தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வு செய்தார். அப்போது வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர், குடிசைமாற்று துறை அமைச்சர், செய்தித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின்போது, வளர்ந்துவரும் வீட்டுவசதி தேவைகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தி தன் பொறுப்பில் வைத்துள்ள நிலங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களின் நடவடிக்கைகள் குறித்த விவரம், திட்டப்பணிகள், நில எடுப்புத் திட்டங்கள், குடியிருப்புகளுக்கும், மனைகளுக்கும் இறுதி விலை நிர்ணயம் செய்து விற்பனைப் பத்திரங்கள் வழங்குதல் ஆகியவை குறித்து ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தினார்.
மேலும், சென்னை பட்டினப்பாக்கத்தில் அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புப் புனரமைப்புத் திட்டம் செயலாக்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்து, அது தொடர்பாக விரைவு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை கூறினார். சென்னைப் பெருநகரப் பகுதியில் செயலாக்கப்படும் அரசின் இரண்டாம் முழுமைத்திட்டம் & 2026ன் செயலாக்கம், வளர்ச்சி, கட்டுப்பாடு ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்த முதல்வர், பொதுமக்களின் கருத்துகளுக்கேற்ப இத்திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்துவதில் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வளர்ந்துவரும் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றும்பொருட்டு, சென்னைப் புறநகர் துரித ரயில் திட்டம், வெளிவட்ட சாலை, சரக்குந்து நிலையம் ஆகிய திட்டப் பணிகளின் நிலை குறித்தும் அதிகாரிகளைக் கேட்டறிந்து, சென்னை மாநகரப் போக்குவரத்துகளில் நிலவும் நெரிசலை முற்றிலும் நீக்கிட வேண்டும் என்னும் கடமை உணர்வோடு இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான, ஜவஹர்லால் நேரு தேசிய நகர சீரமைப்பு திட்டம், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டம், ராஜீவ் காந்தி புனரமைப்புத் திட்டம், விரைவு ரயில் போக்குவரத்து திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும்போது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வீடுகள் அமைக்கும் திட்டம், ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு நலத் திட்டம் ஆகிய திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை ஆகாமல் இருக்கும் வீட்டுவசதி வாரியத்தின் மனைகள், வீடுகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்குரிய வழிமுறைகளை ஆராய்ந்து, அரசுக்குத் தக்க பரிந்துரைகளை அளிப்பதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஒன்றை அமைப்பதென்றும், அந்தக் குழு ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கையை அனுப்பி வைக்க கேட்டுக்கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.
பொதுவாக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களின் செயலாக்கம் மற்றும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, செலவின விவரம், செலவு செய்யப்பட வேண்டிய தொகையின் அளவு, ஆகியவற்றை ஆய்வு செய்து, இத்திட்டப்பணிகள் அனைத்தையும் தாமதமின்றி விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் முனைந்து செயல்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment