பெரம்பூர் அருகே 09.05.2011 அன்று நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. பாதிக்கப்பட்டோரை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் 10.05.2011 அன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பெரம்பூர் காந்திநகர், பல்லவன் சாலை பகுதியில் நூற்றுக்கும் அதிகமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள். பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள்.
09.05.2011 அன்று நள்ளிரவில் இந்த பகுதியில் உள்ள ஒரு குடிசையில் திடீரென தீப்பிடித்தது. வீட்டில் தூங்கியவர்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். தகவல் அறிந்ததும் பெரம்பூர், வியாசர்பாடியிலிருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. கோட்டப்பொறியாளர் கலியப்பெருமாள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. புகாரின் பேரில் திருவிக நகர் போலீசார் விசாரிக்கிறார்கள்.
தீவிபத்தில் பாதிக்கப்பட்டோரை துணைமுதல்வர் மு.க. ஸ்டாலின் 10.05.2011 அன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக வீடு கட்டிதர நடவடிக்கை எடுக்கும்படி மண்டலக்குழு தலைவர் வி.எஸ். சீனிவாசனுக்கு உத்தரவிட்டார். துணைமுதல்வருடன் மேயர் மா. சுப்பிரமணி, எம்எல்ஏ, வி.எஸ்.பாபு, வார்டு கவுன்சிலர் மாலதி ரமேஷ், பெரம்பூர் பகுதி செயலாளர் வி.எஸ்.ரவி, வில்லியம் மோசஸ் உள்ளிட்ட பலர் சென்றனர்.
இதை தொடர்ந்து அந்த பகுதியில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு உணவு, இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment