சென்னை நடராஜ் திரையரங்கில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
இது ஒரு சூளுரை நாள் பொதுக்கூட்டமாகும். ஏதோ தி.மு.க.வுடன் கொண்ட கருத்து உறவால் நான் கூறுவதாக யாரும் கருதவேண்டாம். கடைகோடியில் உள்ள விவசாயிகூட இந்த தி.மு.க. ஆட்சிதான் மீண்டும் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறான் - மீண்டும் திராவிடர் ஆட்சியே - இது உறுதியே! என்ற தலைப்பு நமது ஆசையின் வெளியீடல்ல - நாட்டின் நிலைப்பாடும் இதுதான். வாக்குறுதிகளைக் காப்பாற்றிய அரசு! கடந்த தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஆட்சி இந்த ஆட்சி! சொன்னதைச் செய்து காட்டியுள்ளோம் என்று துணிந்து சொல்லி உங்களிடம் வாக்குக் கேட்க வருகிறது இந்த ஆட்சி - இது சாதாரண மானதல்ல - இதற்குமுன் இதுபோல யாரும் துணிவோடு மக்கள் மத்தியில் வாக்குக் கேட்டு வந்தவர்கள் யாரும் கிடையாது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் அளிக்கப்படும் இலவசத் திட்டங் களை எதிர்த்து ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். சொன்னதை ஏன் செய்தார்கள்? என்று கேட்பது போன்ற வழக்கு. இது தள்ளுபடி செய்யப்பட்டது. பதவியேற்ற நாளிலேயே ஆணை பிறப்பித்த அதிசயம் பதவி ஏற்ற அந்தத் தருணத்திலேயே ஆயிரக்கணக்கான மக்கள் முன் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று ஆணை பிறப்பித்து முதல் கையெழுத்துப் போட்ட முதலமைச்சர் கலைஞரைத் தவிர வேறு யாரும் அல்லர். அதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத நிலையில், அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று ஆணை வழங்கினார். எலிக்கறி சாப்பிட்டது யார் ஆட்சியில்? விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டது கடந்த ஆட்சியில். அப்பொழுது அதனை எடுத்துக்காட்டி குற்றஞ்சாற்றிப் பேசியவர்கள் இப்பொழுது அந்த அம்மாவை மீண்டும் அரியணையில் ஏற்றத் துடியாய்த் துடிக்கிறார்கள். இந்தத் தி.மு.க. ஆட்சியில் பட்டினிச் சாவு என்பது கிடையாது. உணவு, உடை, உறைவிடம் தேவை! உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றும் மக்களுக்கு மிகவும் அவசியம் தேவை. ஒரு அரசாங்கம் இந்த மூன்றுக்கும் உத்தரவாதம் கொடுக்கவேண்டும். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், இந்த மூன்றும் ஒழுங்காகக் கிடைக்கும் இடம் சிறைச்சாலைதான். எங்களைப் போன்றவர்கள் நேரா நேரத்தில் சாப்பிடுவது ஜெயிலில் தான். தாயினும் சாலப் பரிந்தூட்டுதல் என்பார்களே - அது சிறைச்சாலையில்தான். உடைக்குப் பஞ்சம் கிடையாது - நாம் அணிந்து சென்ற உடையை வாங்கிக்கொண்டு சிறை அதிகாரிகள் வேறு உடைகளைக் கொடுப்பார்கள். பத்தாண்டு சிறையில் இருந்தாலும், நமது பழைய ஆடையை பத்திரமாக வைத் திருந்து, விடுதலை ஆகும்போது அப்படியே கொடுப் பார்கள். உறைவிடமும் சிறையில் சிறப்பாக உண்டு. அந்த நிலை மாறி கலைஞர் ஆட்சியில் இம்மூன்றும் தங்கு தடையின்றிக் கிடைக்கிறதே - மறுக்க முடியுமா? உறைவிடம் 1971 இல் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் இந்தியாவிலேயே முதன்முறையாகக் குடிசை மாற்று வாரியம் கொண்டு வரப்பட்டது. ஜெயப் பிரகாஷ் நாராயண் போன்றவர்கள் மனந்திறந்து பாராட்டினார்கள். இப்பொழுது 21 லட்சம் ஓலைக் குடிசைகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம் இந்த ஆட்சியில் கடந்த மார்ச்சில் திருச்சியில் முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு ஊழியர்களே மனந்திறந்து நன்றி உணர்வுடன் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மருத்துவமனையில் இருந்தவாறே, 6 ஆவது ஊதியக் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று அரசு ஊழியர்களும், அவர்களின் குடும்பங்களும் மகிழும் வண்ணம் அறிவித் தார் முதலமைச்சர் கலைஞர். இப்பொழுது அரசு ஊழியர் கள் நன்றி அறிவிப்பு மாநாடுகளை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக ஒரு அரசு நடைமுறைப்படுத்தி வந்த திட்டங்களை அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும்போது நிறுத்திவிடுவார்கள்! கலைஞர் அவர்களோ, முன்மாதிரி யான முதலமைச்சர் - பெருந்தன்மை வாய்ந்தவர் என்ற முறையில், கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு அளிக்கப் பட்டு வந்த இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டுதான் வருகிறார். சுயமரியாதை இயக்கத்தின் கோட்பாடு அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சுயமரி யாதை இயக்கத்தின் கோட்பாடு. எல்லார்க்கும் எல்லாம் என்று தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் கூறியது. அதனை ஆட்சியில் இருந்து செயல்படுத்திக் காட்டுவது தி.மு.க. ஆட்சியே! இது சூத்திரர்களுக்கான அரசுதான்! ஒருமுறை சுதந்திராக் கட்சி உறுப்பினராக இருந்த எச்.வி. ஹண்டே சட்டப்பேரவையில் தி.மு.க. ஆட்சியை மூன்றாம் தர அரசு என்று கூறினார்; தி.மு.க. உறுப்பி னர்கள் ஆவேசப்பட்டார்கள். அப்பொழுது கையமர்த்தி அவர்களையெல்லாம் அமரச் செய்து, ஹண்டேயை நோக்கிச் சொன்னார் நமது மானமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள், இது மூன்றாம்தர அரசு அல்ல; பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்று சொல்லப் படும் வரிசையில் இது சூத்திரர்களுக்காகச் சூத்திரர் களால் ஆளப்படும் நான்காம்தர அரசு! என்று சொன்னார். (பலத்த கரவொலி!). தி.மு.க. ஆட்சிக்குரிய தனித்தன்மை தி.மு.க. ஆட்சிக்கும், மற்ற ஆட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? எந்த ஆட்சியும் சாலைகள் போடும், தெரு விளக்குகள் போடும். ஆனால், சமூக ரீதியாக, கலாச்சார ரீதியாக சீர்திருத்த உணர்வுடன் செயல்படுவது தி.மு.க. ஆட்சி மட்டும்தான். அனைத்து ஜாதியினருக்கும் தந்தை பெரியார் அவர்களால் இறுதியாக அறிவிக்கப் பட்ட போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும். அதற்காக தந்தை பெரியார் போராட்டம் நடத்திய காலகட்டத்தில், முதல்வர் கலைஞர் அவர்கள் தனி சட்டமே கொண்டு வந்தாரே, உச்சநீதி மன்றத்தின் முட்டுக்கட்டை காரணமாக அதனைச் செயலாக்க முடியாத நிலை. இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே முதல் தீர்மானம் இதற்காகத்தானே - மீண்டும் சட்டம் இயற்றப்பட்டு, 69 சதவிகித அடிப்படை யில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதே! அன்று நந்தன் பட்டபாடு! சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ய ஆசைப்பட்டான் நமது நந்தன். பல மாதங்கள் அலைந்தான், கடைசியில் நந்தனைத் தீயில் குளிக்கச் செய்து, அதற்குப்பின் உயர்ஜாதியாக்கி நடராஜன் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டான் என்கிறார்கள். சிதம்பரம் நடராஜன் என்ன சொன்னான்? நந்தியே சற்று விலகு என்றுதான் சொன்னதாகக் கூறுகிறார்களே தவிர, நந்தனே உள்ளே வா என்று சொல்லவில்லையே! கோவிலுக்குள் நந்தன் பரம்பரை கோயிலுக்குள் மட்டுமல்ல - கருவறைக்குள்ளேயே சென்று அர்ச்சனை செய்யும் உரிமையை வாங்கிக் கொடுத்த ஆட்சி இந்தக் கலைஞர் ஆட்சிதானே! அதிகார மாற்றம் என்பது (Transformation) இதுதான். சிதம்பரம் நடராஜன் கோயில் இன்று இந்த சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தில் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. நூற்றாண்டுக்கும் மேலே வழக்குகள் நீதிமன்றத்தில். எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இருக்கும் போதும் வழக்கு- மீட்கப்பட முடிய வில்லை. அப்பொழுது எம்.ஜி.ஆர். ஆட்சியை திராவிடர் கழகம் எதிர்த்துக் கொண்டிருந்த நேரம், அந்தநேரத்தி லும்கூட, சிதம்பரம் கோயில் தொடர்பாக போராட்டம் நடத்துமாறு எங்களிடம் எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண் டதுண்டு. கலைஞர் ஆட்சியில்தான் நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று தீட்சிதர்களின் ஆதிக்கத்தில் இருந்த சிதம்பரம் நடராஜன் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேர் என்று புராணத்தில் எழுதி வைத்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்திலே தீர்ப்பு. தொலைப்பதிவி (ஃபேக்ஸ்)மூலம் தீர்ப்பின் ஆணை அனுப் பியது. அதிகாரிகள் தயாராக இருந்தனர். கோவிலுக்குச் சென்றனர் - தீட்சிதர்கள் முரண்டு பிடித்தனர். ஆணை எங்கே என்று கேட்டனர் தீட்சிதர்கள். ஆணையை நீட்டினர்- ஆண்டாண்டு காலமாக தீட்சிதர்களின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்த சிதம்பரம் கோயில் ஒரு நொடிப்பொழுதில் அரசின் கட்டுப்பாட்டுக் கும் கீழே கொண்டு வரப்பட்டதே! அதுவும் யார் கையில்? எந்த நந்தனை கோயிலின் உள்ளே செல்ல தீட்சிதர் கூட்டம் மறுத்ததோ, அதே நந்தன் சமூகத்தைச் சேர்ந்த - அதுவும் ஒரு பெண் அதிகாரியை அனுப்பி தீட்சிதர்களின் கையில் இருந்த கோயில் நிருவாகத்தின் அதிகாரத்தை மாற்றிய புரட்சி மானமிகு கலைஞர் ஆட்சியில்தான் நடந்தது. தீட்சிதர்களின் கொள்ளையோ கொள்ளை! சிதம்பரம் கோயிலில் ஆண்டு ஒன்றுக்கு உண்டியல் மூலம் வருமானம் ரூ.37 ஆயிரத்து 199 என்றும், செலவு ரூ.37 ஆயிரம் என்றும், மீதி ரூ.199 என்றும் நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் சொன்னார்கள். ஆனால், உண்மை என்ன? கோயில் நிருவாகம் இந்து அறநிலையத் துறையின் கையில் வந்து 18 மாதங்களில் உண்டியல் வசூல் என்ன தெரியுமா? 25 லட்சத்து 12 ஆயிரத்து 455 ரூபாய். எந்த அளவுக்குப் பொய் கூறியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். எத்தனை ஆண்டுகாலம் கொள்ளை அடித் துள்ளார்கள். இந்தப் பகல் கொள்ளையைத் தடுத்து தனியாருக்குப் போன வருவாயை அரசின் கஜானாவுக்குக் கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சிதானே! தீட்சிதர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? உண்டியலுக்குள் நெய்யை ஊற்றி ரூபாய் நோட்டுகளை நாசப்படுத்தப் பார்த்தனர். வடலூரில் என்ன நடந்தது? கரையான் புற்றெடுக்கக் கருநாகம் உள்ளே புகுந்ததுபோல, வடலூரில் வள்ளலார் இராமலிங்க அடி களால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய ஞான சபையில், அவர் கொண்டிருந்த கூற்றுக்கு மாறாக உருவ வழிபாட்டைத் திணித்துத் தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருந்த அர்ச்சகப் பார்ப்பனரை சட்ட ரீதியாக வெளியே அனுப்பி, வள்ளலார் விரும்பிய வகையில் அந்த சபை இப்பொழுது நடந்து வருகிறது. கல்வி வளர்ச்சி கலைஞர் ஆட்சியில் பட்டப்படிப்பு வரை இலவசம், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகை - 375 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன என்றால், பொறியியல் கல்லூரிகளோ 450. விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் இடங்கள். இந்த ஆண்டில் மட்டும் பொறியியல் கல்லூரிகளில் நுழைந்த மாணவர்கள் 1,63,131. பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் பலன் அடைந்துள்ளார்கள். ஒடுக்கப்பட்டோர் சாதனை! நுழைவுத் தேர்வு தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளதால், முதல் தலைமுறையைச் சேர்ந்த கிராமப்புற மாணவ - மாணவிகளுக்கு பெரும் எண்ணிக் கையில் பொறியியல் கல்லூரிகளில், பல்கலைக் கழகங் களில் இடம் கிடைத்துள்ளது. 2010 இல் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் வாங்கியவர்கள் பத்துப் பேர். அவர்கள் யார் யார் தெரியுமா? பிற்படுத்தப்பட்டோர் 7 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 3 உயர்ஜாதியினர் யாரும் இல்லை. இது சூத்திரர்களின் அரசு என்று கலைஞர் சொன்ன தற்கான அர்த்தம் இதுதான். அமெரிக்காவரை... அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் நம் பிள்ளை கள் பணியாற்றுகின்றனர் என்றால், இதற்கு யார் காரணம்? தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினரும் நமக்கான ஆட்சி கலைஞர் ஆட்சியே என்ற நன்றி உணர்வுடன்தான் இருக்கிறார்கள். படிப்பா? அது உங்களுக்கு வராது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே மனுதர்மம்! இன்றைக்கு அந்த மனுதர்மம் ஒழிக்கப்பட்டு, மனிதத் தர்மம், சமூகநீதித் தர்மம் இங்கு நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த அடிப்படை சாதனைக்காக கலைஞர் ஆட்சி மீண்டும் வரவேண்டாமா? நன்றிக் கடன்! படிப்பு பார்ப்பனர்களுக்கு மட்டும்தான்; மற்றவர்களுக்கு அது வராது - கிடையாது - அதுதான் தலையெழுத்து என்று கூறி வந்த, நம்பி வந்த சமூகத்தின் அந்தத் தலையெழுத்தை மாற்றியுள்ளது மானமிகு கலைஞர் அரசு அல்லவா! அதற்கான நன்றிக்கடனை வரும் தேர்தலில் கண்டிப்பாக அவர்கள் காட்டத்தான் செய்வார்கள். ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது என்றால், நூறு சிறைகள் மூடப்படுகின்றன என்று பொருள். ஆனால், தமிழ்நாட்டில் என்ன நடந்தது? தலைமைச் செயலகம் கட்டு வதற்காக ராணிமேரி கல்லூரியை இடிக்கத் திட்டமிடப் பட்டது கடந்த ஆட்சியில். தளபதி மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு முதலியோர் தடுத்தபோது அவர்கள் கைது செய்யப்படவில்லையா? கோட்டூர்புரத்திலே என்ன நடந்தது? கோட்டூர்புரத்திலே தலைமைச் செயலகம் கட்டப்பட இருப்பதாகக் கூறி சங்கராச்சாரியாரை அழைத்து யாகம் வளர்த்து, பட்டுப்புடவைகளை எரித்துக் கூத்தடித்தார்களே கடந்த ஆட்சியில். அதே இடத்தில் அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நினைவாக ரூபாய் 171 கோடியில் மிகப்பெரிய அளவுக்கு நூலகத்தை எழுப்பியவர் கலைஞர். அறிவுத்துறை வளர்ச்சிக்கு கலைஞர் ஆட்சி அளித்த நன்கொடை இது அல்லவா! அரவாணிகளுக்கு உரிமைகள் அரவாணிகள் என்றால் சமூகத்தில் ஏளனமாகப் பேசப்பட்ட நிலையை மாற்றி, அவர்களுக்காகத் தனி வாரியம் அமைக்கப்பட்டு மனிதத் தன்மையின் சிறப்பை வெளிப்படுத்தியது தி.