போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழக வெள்ளி விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். துணை வேந்தர் எஸ்.ரங்கசாமி வரவேற்றார். விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
ராமச்சந்திரா மருத்துவமனையின் நிர்வாக பொறுப்பை அரசு எடுத்து கொண்டது. பின்னர், நீதிமன்ற தீர்ப்பு மூலம் அரசாங்கத்திடம் இருந்து மீண்டும் அவர்களுடைய பொறுப்புக்கு வந்தது. அரசாங்கத்தின் பொதுத் துறையின் கீழ் மருத்துவமனை இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பு பெற்றிருக்குமோ, அதைவிட கூடுதலாக இந்த மருத்துவமனையை சிறப்புடன் நிர்வாகம் செய்து மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து இன்று வெள்ளி விழா கொண்டாடுகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
2 வருடங்களுக்கு முன்பு நான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது என்னை மருத்துவர்களும், செவிலியர் களும் மிகவும் அன்போடு கவனித்துக் கொண்டார்கள். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அன்றிரவு டாக்டர் மார்த்தாண்டமும், டாக்டர் தணிகாசலமும் ஸ்கேன் எடுப்பதற்காக என்னை அழைத்து செல்லும்போது அந்த வலியின் கொடுமையில், அந்த இரவு நேரத்தில் நான் அலறிய அலறல் இங்குள்ள மரங்களுக்கு எல்லாம் நினைவிருக்கும் என்று கருதுகிறேன்.
நான் மருத்துவமனையில் இருந்தபோது எனது நண்பர்களும், தொண்டர்களும் எனது உடல்நிலை குறித்து கவலை அடைந்தபோது, இரண்டு மாதம் சிகிச்சை பெற்று நலமாக வீடு திரும்பினேன். உலகத் தரம் வாய்ந்த இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் அனைவரும் அன்போடும் பாசத்தோடும் பழகுவார்கள்.
காப்பீடு திட்டத்தின் கீழ் இங்கு ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று முழுவதும் குணமடைந்து வீடு திரும்புகிற குழந்தைகளை பார்த்து மிக மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்று ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் சிகிச்சை பெற இத்திட்டம் தொடங்கினாலும், இது வெற்றி பெற நான் மட்டுமோ, அரசோ காரணம் அல்ல. சிகிச்சை அளிக்கிற மருத்துவர்கள் தான் காரணம். மருத்துவர்களை நம்பியே இத்திட்டம் உள்ளது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் இயல்பான மனிதர்களாக நோயாளிகளிடம் பழக வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
முன்னதாக, ராமச்சந்திரா பல்கலைக்கழக உயர் ஆய்வு மையம் மற்றும் உயர்தர நச்சு சோதனை ஆய்வு மையத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். வெள்ளி விழாவையொட்டி கட்டப்படவுள்ள கட்டிட மாதிரியை திறந்து வைத்தார்.
ராமச்சந்திரா பல்கலைக்கழகம் தொடங்கியபோது, பல்கலைக்கழக ஆலோசனை குழு உறுப்பினர்களாக இருந்த அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, டாக்டர்கள் நடராஜன், ஞானதேசிகன், சுப்பிரமணியன் ஆகியோரை கவுரவித்தார்.
கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ், ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று முழுவதும் குணமடைந்த 6 சிறுவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். விழாவில், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், ஏ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மதிவாணன் மற்றும் எம்எல்ஏ, எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment