கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 6, 2011

நீதியரசர் ரவிராஜ பாண்டியன் குழு புதிய கட்டணங்கள் அறிவிக்கும் வரை பள்ளிகள் பொறுமை கடைபிடிக்க வேண்டும் - முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்


நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு புதிய கட்டணங்கள் அறிவிக்கும் வரை பள்ளி நிர்வாகங்கள் பொறுமையை கடைபிடித்திட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி 05.05.2011 அன்று வெளியிட்டுள்ள கேள்வி & பதில் அறிக்கை:
** அருணாச்சல பிரதேச முதல்வர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது குறித்து?
*** பழங்குடி இனத்தில் பிறந்து, பவுத்த மதத்தை தழுவியவரும், அருணாச்சல பிரதேச முதல்வருமான டோர்ஜி காண்டு மரணம் அடைந்தது அறிந்து நெஞ்சம் பதைபதைக்கிறது. அவர்களது குடும்பத்தினர்க்கும், அருணாச்சல பிரதேச மக்களுக்கும் தமிழக அரசின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பாலயோகி 2002ம் ஆண்டிலும், ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி 2009ம் ஆண்டிலும் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தனர். இப்படி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் என்ற சோகச் செய்தியை கேட்கும்போதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த, மத்திய அமைச்சராக இருந்த எனது அருமை தம்பி என்.வி.என்.சோமு நினைவும் என் நெஞ்சில் எழுகிறது.
** சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கூடுதலாக கல்வி கட்டணம் வசூல் செய்வதாகவும், கூடுதல் கட்டணத்தை செலுத்தாவிட்டால் பள்ளியை விட்டு மாணவர்களை வெளியேற்றுவதாகவும் செய்தி வெளிவந்துள்ளதே?
*** தமிழகத்தில் தனியார் நடத்தி வரும் 12 ஆயிரம் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நியாயமான அடிப்படையில் முறைப்படுத்துவதற்காக நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை அந்த குழு நிர்ணயம் செய்தது. அப்படி நிர்ணயம் செய்த கட்டணத்தை 4 ஆயிரம் பள்ளிகள் நடைமுறைப்படுத்த முன்வந்தன. மற்ற பள்ளிகளின் நிர்வாகிகள் கட்டுப்படியாகாது என்று முறையிட்டனர். அவர்களில் ஒரு சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். பள்ளி நிர்வாகிகளை விசாரித்து, பள்ளியினுடைய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக் கருத்தில்கொண்டு, கட்டணத்தை நிர்ணயிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, நீதியரசர் கோவிந்தராஜன், தனது பொறுப்பிலிருந்து விலகிவிடவே, நீதியரசர் ரவிராஜ பாண்டியன் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவும், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தனது பணியை நிறைவேற்றி, முடிவுகள் எடுத்து, அறிவித்திடும் கட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில், ஒருசில பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், கட்டணத்தை செலுத்தாவிட்டால், மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றுவதாகவும் தகவல் வருகிறது. பள்ளிகளின் நிர்வாகிகள், இப்படி செய்வது சட்டப்படியானதோ, முறையானதோ, நியாயமானதோ அல்ல. இந்த மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்தால், அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பள்ளி நிர்வாகங்களுக்கு கட்டுப்படியாகக் கூடியதும், பெற்றோர்கள் தாங்கக் கூடியதுமான, புதிய கட்டணங்கள் அமையும் என்று ஏற்கனவே உணர்த்தப்பட்டுள்ளது. எனவே, நீதியரசர் ரவிராஜ பாண்டியன் குழு, புதிய கட்டணங்களை அறிவிக்கும் வரை, பள்ளி நிர்வாகங்கள் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்.
** ‘என்டோசல்பான்’ எனும் பூச்சிக்கொல்லி மருந்து தடை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளதே?
*** கேரள மாநிலத்தில் காசர்கோடு உள்ளிட்ட பகுதிகளில், முந்திரி தோட்டங்களில் பூச்சிகளை ஒழிப்பதற்காக என்டோசல்பான் மருந்து பயன்படுத்தப்பட்டதால், நூற்றுக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகி, மரணம் அடைந்தனர். எனவே, கேரள அரசு இந்த மருந்தை தடை செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாடு முழுதும் தடை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், இந்த மருந்தின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது. ஜெர்மனி, சுவீடன், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கனடா போன்ற 81 நாடுகள் தடை விதித்துள்ளன. தமிழகத்திலும், சில விவசாய சங்கங்கள் என்டோசல்பானை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
என்டோசல்பான், 1950களில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பயிர்களில், பூச்சிகளை அழிக்க வல்லதாகும். பருத்தி, மக்காச்சோளம், வெண்டை, மிளகாய் மற்றும் தேயிலை ஆகியவற்றில் பரவும் ‘அசுவினி’ என்ற பூச்சியையும், பருத்தி, தேயிலை ஆகியவற்றில் பரவும் ‘இலைப்பேன்’ என்ற பூச்சியையும், நெல் பயிரில் பரவும் ‘இலைசுருட்டுப் புழு’ என்ற பூச்சியையும், கட்டுப்படுத்துவதற்கு சாதாரணமாக என்டோசல்பான் மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. 2011, ஏப்ரல் 25 முதல் 29 வரை ஜெனிவாவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தினை தடை செய்வதற்கு ஒருமனதான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக, இந்தப் பூச்சி மருந்தின் நச்சுத்தன்மை குறைவாகவே உள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்றை அமைத்து என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து தகுந்த பரிந்துரைகளைப் பெற்று முடிவெடுத்து செயல்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
** அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதன் அளவு உயர்ந்திருப்பதாக செய்தி வந்துள்ளதே?
*** இந்தியாவில், அதிலும் குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது 20 சதவிகித அளவுக்கு உயர்ந்திருப்பதாக, 2010ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆய்வு, 2005&2006ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது, 27லிருந்து 47.3 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வும், விழிப்புணர்வும் வரவேற்கத்தக்கதாகும். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டுமென்று 2005ம் ஆண்டு மத்திய அரசு சட்டபூர்வமாக அறிவித்ததற்கு பிறகு, அயோடின் கலந்த உப்பின் உற்பத்தி 48 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 57 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்திருக்கிறது.
அயோடின் குறைபாடுதான் மூளை சிதைவுக்குக் காரணம். அயோடின் குறைவாக உள்ள பகுதிகளில் பிறந்து வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி 13.5 சதவிகிதம் மட்டுமே இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகும். ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும், 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் அயோடின் குறைபாடு காரணமாக மூளை பாதிப்புடன் பிறக்கின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோடின் கலந்த உப்பின் அருமையை அறிந்ததால்தான், 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், ‘‘பொது விநியோக திட்டத்தின்கீழ், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்குவோம்’’ என்று உறுதிமொழி தரப்பட்டுள்ளது.
** ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றதற்கு பிறகு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ‘‘இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா அதிக விலை கொடுத்துள்ளது’’ என்று சொன்னாரே அதன் பொருள் என்ன?
*** ‘அல் கய்தா’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன் எனும் ஒருவரை தீர்த்துக்கட்டி, வெற்றி கொள்வதற்காக, கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்கா 6 ஆயிரம் அமெரிக்க வீரர்களை பலி கொடுத்துள்ளது. இந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க வல்லரசு பல்வேறு நாடுகளில் நடத்திய போர்களின் காரணமாக, 12 லட்சம் அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இதற்காக, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், அமெரிக்கா செலவிட்ட தொகை 58 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
இந்த புள்ளிவிவரங்களையெல்லாம் படிக்கும்போது, நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. மத்திய அரசு இந்தியா முழுமைக்கும் தயாரித்த 2011&2012ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மதிப்பு, 12 லட்சம் கோடி ரூபாயாகும். இப்படி பார்க்கும்போது, பின்லேடனை அழித்திட, அமெரிக்கா செலவிட்ட தொகையை கொண்டு, இந்தியாவுக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு பட்ஜெட் தயார் செய்யலாம்.
தமிழக அரசின் 2011&2012ம் ஆண்டுக்கான பட்ஜெட் செலவு 99 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது, பின்லேடனை தீர்த்துக்கட்ட அமெரிக்கா செலவிட்ட தொகையை கொண்டு, 58 ஆண்டுகளுக்கு பட்ஜெட் தயார் செய்யலாம். இந்த அதிர்ச்சி தகவல்கள்தான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ‘‘அதிக விலை’’ என் று சொன்னதற்கான விளக் கமோ? போரில்லாத உலகம் எப்போது புலருமோ?
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment