“கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று (30.10.2010) வெளியிட்ட அறிக்கை:
ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று (30.10.2010) ஆய்வுக் கூட்டம் நடந்தது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் அனைத்தும் தரமானதாக இருக்கிறதா என்பதை மேலதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கார்டுகள் தொடர்பாக மேல்முறையீடு செய்து, நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக முடிவு செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.
அதுவரை விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்டுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். புதிய கார்டு கேட்டு வந்துள்ள மனுக்களை கூடுதல் பணியாளர்கள் மூலம் ஆய்வு செய்து, வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், சென்னை ரேஷன் கடைகளுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு, மாநகராட்சி இடங்களில் தகுதியானதை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு வழங்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல் கொள்முதல் செய்யும்போது, 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டுமென்றும் முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், முதல்வரின் முதன்மைச் செயலாளர் (கண்காணிப்பு) கா.அலாவுதீன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன் மைச் செயலாளர் சுவரண் சிங், உணவு வழங்கல் ஆணையர் பாலசந்திரன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுவைன் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மீனவ சங்கங்கள், மண்ணெண்ணெயில் இயங்கக்கூடிய மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளைப் பயன்படுத்தும் மீனவர்களுக்கு மானிய விலையில், மாதம் 200 லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரி வந்தனர். ஆயத் தீர்வை, விற்பனை வரி, போக்குவரத்துக் கட்டணம் உட்பட ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் அடக்க விலை 43 ரூபாய் 94 காசு ஆகிறது. அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினைப் பொருட்படுத்தாது, மீனவர்களின் கோரிக்கையினை ஏற்று, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும் என்ற அடிப்படையில், மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் என்ற மானிய விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, படகு ஒன்றுக்கு மாதம் 200 லிட்டர் வீதம் வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். இந்த ஆணையின் காரணமாக 16 ஆயிரம் நாட்டுப் படகு மீனவர்கள் பயனடைவார்கள். அரசுக்கு ஆண்டுக்கு 77 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment