கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, October 28, 2010

ஜனவரிக்குள் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் - முதல்வர் கருணாநிதி


ஜனவரி மாதத்திற்குள் 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 26.10.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
எனது இளமைக் காலத்தில் ஏழையெளிய பாட்டாளி மக்கள் சிறுசிறு குடிசை வீடுகளில் வாழ்ந்து வந்ததை பார்த்திருக்கிறேன். அதனால் எனது உள்ளத்தின் அடி ஆழத்தில் ஒருவகை பாதிப்பு ஏற்பட்டிருந்ததையும் உணர்ந்திருக்கிறேன்.
மனிதன் வாழ்வதற்கு உணவு, உடை, உறையுள் இன்றியமையாத அடிப்படைத் தேவைகளாகும். உணவு என்பது அன்றாடம் எழும் தேவையாகும். உடை என்பது ஆண்டு தோறும் எழும் தேவையாகும். உறைவிடம் என்பது நிரந்தரத் தேவையாகும். ஒருமுறை உறைவிடம் ஒன்றை உருவாக்கிவிட்டால், வாழ்நாள் முழுதும் அந்தத் தேவையை நிறைவு செய்வதோடு, வாழ்நாளுக்குப் பிறகும் மரபுரிமையினர்க்கு அந்தத் தேவையை நிறைவு செய்திடப் பயன்படுவதாகும்.
உறைவிடத்தைப் பற்றிய இந்த உண்மையும் அதிலும் குறிப்பாக ஏழையெளிய பாட்டாளி மக்கள், விவசாயக் கூலிகள் ஆகியோருக்கு பாதுகாப்பான உறைவிடம் என்பது எட்டாக் கனியாக இருந்துவரும் நிலையும், இளமைக் காலத்தில் எனது உள்ளத்திலே ஏற்பட்ட உணர்வுகளும், ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் என்னைச் சிந்திக்கத் தூண்டின.
அதன் விளைவாகத் தான் இலவசமாக கான்கிரீட் வீடுகள் வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால், இதுவரை 68236 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு தரப்பட்டுள்ளன. குடிசைவாசிகள் மீது அ.தி.மு.க. ஆட்சி காட்டிய அக்கறைக்கும் ஆர்வத்துக்கும் எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், 20 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் குடிசைவாசிகளுக்குக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் மொத்தம் 38 ஆயிரம் தான். இதை, திமுக ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும்.
சென்னை அடையாறு ஊரூர்ப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜெயப்பிரகாஷ் நாராயண், “காந்தியடிகள் கண்ட கனவினை முதல்வர் கருணாநிதி நனவாக்கியதை எண்ணிப் பரவசம் அடைகிறேன்” என்று புகழ்ந்துரைத்தார்.
ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு அடித்தளம் அமைக்கும் சீரிய முயற்சியாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் ஆதிதிராவிடர் இலவச வீட்டுவசதிக் கழகம் 1974ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன்படி, ஓட்டு வீடுகளே கட்டப்பட்டு வந்த இத்திட்டத்திற்கு திமுக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கான்கிரீட் வீடுகள் கட்ட ஆணையிட்டது. இத்திட்டம் தான், இந்திரா வீட்டுவசதித் திட்டம் என மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், இதுவரை 7 லட்சத்து 85 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஜெயலலிதா அரசின் 10 ஆண்டு ஆட்சியில் 3 லட்சத்து 86 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன அதாவது திமுக அரசில் கட்டப்பட்டதில் பாதி அளவுக்குத்தான் ஜெயலலிதா ஆட்சியில் கட்டப்பட்டது.
மத்திய அரசில் உணவு அமைச்சராகத் திகழ்ந்த பாபு ஜகஜீவன்ராம், 1979ம் ஆண்டு ஜனவரியில் செங்கற்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் அரிஜன வீட்டுவசதிக் கழகத்தின் சார்பில் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளைத் திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது, “மக்கள் நல அரசு என்ற வார்த்தைக்கு உண்மையான விசுவாசத்துடன் தமிழக அரசு பணியாற்றி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வாடகை எதுவும் இல்லாமல் இலவசமாக இந்த வீடுகளை அரிஜனச் சகோதரர்களுக்கு வழங்குவது என்று முதலமைச்சர் கருணாநிதி முடிவு செய்திருப்பது, அவருடைய சீரிய மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு காட்டியுள்ள இந்தச் சிறந்த முன் உதாரணத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற முயலும் என்று நம்புவோமாக” என்று பாராட்டியது இன்றைக்கும் பழைய நாளேடுகளில் அப்படியே உள்ளன.
மீனவ சமுதாயத்தினருக்கு இலவச வீடுகள் கட்டித் தரவேண்டும் எனும் நோக்கில் 1975ம் ஆண்டு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது தான் மீனவர் இலவச வீட்டுவசதித் திட்டம். இந்தத் திட்டம் தான் பின் 1996ல், மீனவர் சமுதாய மேதை, சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பெயரில் மாறியது.
இத்திட்டத்தின் மூலம் இதுவரை 53 ஆயிரத்து 413 மீனவக் குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதில், பாதிக்கு மேல், அதாவது 28 ஆயிரத்து 174 வீடுகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டவை. மேலும், 8,495 வீடுகள் தற்போது மீனவர் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக கட்டப்பட்டு வருகின்றன.
இத்தகைய திட்டங்களின் தொடர்ச்சியாகவே, தற்போது கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்ற திட்டத்தைத் தமிழக அரசு உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிநாதமாக இருக்கும் குறிக்கோளே, குடிசைகள் இல்லாத கிராமங்கள் என்ற கனவை, நனவாக்குவது தான்.
21&1&2010ல் சட்டப் பேரவையில் ஆளுநர் உரையில், “இந்த அரசு மகத்தான சாதனைகள் புரிந்துள்ள போதிலும், மாநிலமெங்கும் ஏழை, எளியோர் மண் சுவர்களால் ஆன கூரை வீடுகளில் வசித்து வருவதால், இயற்கை இன்னல்களை எதிர்கொள்ளும் துயர்மிகு நிலை இன்னமும் தொடர்கிறது. மாநிலத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் இத்தகைய வீடுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 21 லட்சம் என அறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் மட்டும் இக்குடிசைகளை நிரந்தர இல்லங்களாக மாற்ற இன்னும் 30 ஆண்டுகள் ஆகும். எனவே முதற்கட்டமாக ஊரகப் பகுதிகளில் 21 லட்சம் வீடுகளில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் கூரை கொண்ட நிரந்தர இல்லங்களாக தமிழக அரசின் நிதியைக் கொண்டே மாற்றி அமைத்து, அவற்றை இலவசமாக அளிக்கும் மாபெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு வகுத்துள்ளது.
2010&2011ம் ஆண்டு தொடங்கி, இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டுகாலத்தில் முடிக்கப்படும். வரும் நிதியாண்டில் மூன்று லட்சம் நிரந்தர வீடுகள் கட்டப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 75 ஆயிரம் வீதம் மானியமாக வழங்கிட அரசு முடிவு செய்தது.
தமிழகத்திலுள்ள 12618 கிராம ஊராட்சிகளிலும், ஒரே நேரத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வீடும் 207 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. வீடு கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பொருட்களான சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் குறைந்த விலையில் அரசே வழங்குகிறது.
வெளிச்சந்தை விலையை விட குறைவான விலையில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.210 வீதம் 60 மூட்டை சிமென்ட் வழங்கப்படுகிறது. ஒரு வீட்டிற்குத் தேவைப்படும் 155 கிலோ கம்பி, சராசரியாக கிலோ ரூ.36 என்ற விலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, வெளிச்சந்தையில் சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பிகளின் விலை உயர்ந்தாலும், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் பயனாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
மேலும், மாவட்ட ஆட்சியர்கள், சூளை உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, வெளிச்சந்தை விலையை விடக் குறைவான விலைக்கு செங்கற்கள் கிடைத்திடச் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மணல் மற்றும் ஜல்லிக் கற்களை அரசு நிர்ணயிக்கும் விலையில் அல்லது வெளிச்சந்தை விலையை விடக் குறைத்துப் பெறுவதற்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உரிய நடவடிக்கையினை எடுத்துள்ளார்கள்.
இவை தவிர, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நல நிறுவனத்தின் மூலம் செங்கற் சூளைகள் அமைப்பதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதியுதவியும், கட்டடத் தொழிலாளர்களுக்குப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. மணல் மற்றும் ஜல்லிக் கற்களை அரசு நிர்ணயிக்கும் விலையில் அல்லது வெளிச் சந்தை விலையைவிடக் குறைத்துப் பெறுவதற்கும் தக்க நடவடிக்கையினை எடுத்து வருகிறார்கள்.
நாடெங்கும் வீடுகட்டும் பணிகள் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒருசில இடங்களில் வீடுகட்டும் பணி நிறைவு பெற்றிருக்கிறது. 10&10&2010ல் திருவாரூர் செல்லும் வழியில், சிதம்பரத்திற்கு அருகே வல்லம்படுகை என்ற கிராமத்தில் கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீட்டையும், வீட்டுச் சொந்தக்காரரின் மகிழ்ச்சியையும் கண்டு மனமார வாழ்த்தினேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் முடிந்து திரும்பிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னிடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் புகைப்படங்களைக் காட்டி வரும் டிசம்பர் மாதத்திற்குள் இரண்டு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
2011, ஜனவரி மாதத்திற்குள் மூன்று லட்சம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, ஏழையெளியோர் நிரந்தரமான கான்கிரீட் வீடுகளுக்கு உரிமையாளர்கள் என்ற சமுதாய அந்தஸ்தினைப் பெறுவார்கள். கலைஞர் வீடுவழங்கும் திட்டம் கிராமப் புறங்களில் பெற்றுவரும் பெரும் வரவேற்பினைக் கண்டு ஒருசில நாளேடுகளும், ஒருசில எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தில் ஏதாவது குறைகாண முடியாதா என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment