திமுக தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்த நாள் விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஜூன் 4ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, திமுக தலைமை இலக்கிய அணி தலைவர் கா.வேழவேந்தன், செயலாளர்கள் கவிதைப்பித்தன், தஞ்சை கூத்தரசன் ஆகியோர் 29.05.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைமை இலக்கிய அணி மற்றும் தென்சென்னை மாவட்ட இலக்கிய அணி சார்பில், திமுக தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்த நாள் விழா, ஜூன் 4ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாதசுர மங்கல இசையோடு விழா தொடங்குகிறது. 5.30 மணிக்கு இசையரங்கமும், இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு தலைமை இலக்கிய அணி சார்பில், தமிழவேள் கலைஞர் இலக்கியப் பொற்கிழி வழங்கல் நிகழ்ச்சி நடக்கிறது.
வடசென்னை மாவட்ட கழக செயலாளர் வி.எஸ்.பாபு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.
மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் பொற்கிழியை வழங்குகிறார். இரவு 7.30 மணிக்கு தென்சென்னை மாவட்ட இலக்கிய அணி சார்பில், ‘தலைவர் கலைஞரின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணம் அரசியல் ஆற்றலா? இலக்கிய திறனா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. இதை ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார். மேயர் மா.சுப்பிரமணியன், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பட்டிமன்ற நடுவராக பங்கேற்கிறார். இதில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, செழியன் எம்எல்ஏ, புலவர் இந்திரகுமாரி உள்ளிட்டோர் பேசுகின்றனர். பூச்சி முருகன் நன்றி கூறுகிறார்.
No comments:
Post a Comment