ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று ஆய்வு நடத்தினார். ஆய்வுக் கூட்டத்தில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் மாலதி, நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் அலாவுதீன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிகளை முதல்வர் கருணாநிதி ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களில் ரூ.1000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் சிறப்புச் சாலை பணிகளை தரமான முறையில் முடிக்க அறிவுறுத்தினார்.
அடுத்ததாக சென்னயின் குடிநீர்த்தேவை மற்றும் வழங்கல் குறித்து ஆய்வுசெய்தார். பருவமழை மற்றும் கிருஷ்ணா நதி நீர்வரத்தை பொறுத்து வரும் 11 மாதத்துக்கு தேவையான அளவு குடிநீர் இருப்பதை கருத்தில் கொண்டு, அதன் மீது தனிக்கவனம் செலுத்த கேட்டுக் கொண்டார்.
நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உரிய காலத்துக்குள் முடிக்க வலியுறுத்தினார்.
ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்தின் கீழ் நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ரூ.9 ஆயிரத்து 296 கோடி மதிப்பிலான 310 திட்டங்களில் முடிவடைந்த 101 திட்டங்கள் நீங்கலாக எஞ்சிய திட்டங்களை முடிக்க தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை பெற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தினுடைய பயன்கள் அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளுக்கு கிடைக்கவும், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றத்தினை ஆய்வு செய்து குறித்தகாலத்திற்குள் திட்டத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மேலூர், விருதுநகர், காங்கேயம், வேலு£ர் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
அடையாறு பூங்கா பணிகளை தமிழ்ப்புத்தாண்டு அன்று திறக்க கேட்டுக் கொண்டார். தற்போது கட்டப்பட்டு வரும் 36 சமத்துவபுரங்களையும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வழங்கப்பட வேண்டிய சுழல்நிதி மற்றும் பொருளாதாரக் கடனுதவிகளை டிசம்பருக்குள் வழங்க உத்தரவிட்டார்.
முன்னதாக, டுபிட் கோ நிறுவனம் சார்பில் அதன் நிகரலாபத்தில் ஆதாய பங்குத் தொகையாக ரூ.ஒரு கோடியே 86 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் கருணாநிதியிடம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
No comments:
Post a Comment