ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அதிரடிகளை ஆரம்பித்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. புதிய சட்டசபையைப் புறக்கணித்துவிட்டு, பழைய கோட்டைக்கு இடம் மாறினார். அடுத்த தடம் மாறுதல்... தமிழகக் கல்வித் துறை விஷயத்தில் நடந்து இருக்கிறது. கடந்த தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட உருப்படியான திட்டங்களில் சமச்சீர் கல்வி முறையும் ஒன்று என்பது பெரும்பாலான கல்வியாளர்கள் கருத்து.
'பல்வேறு விதமான பாடத் திட்டங்களை வைத்துக்கொண்டு அனைவருக்கும் பொதுவான கல்வியை எப்படித் தர முடியும்? அனைத்து விதமான பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத் திட்டங்கள் தேவை’ என்று கல்வியாளர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லி வந்தார்கள். பெரிய அளவில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, இந்த முறையை அமல்படுத்தினார் கருணாநிதி. அந்த பாடத் திட்டத்திலும் பல குறைகள் இருந்தன... பிழைகள் இருந்தன. அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டியவைதான். ஆனால் அந்த பாடத் திட்டத்தையே அப்படியே தூக்கிக் குப்பையில் போடுங்கள் என்று ஜெயலலிதா உத்தரவிட்டு இருப்பதன் பின்னணி, கல்வித் துறையின் மீதான கரிசனத்தைவிட கருணாநிதி மீதான கோபம்தான் காரணமாக இருக்க முடியும்!
''சமச்சீர்க் கல்விப் புத்தகங்களை வழங்காமல் நிறுத்திவைக்க வேண்டும். பழைய முறைப்படியான புத்தகங்களை புதிதாக அச்சிட்டு வழங்குவதற்கு ஏற்ப, பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்க வேண்டும்!'' என்ற அமைச்சரவையின் இந்தத் திடீர் அறிவிப்பால், தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கால்வாசிப் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. பல குடும்பங்கள் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை வாங்கிவிட்டார்கள். இந்த நிலையில் அரசாங்கம் அறிவிப்பைச் வெளியிட்டுள்ளது.
சமச்சீர்க் கல்வியை ஆதரிக்கும் கல்வியாளர்கள் அரசின் முடிவுக்கு எதிராக வெகுண்டு எழுகிறார்கள். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ''நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டுதான் சமச்சீர் கல்வியை தி.மு.க. அரசு அறிமுகப்படுத்தியது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் துறை சார் வல்லுநர்கள் அடங்கிய குழு முடிவு செய்த பின்னர்தான், இந்தப் பாடத் திட்டம் கொண்டுவரப்பட்டது. புதிதாகப் பதவி ஏற்றுள்ள இந்த அரசு, வல்லுநர் குழுவின் பரிந்துரை எதுவும் இல்லாமல், சமச்சீர் கல்வி முறையை நிறுத்திவைப்பது நியாயம் அல்ல!'' என்றார் ஆவேசமாக. சமச்சீர் கல்வி பற்றி ஆராய்ந்து தி.மு.க. அரசுக்குப் பரிந்துரை செய்த பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரனிடம் பேசினோம். ''ஆட்சி மாறுவதற்கும் பள்ளிப் புத்தகத்துக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது. சமச்சீர் கல்விக்காகப் பொதுக் கல்வி வாரியம் ஒன்று ஏற்கெனவே அமைக்கப்பட்டு உள்ளது. தேவையானால், அந்தக் குழுவில் மாற்றம் செய்துகொள்ளலாம். ஆனால், அந்தக் குழுவுக்குத் தலைவராக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அல்லது இயக்குநரை நியமிக்கக் கூடாது. கல்வியாளர்களின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பாக அது இயங்க வேண்டும். சமச்சீர் கல்வி முறையைக் கொண்டுவருவதற்கு, அரசுப் பள்ளிகளில் போதுமான வசதிகளை முழுமையாகச் செய்து தர வேண்டும். இவை இல்லாமல், சமச்சீர் கல்வி என்று சொல்வது பொருத்தம் ஆகாது. எனவே, இதை முழுமையாகச் செய்தால்தான், சமச்சீர் கல்வியை உண்மையிலேயே நடைமுறைப்படுத்த முடியும்!'' என்றார். மக்கள் கல்வி இயக்க அமைப்பாளர் பேராசிரியர் கல்யாணி, ''கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 1-வது, 6-வது வகுப்புப் புத்தகங்களுக்கு மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதை, 'குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ என்ற அமைப்பின் மூலம் நடத்திய ஆய்வில், புள்ளிவிவர அடிப்படையில், எங்களால் சொல்ல முடியும். இந்தப் பொதுப் பாடத்திட்ட முறை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்குத்தான் சொந்தமானது என்று சொல்வது அபத்தம். கல்வியாளர்கள் சமூக ஆய்வாளர்கள், மாணவர் அமைப்புகள் உள்பட பல தரப்பினரின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகே, சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்பட்டது. இவ்வளவு பெரிய உழைப்பை ஒன்றுமே இல்லை என மறைக்க முயற்சிக்கின்றனர். சமச்சீர் பாடத் திட்டமானது தரம் குறைவானது. ஆறு மாதங்களில் இதைக் கற்பித்துவிடுவோம் என தனியார் கல்விக் கொள்ளையர் சொல்கின்றனர். கல்விச் சரக்கைப்பற்றிப் பேசுவதற்கு இவர்களுக்கு தகுதியே இல்லை. ஏராளமான தனியார் பள்ளிகளில் 9, 11-ம் வகுப்புப் பாடங்களை நடத்தாமல், 10, 12-ம் வகுப்புப் பாடங்களை இரண்டு ஆண்டுகளுக்கு நடத்திவிட்டு அதிக மதிப்பெண் பெறவைக்கிறார்கள். இதுதான் இவர்களுடைய தரத்தின் லட்சணம். கொள்ளை லாபம்தான் இவர்களின் குறிக்கோள். அதற்காகத்தான் சமச்சீர் கல்வியின் முதற் பயணத்துக்கே முட்டுக்கட்டை போடுகின்றனர். இதை, அரசு மட்டும் அல்ல... மாணவர்களும் பெற்றோர்களும் சேர்ந்து முறியடிக்கவேண்டும்!'' என்றார் ஆவேசமாக. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ''கல்வித் தரம் பாதிக்கப்படும் என்ற காரணத்துக்காகத்தான் இந்தப் புதிய பாடத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வல்லுநர் குழு அமைத்து, இதைச் சீராக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். உடனடியாக மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது'' என்றார். பாவம் மாணவர்கள்! நன்றி : ஜூனியர் விகடன் 29-மே -2011
No comments:
Post a Comment