மு.க. ஆட்சி. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திக் கட்டுரை ஒன்றின் மூலம் தி.மு.க. ஆட்சியின் இந்தச் சாதனையைப் பாராட்டியது. மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறனாளிகளை மனிதநேயக் கண்ணோட்டத் தில் அணுகி, ஆக்க ரீதியான உதவிகளைச் செய்து வருவதும் கலைஞர் ஆட்சியே. மாத உதவித் தொகையை ரூ.200-இலிருந்து 500 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தது இந்த ஆட்சிதான்! இதன்மூலம் பத்தாயிரம் பேர்கள் பயன் அடைந்து வருகின்றனர். மக்கள் நலத் திட்டங்கள் கலைஞர் அவர்களின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் உதவி என்பது எல்லாம் சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்வில் கிடைத்தற்கரிய திட்டங்களாகும். 108 என்று சொன்னாலே 108 அர்ச்சனை; 108 தேங்காய் என்று நினைத்துக்கொண்டிருந்த மக் களிடத்திலே அவசர உதவிக்கு 108-க்குப் போன் செய் தால், வாசலில் வந்து நிற்கும் ஆம்புலன்ஸ் என்பதெல்லாம் - இந்த ஆட்சி மக்களின் நலன்களைக் காப்பதில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும், வாழ்த்தையும் இந்த ஆட்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வு இந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வந்து நிறுத்தும் என்பதை உறுதியாக எதிர்பார்க்கலாம். கடவுளை மற - மனிதனை நினை! கடவுளை மற - மனிதனை நினை என்று சொன்னார் தந்தை பெரியார். கலைஞர் அவர்கள் அதனைச் செயல்படுத்தி வருகிறார். தான் வாழ்ந்த வீட்டைக்கூட நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார். என் உயரம் எனக்குத் தெரியும்! பிரதமராவீர்களா என்ற கேள்விக்கு, என் உயரம் எனக்குத் தெரியும் என்று கூறியவர் கலைஞர். இதன் பொருள் - மற்றவர்களும் தங்கள் உயரத்தை அறிந்து வைத் திருக்கவேண்டும் என்பதுதான். சிலர் மற்றவர்கள் தோள் களில் நின்று கொண்டு தங்கள் உயரம் பற்றித் தவறாகக் கணித்துக் கொண்டிருக்கிறார்கள். பரம்பரை யுத்தத்தை எதிர்கொள்வோம்! பரம்பரை யுத்தம்பற்றியெல்லாம் கடந்த தேர்தலில் பேசினார்கள். அந்த யுத்தத்தில் மீண்டும் வெற்றி பெறுவோம்! கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள தளபதிகள் இருக்கிறார்கள். இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்? ஜாதியற்ற சமத்துவ சமுதாயத்தை, பெண்ணடிமை தொலைந்த சமுதாயத்தை, எல்லார்க்கும் எல்லாம் என்ற சமதர்ம சமுதாயத்தை, மனுதர்மத்துக்கு இடம் இல்லாத மனிதத் தர்ம - மனித நேய சமுதாயத்தை உருவாக்கு வோம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! என்று கூறி முடித்தார் தமிழர் தலைவர். நிகழ்ச்சி கலைஞர் பகுத்தறிவுப் பாசறை எழும்பூர் - பகுதி தி.மு.க. சார்பில் 12.10.2010 காலை 10.30 மணிக்கு சென்னை 40 ஆவது வட்டம் நடராஜ் திரையரங்கில் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு பரிதி இளம்வழுதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பெரம்பூர் கந்தன் வரவேற்புரையாற்றிட, சட்டமன்ற உறுப்பினரும், வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளருமான வி.எஸ். பாபு, எழும்பூர் பகுதி செய லாளர் கோ. ஏகப்பன் (மாநகராட்சி உறுப்பினர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2011-க்குப் பிறகும் கலைஞர் ஆட்சியே தொடரவேண்டும்- ஏன்? என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரனும், மீண்டும் திராவிடர் ஆட்சியே! இது உறுதியே! என்ற தலைப்பில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் உரையாற்றினர். 46 ஆவது வட்ட செயலாளர் கே.ஆர். விசுவநாத் நன்றி கூறினார். திராவிடர் கழகத் தலைவருக்குப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், பொறுப்பாளர்களும் ஏராளமான சால்வைகளை அணிவித்தனர். தோழர்கள் உரை பெரம்பூர் கந்தன் அவர்கள் வரவேற்புரையாற்று கையில் குறிப்பிட்டதாவது: தி.மு.க. தோழர்கள் பகுத்தறிவு உணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். நெற்றியில் மதக் குறிகளை அணிவதைத் தவிர்க்கவேண்டும். நமது முக்கியக் கொள்கை ஜாதி ஒழிப்பாகும். இந்த ஜாதி ஒழிப்புக்காக அரசமைப்புச் சட்டத் தையே கொளுத்தி 3 மாதம் முதல் 3 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அடைந்தவர்கள் திராவிடர் கழகத் தோழர்கள் என்று குறிப்பிட்டார். மாண்புமிகு பரிதி இளம்வழுதி கருத்தரங்குக்குத் தலைமை வகித்த தமிழ்நாடு அரசு செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது: இச்சிறப்புக் கூட்டம் படம் பார்க்க வந்த கூட்டம் அல்ல. மாறாக, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முதல்வர் கலைஞர் நடத்திய பாடங்களைக் கேட்க வந்த கூட்டம்! அவசர அவசரமாக அரசியலில் நுழையத் துடிக்கும் இளைஞர்கள், திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் தெரிந்திருக்கவேண்டும் என்பதற் காகவே இத்தகைய கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றார். நமது தலைமுறையில் கலைஞர், பேராசிரியர், ஆசிரியர் வீரமணி இவர்கள் மத்தியில் நாம் வாழ்வதும், பேசுவதும், பழகுவதும் நாம் பெற்ற பேறு என்றும் குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், செவ்வாய்க்கிழமை தோறும் இத்தகு பாசறைக் கருத்தரங்கம் நடைபெறும் என்றும் அறிவித்தார். கம்பம் செல்வேந்திரன் தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் அவர்கள் தமது உரையில் முக்கிய மாகக் குறிப்பிட்டதாவது: தந்தை பெரியார் கொள்கையை ஆட்சியின்மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. அரசியலில் நுழைந்தது. தேர்தலில் போட்டியிடலாமா? கூடாதா? என்ற அடிப்படையில் திருச்சியில் நடை பெற்ற மாநில மாநாட்டில் தோழர்களிடையே வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தலில் போட்டி யிட வேண்டும் என்று 52,942 பேரும், தேர்தலில் ஈடு படக் கூடாது என்று 4203 பேர்களும் வாக்களித்தனர். சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் போன்றவை - தந்தை பெரியார் கொள்கைகளுக்காக தி.மு.க. ஆட்சி சட்டம் இயற்றியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அர்ச்சகர் உரிமை
பெண் அதிகாரி
No comments:
Post a Comment