‘ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டது திமுக’ என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
உலகம் முழுவதும் மே தினம் 01.05.2011 அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் உள்ள மே தின சின்னத்துக்கு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 01.05.2011 அன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழிலாளர் நலனில் அக்கறையை தொடர்ந்து நிலை நாட்டிக் கொண்டிருக்கிறது. 1969ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகுதான் தொழிலாளர் நலனுக்கு தனி அமைச்சகம், மே தினத்துக்கு அரசு விடுமுறை, தொழிலாளர் நல வாரியம், ஒப்பந்த தொழிலாளர் நலனுக்கு தனிச்சட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
தொழிலாளர்களின் பெருமையை நிலைநாட்டும் வகையில், சென்னை நேப்பியர் பூங்காவுக்கு, ‘மே தினப் பூங்கா’ எனப் பெயரிட்டு, அங்கு மே தின நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. நாளும் உழைத்திடும் ஏழை, எளிய தொழிலாளர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்; வளம் பெற வேண்டும் எனத்தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது இந்த அரசு. மே தினத்தை சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பரிதி இளம்வழுதி, மதிவாணன், மேயர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு எம்எல்ஏ., முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி, சற்குணபாண்டியன், தொமுச பேரவை தலைவர் குப்புசாமி, மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ்.பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment