சீன தலைநகர் பீஜிங்கில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கியா, பாக்ஸ்கான், நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அந்த நிறுவனங்களின் தமிழக விரிவாக்க திட்டங்கள் பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீனா மற்றும் தென்கொரிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவர்கள் கூறுகையில், சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் எங்களது நிறுவனங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன. அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் தமிழக அரசுக்கும், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கூறுகையில், ``இரண்டு நிறுவனங்களும் விரிவாக்க திட்டங்களை மேற்கொள்வதற்கு தமிழகத்தில் மிகுந்த வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் திறன் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதனால், உங்களது நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களை தமிழ்நாடு உருவாக்கி கொடுக்க முடியும். அதோடு மட்டுமில்லாமல் உங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் மாநில அரசு உருவாக்கித் தரும்'' என்று தெரிவித்தார்.
எனவே, தமிழ்நாட்டில் நோக்கியா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் தங்களது விரிவாக்கத் திட்டங்களை விரைவில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா நிறுவனம், உலகிலே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதன் உற்பத்தி பிரிவு சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் 30 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. பாக்ஸ்கான் நிறுவனம், உலகிலே மிகப்பெரிய எலக்ட்ரானிக் ஹார்டுவேர் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம், நோக்கியா நிறுவனத்திற்கு பெரிய அளவில் உதிரிபாகங்களை சப்ளை செய்து வருகிறது. பாக்ஸ்கான் நிறுவனம் நேரடியாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை அளித்துள்ளது. நோக்கியா நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் தலைமையிடம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் அமைந்துள்ளது.
நோக்கியா, பாக்ஸ்கான் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் சந்திப்பிற்கு பிறகு, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவருடன் சென்றுள்ள அதிகாரிகள் சீன தலைநகர் பீஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டனர். தியானன்மென் சதுக்கம், பெரிய சுவர் உள்ளிட்ட இடங்களை அவர்கள் பார்வையிட்டார்கள்.
No comments:
Post a Comment