சீனா மற்றும் தென்கொரிய நாடுகளுக்கு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். தென்கொரிய தலைநகர் சியோலில் தமிழகத்தில் தொழில் தொடங்க வாய்ப்புகள் என்ற கருத்தரங்கு நடைபெற்றது. அதில், பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டார்கள். அந்த கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
உலகில் 11 வது பொருளாதார வல்லரசாக விளங்கும் இந்தியா, 2015 ல் 8 வது இடத்துக்கும், 2050 ல் 3 வது இடத்துக்கும், அதாவது அமெரிக்காவுக்கு நிகராக வளர்ச்சியை பெறும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரிய நிறுவனங்களுக்கு இந்தியா, குறிப்பாக தமிழகம், ஒரு சிறப்பான சந்தையாக விளங்கி வருகிறது.
2000 ஆண்டு முதல் மார்ச் 2010 வரை, இந்தியாவில் தென்கொரியா ரூ.3 ஆயிரத்து 150 கோடி முதலீடு செய்துள்ளது. இதில், தமிழகத்தில் கணிசமான பங்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் மட்டும் தற்போது 160 கொரிய நிறுவனங்கள் உள்ளன. 2009 ல் சென்னையில் 3 ஆயிரமாக இருந்த கொரிய மக்களின் எண்ணிக்கை, இப்போது 8,400 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 5 கொரிய உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரியர்கள் சொந்த நாட்டில் வசிப்பது போல் வாழ்ந்து வருகிறார்கள். தென்கொரியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தென்கொரிய நிறுவனங்களுக்காக பிரத்தியேக தொழில் மண்டலம் ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் திறமையான தொழிலாளர்கள், தொழில் அமைதி, பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறப்பான வசதிகள், முதலீடு செய்வதற்கு உகந்த சூழல், தேவையான கட்டமைப்பு வசதி, தொழில் தொடங்க வருவோருக்கு மாநில அரசின் ஆதரவு போன்ற பல்வேறு காரணங்கள், தொழில் தொடங்குவதற்கு, சிறந்த மாநிலமாக தமிழகத்தை ஆக்கியுள்ளன.
இந்தியாவில் தொழில் முதலீடுகளை, ஈர்க்கும் முதல் 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதாக, பிரபல வால்ஸ்டிரீட் ஜர்னல்' பாராட்டியுள்ளது.
மொத்தத்தில் ஆட்டோமொபைல் தொழிலில் இந்தியாவில் அதிக உற்பத்தி மற்றும் அதிக ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மின்னணு ஹார்டுவேர் உற்பத்தியிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 1,700 சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
எனவே, தமிழகத்தில் உள்ள சிறப்பான முதலீட்டு வசதிகளையும், தொழில் தொடங்குவதற்கான சலுகைகளையும் கொரிய தொழில் நிறுவனத் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்றார்.
முன்னதாக, கூவம் நதியை சீரமைக்கும் நோக்கில், சியோலில், முன்பு அசுத்தமாக இருந்து தற்போது சுத்தப்படுத்தப் பட்டுள்ள சியாங்கிசி யான் நதியையும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சுற்றிப் பார்த்தார். அதன்பிறகு, சாம்சங் நிறு வன அதிகாரிகளையும் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக விவாதித் தார்.
No comments:
Post a Comment