சபாநாயகருக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்று சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
27.05.2011 அன்று பேரவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயகுமார், துணை சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் (திமுக) பேசியதாவது:
சட்டப் பேரவை சபாநாயகராகவும், துணை சபாநாயகராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறேன். சபாநாயகர் ஆளும் வரிசையிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து பணியாற்றியவர். 2 முறை அமைச்சராகவும் கடமையாற்றியவர். இதன் மூலம் சிறந்த அனுபவம் பெற்றிருக்கிறீர்கள். சட்ட நுணுக்கம் அறிந்தவர். ஆளும் கட்சியின் நோக்கத்தையும், எதிர்க் கட்சிகளின் உணர்வையும் புரிந்து சபையை நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிரம்ப உண்டு. சட்டமன்ற ஜனநாயகம் பற்றி அண்ணா கூறும் போது நம் கை விரல்கள் போல பல கட்சிகள் உள்ளன. விரல்கள் 5 ஆக பிரிந்து இருந்தாலும் அவை ஒன்று சேரும் போது உருப்படியான காரியம் செய்ய முடிகிறது என்றார்.
பெரிய தேர் ஓடுவதற்கு காரணமாக இருப்பது சிறிய அச்சாணி தான். எனவே எண்ணிக்கையை பார்க்காமல் உணர்வுக்கு மதிப்பளித்து அவையை நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இந்த மன்றம் வரலாற்று சிறப்பும், பாரம்பரியமும் கொண்டது. எத்தனையோ தலைவர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். கிருஷ்ணா ராவ், புலவர் கோவிந்தன், சி.பா. ஆதித்தனார், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் போன்ற பலர் இந்த இருக்கையை அலங்கரித்துள்ளனர். அந்த வகையில் நீங்கள் இடம் பெறுவதை பாராட்டுகிறோம். ஊர் கூடி தேர் இழுக்கும் என்பார்கள். ஜனநாயக தேரை இழுக்க எதிர்க்கட்சி வரிசையில் உள்ள எங்கள் ஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும். எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment