தொடர்ந்து 12ம் முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதி, 30.05.2011 அன்று எம்எல்ஏவாக பதவியேற்றார். அவருக்கும் துரைமுருகனுக்கும் சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து 11 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார். 12ம் முறையாக திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். கடந்த 23ம் தேதி சட்டசபையில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர். கருணாநிதியும் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற துரைமுருகனும் அன்றைய தினம் டெல்லியில் இருந்ததால் பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, இருவரும் 30.05.2011 அன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதற்காக 30.05.2011 அன்று காலை 11 மணிக்கு கோட்டைக்கு வந்த கருணாநிதியை திமுக எம்எல்ஏக்கள், கட்சி பிரமுகர்கள் வரவேற்றனர். பின்னர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சபாநாயகரிடம் வழங்கினார். கருணாநிதிக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சபாநாயகர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று, படிவத்தில் கையெழுத்திட்டார் கருணாநிதி. பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். பதவியேற்றதும் கருணாநிதிக்கு ஜெயக்குமார் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். துரைமுருகனும் எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.
கருணாநிதிக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின், வெளியே வந்த கருணாநிதியிடம், சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் செயல்பாடு எப்படி இருக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், கூர்ந்து கவனியுங்கள் என்றார்.
முன்னதாக கருணாநிதியை வரவேற்க மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சற்குணபாண்டியன், பொன்முடி, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சக்ரபாணி, கோவி செழியன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் வி.எஸ்.பாபு, ப.ரங்கநாதன், எஸ்ஏஎம் உசேன், மதிவாணன், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, துறைமுகம் காஜா, சுரேஷ்குமார், மதன், ராஜ்குமார், உள்பட பலர் வந்திருந்தனர்.
No comments:
Post a Comment