இலங்கை தமிழர்கள் உரிமை பெற்றவர்களாக வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 18.10.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
9&10&2010ல் சென்னை விமான நிலையத்தில் நான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்தபோது, கடிதம் ஒன்றை அவரிடம் அளித்தேன். அந்தக் கடிதத்தில், இலங்கை முகாம்களில் இருந்துவரும் 30 ஆயிரம் தமிழர்களையும் உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் விரைவில் மறுவாழ்வு அளிக்க இலங்கை அரசை பயன்தரத்தக்க முறையில் வலியுறுத்த வேண்டுமென்றும் மேலும் தாமதமின்றி அரசியல் தீர்வுக்கான செயல்முறையைத் தொடங்க இலங்கை அரசு வற்புறுத்தப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தேன். அவரும் அதுகுறித்து உடனடியாகக் கவனிப்பதாக என்னிடம் உறுதி அளித்தார்.
இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறுவதற்கு அரசியல் தீர்வு ஒன்று தான் நிரந்தரத் தீர்வாக அமைந்திட முடியும் என்று, இன்று நேற்றல்ல நீண்ட நெடுங்காலமாகவே தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது உனக்கும் உன்னைப் போன்றவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
29&1&1956ல் சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நான் முன்மொழிந்து பெரியவர் அ.பொன்னம்பலனார் வழிமொழிந்த தீர்மானத்தில், இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்த நாள் தொட்டு தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காகவும், உரிமைகளுக்காகவும், அரசியல்ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகவும், நாம் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றியும், பேரணிகள் நடத்தியும், உரியவர்களிடத்தில் முறையீடுகள் மூலமாகவும் வலியுறுத்தி வருகிறோம். இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை நமது ஆட்சியையே இழந்திருக்கிறோம்.
பிறகு அண்ணா விரும்பியபடி, 22&6&1958ல் தி.மு.க. சார்பில் நாடெங்கும் இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள் நடத்தப்பட்டது.
இலங்கை அரசியலாரை இணங்க வைக்கும் முறையில், தங்களுடைய நல்லுறவையும், செல்வாக்கையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்த வேண்டுமென்று இந்தியப் பேரரசினரை இப்பொதுக் கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று விளக்கமாகக் குறிப்பிடப்பட்டது.
அதன்பிறகும் இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய அமைப்பின் தலைவர்களையெல்லாம் மதுரைக்கு அழைத்து வந்து, இந்திய நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்கள் முன்னிலையில், சகோதரயுத்தம் கூடாது என்று 4&5&1986ல் வேண்டுகோள் விடுத்தோம். அந்த வேண்டுகோள் முழுமையாக மனப்பூர்வமாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமேயானால், வரலாறு வேறு வகையான வடிவத்தைப் பெற்றிருக்கும்.
இலங்கையில் நடைபெற்ற சகோதர யுத்தத்தின் காரணமாக, 1986ல் டெலோ இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டார்; 1989ல் கொழும்பு நகரில் பெருந்தமிழர் அமிர்தலிங்கம், ஈழப் போருக்கு ஆதரவாளரான யோகேஸ்வரன் கொல்லப்பட்டார்கள். அதே ஆண்டில், பிளாட் இயக்கத்தின் தலைவர் முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் கொல்லப்பட்டார்.
1990ம் ஆண்டில் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தைச் சேர்ந்த பத்மநாபா, அவரோடு 10 பேரும் கொல்லப்பட்டார்கள். அப்போதும் சகோதர யுத்தத்தால் விளைந்திடும் கொடுமைகளைப் பற்றியும், பேரிழப்புகளைப் பற்றியும் எடுத்துச் சொல்லி, சகோதர யுத்தத்தால் நாம் பாழ்பட்டு விட்டோம் என்பதை மறந்துவிடாமல், அந்தச் சகோதர யுத்தங்கள் ஏற்படுத்திய விளைவுகளை, இப்போது நாம் பெறவேண்டிய பாடமாகப் பெற்று, இப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கு, ஒற்றுமையாக இருந்து உதவிகள் செய்ய உறுதி எடுத்துக் கொள்வோம் என்று நான் சொன்னேன்.
சகோதர யுத்தத்தின் காரணமாக, இலங்கையிலே நடைபெற்ற சோகமயமான நிகழ்ச்சிகள், அவற்றினால் இலங்கைத் தமிழர்கள் பட்ட இன்னமும் பட்டுக் கொண்டிருக்கும் துன்ப துயரங்கள் ஆகியவற்றை சரித்திரம் நிச்சயமாக மறக்காது மன்னிக்கவும் செய்யாது.
இலங்கையிலே போர் தொடங்கி மேலோங்கியபோது, தமிழர்கள் பேரிழப்பைச் சந்திக்கத் தொடங்கியதைக் கண்டு, தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டிருக்கிறது. ஐ.நா. மன்றமே கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக, சுடுகாடாக ஆகிக் கொண்டிருக்கிறது. உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட ஆவன செய்திடுக என்று வேண்டுகோள் விடுத்ததுடன், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை முன்மொழிகிறேன் என்று நான் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
18&1&2009ல் ஜெயலலிதா அளித்த பேட்டியில், இலங்கை வேறு நாடு. எனவே, அந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு ஒரு எல்லை உண்டு. ஒரு போர் நடைபெறும்போது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்.
இதிலே எந்த நாடும் விதிவிலக்கல்ல என்று சொல்லியிருந்தார். அப்படிச் சொன்னவருக்கு ஆதரவாகத்தான் ஈழத் தமிழர்களுக்காக தான் மட்டுமே பிறவி எடுத்ததாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு சிலர் குரல் உயர்த்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்பதை வரலாறு உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் வருகிறது.
இன்னமும் உங்களுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையே என்று ராஜபக்சே போன்றோர் காரணம் சொல்லிக் கொண்டிருப்பது கவைக்குதவாத வாதமாகவே இருக்கிறது. அந்த வீண் வாதங்களையும், பிடிவாதங்களையும் விட்டுவிட்டு இலங்கையில் தமிழர்கள், இனியாவது உரிமை பெற்ற தமிழர்களாக வாழ்வதற்கு, இலங்கை அரசு உறுதியளித்து, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தாய்த் தமிழகம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கியவாறு இருக்கிறது. இந்த ஏக்கத்தைப் போக்க வேண்டியக் கடமை இந்தியப் பேரரசுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்டி அந்தக் கடமையை காலத்தே நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment