கேரள உயர் நீதிமன்றத்தில் லாட்டரி தொடர்பான வழக்கில் மெகா டிஸ்ட்ரிபியூட்டர் என்ற நிறுவனத்தின் சார்பில், தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜராகி வந்தார்.
இந்த வழக்கில் தமிழக அட்வகேட் ஜெனரலாக இருக்கும் ராமன் ஆஜராக கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, கேரள அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 8ம் தேதியன்று கேரள முதல்வர் அச்சுதானந்தன், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்திற்கு கருணாநிதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
பாலக்காட்டைச் சேர்ந்த மெகா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவன வழக்கில் மூத்த வக்கீல் என்ற முறையில் தான் ராமன், கேரள உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் என்ற முறையில் அல்ல. எனவே, அவர் இந்த வழக்கில் ஆஜராவதற்கு சட்டபூர்வமான தடை எதுவும் இல்லை. என்ற போதிலும் கேரள மாநில அமைச்சரவை எடுத்த முடிவின் அடிப்படையில் தாங்கள் எனக்கு கடிதம் எழுதி இருந்தீர்கள்.
அந்த வழக்கில் ராமன் ஆஜராக கூடாது என்று வேண்டுகோள் விடுத்து இருந்தீர்கள். இந்த விவகாரம் பற்றி நான் பரிசீலித்தேன்.
இதுபற்றி நான் அட்வகேட் ஜெனரல் ராமனிடம் பேசி, மேற்படி வழக்கில் இருந்து விலகிக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தேன்.
வழக்கில் ஆஜராக சட்டபூர்வமாக தடை இல்லை என்ற போதிலும், எனது வேண்டுகோளை ஏற்று இந்த லாட்டரி வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக ராமன் ஒப்புதல் அளித் துள்ளார். இந்த பிரச்னைக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment