கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, May 4, 2011

தாதா சாகேப் பால்கே விருது பெறும் திரைப்பட இயக்குனர் பாலசந்தர் முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்




தாதா சாகேப் பால்கே விருது பெறும் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர், முதல்வர் கருணாநிதியை 30.04.2011 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திரைப்படத் துறையில் சாதனை புரிந்ததற்காக இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு ‘தாதா சாகேப் பால்கே விருது’ வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு 30.04.2011 அன்று காலையில் வந்த இயக்குநர் கே.பாலசந்தர், முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கவிஞர் வைரமுத்து உடன் இருந்தார்.
பின்னர், கே.பாலச்சந்தர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
தாதா சாகேப் பால்கே விருது கிடைத்ததையொட்டி, முதல்வரை சந்தித்து, அவருடைய வாழ்த்தைப் பெற்றதை நான் என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன்.
இந்த விருது உங்களுக்கு கிடைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பெரும்பாலும் வடக்கிலே உள்ளவர்களுக்கு இந்த விருது கிடைத்து வந்த நிலையில், இப்போது நம்முடைய தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது.
ஒரு இயக்குநராக எனக்கு கிடைத்திருப் பது சந்தோஷமாக இருக்கிறது. இந்த விருது எனக்கு மேலும் உற்சாகத்தையும், இன்னும் நிறைய படங்களை இயக்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விருது எனக்கு கிடைத்தமைக்காக, தமிழ் திரையுலகத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், தமிழகத்திலுள்ள தமிழர்களுக்கு மாத்திரமல்லாது, உலகத்திலுள்ள எல்லா தமிழர்களுக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
இவ்வாறு கே.பாலசந்தர் கூறினார்.

தமிழ்த் திரைப்பட உலகில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பாலச்சந்தர் - கலைஞர் :

தமிழ்த் திரைப்பட உலகில் புதிய சிந்தனையைப் பாய்ச்சி, சமூகப் பிரக்ஞையை உருவாக்கி, திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பாலச்சந்தர் என, திமுக தலைவரும், முதல் அமைச்சருமான கலைஞர் கூறியுள்ளார்.

இயக்குநர் கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதையொட்டி கலைஞர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் தொடர்ந்து ஒளிவீசி வருபவரும், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கித் தயாரித்தவரும், பல படங்களுக்கு ஏற்கனவே தேசிய விருதுகளும் மத்திய அரசின் ‘‘பத்மஸ்ரீ’’ விருதும், தமிழக அரசின் ‘‘கலைமாமணி’’ விருதும் பெற்றவரும், தமிழ்த் திரையுலகில் பழுத்த அனுபவமும், ஏகோபித்த புகழும் கொண்டவரும், நீண்டநெடுங்காலமாக எனக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்பவருமான ‘‘இயக்குநர் சிகரம்’’ கே.பாலசந்தர் அவர்களுக்கு; திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தனது சீரிய பங்கை வழங்கியமைக்காக; மத்திய அரசு 2010ஆம் ஆண்டுக்கான ‘‘தாதா சாகேப் பால்கே விருது’’ வழங்கி அறிவித்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

‘‘தாதா சாகேப் பால்கே விருது’’ பெறும் முதல் தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாலசந்தர் என்பது கூடுதல் சிறப்பாகும். அருமை நண்பர் கே.பாலசந்தர் அவர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் புதிய சிந்தனையைப் பாய்ச்சி, சமூகப் பிரக்ஞையை உருவாக்கி, திருப்புமுனையை ஏற்படுத்தியவர். தமிழ்த் திரைப்படப் பரிணாமத்தில் அவர் ஒரு முக்கியமான மைல்கல் என்பதை யாராலும் மறுத்திட இயலாது.


கே.பாலசந்தர் அவர்களுக்கு இந்த விருதின் மூலம் அகில இந்திய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்திருப்பது கண்டு எனது உள்ளம் பேருவகை கொள்கிறது. நண்பர் கே.பாலசந்தர் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும், என் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு கலைஞர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment