை.
திமுகவின் இந்த உணர்வுகளை அவற்றின் அடிப்படையிலான லட்சிய முழக்கங்களை, குறைந்தபட்ச பொதுத் திட்டங்களாக கொண்டுதான் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தேர்தல் அல்லாத நேரங்களிலே கூட தோழமை அணிகள் உருவாகியிருக்கின்றன. அந்த அணிகளில் ஒன்றாக விளங்கி வீறுநடை போட்டு வருவது தான் திமுக.
நேற்று முன்தினம் கோவை மாவட்ட தி.மு.க. ஆய்வுக்கூட்டத்தில் நான் எடுத்துரைத்தவாறு, கொள்கையும், லட்சியமும் முன்வைக்கப் பெற்று அவற்றை வென்றெடுக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் பயன்பட வேண்டும். அல்லாமல் தேர்தல் வெற்றிதான் தி.மு.கழகத்தின் மூல நோக்கம் என்று என்றைக்கும் கூறியதுமில்லை, கருதியதுமில்லை.
ஆனால், தமிழகத்தில் உள்ள சில ஏடுகள், ஒரு கட்சியைப் பொறுத்தவரை தேர்தலுக்காக எடுத்து வைக்கும் திட்டங்கள், கொள்கைகள், அவற்றை நிறைவேற்றும் பாங்குகள் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தலுக்கு முன்பு அந்தக் கட்சியின் பிரச்சாரத்துக்காகக் கூடுகிற அல்லது கூட்டப்படுகிற கூட்டத்தையே அளவாக வைத்துக்கொண்டு எது நல்ல கட்சி அல்லது எது பெரிய கட்சி என்ற தீர்ப்பு வழங்க இப்போதே எழுதுகோல்களைக் கூர்தீட்டிக் கொண்டிருக்கின்றன.
1971ம் ஆண்டு அண்ணா இல்லாத காலம். பெரியாரின் துணையோடு, அன்றைக்கு நம்முடன் நட்பு கொண்டிருந்த சில கட்சிகளின் தோழமையோடு, இ.காங்கிரஸ் கட்சியுடன் அணிவகுத்து தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டம். காமராசரும், ராஜாஜியும் ஓரணியிலிருந்து நம்மை எதிர்க்கிற நேரம்.
அப்போதுதான், சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் காமராசரும், ராஜாஜியும் ஒரே மேடையில் ஏறி திமுக அணியை எதிர்த்து முழங்குகிறார்கள். அந்த மேடையிலே தான் ராஜாஜி, காமராசர் நெற்றியிலே வெற்றித் திலகம் இட்டு, ஆசி வழங்கினார்.
எமது அணியின் தலைவியாக இருந்த இந்திரா காந்தி, அந்தக் கூட்டத்தின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு, நாம் வெற்றி பெறுவோமா என்பது போல, விழிகளை அகல விரித்துப் பார்த்தார். ''கவலைப்படாதீர்கள். இந்த அரசு புரிந்துள்ள சாதனைகளையும், அடுத்து நாம் புரியவிருக்கும் சாதனைகளையும் நம்பிக்கையோடு ஏற்றுள்ள மக்கள் ஏமாற்ற மாட்டார்கள்'' என்று நான் இந்திராவுக்கு விளக்கமளித்தேன்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்தத் தேர்தலில் மகா கூட்டணி அமைத்து காமராசரும், ராஜாஜியும் பரமாத்மாவே பாஞ்ச சன்யம் முழங்கியது போல் முழங்கிய அந்தத் தேர்தல் போரில் திருவல்லிக்கேணி கடற்கரையில் கூடிய அந்தக் கூட்டம் கணித்த ஆரூடத்தையும் மிஞ்சி, தெருவோரத்தில் நின்ற மனிதர்களின் தீர்ப்பே வென்று காட்டியது.
கூட்டத்தை வைத்து வெற்றி தோல்வியை எடைபோட்டு விடக்கூடாது என்பதற்காக அல்ல; கூட்டமும் தேவைதான் நாம் கூறுகிற கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து மக்கள் தீர்ப்பளிப்பதற்கு என்பதில் எனக்கு இருவேறு எண்ணமும் இல்லை.
ஆனால், கூட்டம் மாத்திரமே அளவுகோல் எனக் கணிப்போருக்கு, அதுவே அளவுகோல் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காக, அந்த நாள் திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தை நினைவுபடுத்தினேன். 1962 பொதுத் தேர்தலில், காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு அண்ணா பேச்சைக் கேட்க லட்சக்கணக்கில் மக்கள் கூடினர். ஆனால், அந்தத் தேர்தல் முடிவு என்ன?
பொதுமக்கள் கருத்துக்களைக் கேட்கிறார்கள். கட்சியின் தேவையை உணர்கிறார்கள். அவர்களை அழைத்து, வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள் உதயசூரியனுக்கு என்று சொல்வதற்கு அல்லும் பகலும் உழைக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள், ஆர்வம் படைத்தவர்கள், அக்கறையுடன் பணியாற்றக் கூடியவர்கள் தொண்டர்கள்.
தொண்டர்கள், தொண்டுள்ளம் படைத்த தூயவர்கள் இடைவிடாது உழைத்து இணையற்ற வெற்றியைத் தேட வேண்டும் என்று செயல்படுகிற சிங்க ஏறுகள், கொள்கை வேங்கைகள். இன்று உழைத்தது போதும் என்றெண்ணாமல் இன்னும் எண்ணற்ற பணிகள் இருக்கின்றன என்றெண்ணி, காஞ்சியில் மட்டுமல்ல திமுக தேர்தலில் நின்ற எல்லா இடங்களிலும் செயல்பட்டிருந்தால், அண்ணா தலைமையில் 1967ல் அமைந்த ஆட்சி, அதற்கு முன்பே 1962லேயே அமைந்திருக்கும் என்பதை யார் தான் மறுத்திட இயலும்?
இதிலிருந்து என்ன புரிகிறது? உழைப்பு, உழைப்பு, உழைக்கும் மாமணிகளாம் தொண்ட்களிடையே ஒற்றுமை, ஒற்றுமை இருப்பின் எவர் அணி வகுத்து நின்றாலும், திமுக அணிக்கு வெற்றி உறுதி
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதியை நேற்று (23.10.2010) அவரது இல்லத்தில் தமிழக ஆயர் பேரவையின் துணைத் தலைவர் ஆயர் பீட்டர் ரெமிஜீயுஸ் சந்தித்து பேசினார். உடன் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னத்துரை மற்றும் தமிழக கத்தோலிக்க கழக முன்னாள் செயலாளர் சார்லஸ் பொரோமியோ.

No comments:

Post a Comment