பொதுக்கணக்கு குழு தலைவர் பதவியை முரளி மனோகர் ஜோஷி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு பற்றிய விசாரணை நடத்திய பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் வரைவு அறிக்கை டெல்லியில் வெளியிடப்பட்டது. அதில், முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா மீதும், பிரதமர் அலுவலகத்தின் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆனால், இந்த அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து உள்ளது.
பொதுக்கணக்கு குழுவின் வரைவு அறிக்கை வெளியானதை தொடர்ந்து, அந்த குழுவில் உள்ள காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் 27.04.2011 அன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் கே.எஸ்.ராவ், சைபுதீன் சோஸ், நவீன் ஜிண்டால், தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் முரளி மனோகர் ஜோஷி அரசியல் நோக்கத்துடன் அவசரப்பட்டு அறிக்கையை தயாரித்து இருப்பதாகவும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.
பொதுக்கணக்கு குழு உறுப்பினரான கே.எஸ்.ராவ் கூறியதாவது:
ஏற்கனவே திட்டமிட்டபடி கெட்ட நோக்கத்துடன் பாகுபாட்டுடன் பொதுக்கணக்கு குழு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசை சீர்குலைக்க வேண்டும்; அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முரளி மனோகர் ஜோஷி செயல்பட்டு உள்ளார். பொதுக்கணக்கு குழுவில் உள்ளவர்களின் ஒருமித்த கருத்துடன்தான் அறிக்கையை தயாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் முரளி மனோகர் ஜோஷி அவசரம் காட்டியது ஏன் என்று தெரியவில்லை?
விசாரணை அறிக்கையில் உள்ள விவரங்கள் ஊடகங்கள் மூலம் தெரியவந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 28.04.2011 அன்று நடைபெறும் பொதுக்கணக்கு குழு கூட்டத்தில் எதைப்பற்றி பேசுவது என்றே தெரியவில்லை. போதிய கால அவகாசமும் இல்லை.
குழு உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமலேயே முரளி மனோகர் ஜோஷி அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று கருதுகிறோம். அவர் பொதுக்கணக்கு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment