கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 29, 2011

அரசுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் எழுதிய பாடலை நீக்கிவிட்டு புத்தகத்தை வெளியிடலாமே?


கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டவேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்கம் அளித்துள்ளார்.


தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் 27.05.2011 அன்று வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


2006 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டம் 2010 ம் ஆண்டு இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010 11 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6 ம் வகுப்புகளில் நடைமுறை படுத்தப்பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.


அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 1.3.2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கல்வியாளர்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு சமச்சீர் கல்வி சட்டத்தின்படி 2010 2011 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் விரிவாக ஆராயப்பட்டன.


சமச்சீர் கல்விமுறையை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தலாம் என்றும், முதற்கட்டமாக 2010 2011 கல்வி ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கும், அதனைத் தொடர்ந்து 2011 12 கல்வியாண்டில் பிற எஞ்சிய அனைத்து வகுப்புகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.


முதற்கட்டமாக 2010 2011 ம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு பாடத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் முதலாம் வகுப்புக்கு தேவையான 61 லட்சம் பாடப்புத்தகங்களும் ஆறாம் வகுப்புக்கு தேவையான 84 லட்சம் பாடப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு அவைகள் முறையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களும் கடந்த ஆண்டு அந்த புத்தகங்களை படித்து முடித்துள்ளார்கள்.

அரசின் கொள்கை முடிவின்படி 2011 2012 ம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ம் வகுப்புகளுக்கான பாடபுத்தகங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.


இந்த வகுப்புகளுக்கான பாட திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொது மக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை வலை தளத்தில் வெளியிடப்பட்டது.


எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும் அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்த காலக்கட்டத்தில் கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பது தான் தி.மு.கழகத்தின், ஏன் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கல்வியாளர்களின் நிலை. அதனை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்பதற்காகத்தான், எடுத்த எடுப்பிலேயே தான்தோன்றித் தனமாக அதனை அறிவித்து விடாமல், அதற்காக வல்லுநர்கள் குழு, கல்வியாளர்கள் குழு, அதிகாரிகள் குழு என்றெல்லாம் நியமித்து, அந்த குழுக்களை கொண்டு வெளிமாநிலங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்ய செய்து, அதன் பிறகு தான் படிப்படியாக சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, அது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் திடீரென்று அந்த திட்டத்தை கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து தயார் செய்யப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களையெல்லாம் வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவழித்து புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாக தயாரித்து, அதன்பிறகு அச்சடித்து அவற்றை விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறை தானா என்பதை அரசினர் எண்ணி பார்க்க வேண்டும்.


சமச்சீர் கல்வித்திட்டம் என்பது பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே சீரான கல்வியை வழங்கிட உருவாக்கப்பட்ட திட்டமாகும். மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் கல்வித் திட்டம், ஓ.எஸ்.எல்.சி., போன்ற பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களோடு ஒப்பிடும்போது, ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் போட்டியிட முடியாமல் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமை இருந்ததை போக்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.


சமச்சீர் கல்வித்திட்டம் குறித்து அ.தி.மு.க.வின் தற்போதைய முக்கிய கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்ழூனிஸ்டு கட்சி 24 5 2011 அன்று விடுத்துள்ள அறிக்கையில், "சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும், ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டு அச்சிடப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் முழுமையாக கை விடப்படுவதும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள் கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்திருப்பதையும், அ.தி.மு.க.வின் மற்றொரு தோழமைக் கட்சியான இந்திய கம்ழூனிஸ்டு கட்சி இன்று விடுத்துள்ள அறிக்கையில் "சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக கல்வித் துறையில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு அதனை தள்ளி வைப்பதாக அறிவித்திருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது'' என்று குறிப்பிட்டிருப்பதையும், அ.தி.மு.க.வின் மற்றொரு தோழமை கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி "தரமான கல்வியுடன் கூடிய சமச்சீர் கல்வி திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்து வோம்'' என்று கூறியிருப்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்வது பொருத்தமானதாகும்.


சமச்சீர் கல்வி திட்டம் குறித்து அ.தி.மு.க. அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே.சியாம்சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவின் மீது நீதியரசர்கள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் நேற்றையதினம் கூறும்போது, "சமச்சீர் கல்வி சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக்குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம் தானா? இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை இந்த நீதி மன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்'' என்று தெரிவித்து, அது இன்றைய ஏடுகளில் எல்லாம் பெரிதாக வெளிவந்துள்ளது.


இந்த நிலையில் நேற்றையதினம் இந்த துறையின் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் அந்த கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் போன்றவர்களிடம் சமச்சீர் கல்வி திட்டம் கைவிடப்பட மாட்டாது என்று கூறியதாக "தீக்கதிர்'' நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தி.மு.க. அரசினால் கொண்டு வந்ததை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் இந்த அரசின் அறிவிப்புக்கான காரணம் என்றால் அதைப் புரிந்து கொள்ள முடியும். தமிழகத்திலே அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றை பாடுவதற்காக மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்'' என்று தொடங்கும் பாடலில் "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன்'' என்ற வரியை நீக்கி விட்டுத்தான் தமிழக அரசின் சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழகத்திலே அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கச் செய்தேன்.

அந்தப்பாடல் தற்போது சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்களிலே இருப்பதால் இன்றைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தையே எதிர்த்திட முனையுமா? மேலும் கோவையில் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப் பாடல் அந்த புத்தகத்திலே இடம் பெற்றுள்ளது. அந்தப்பாடலில் தொல்காப்பியம், சிலம்பு, மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பர், அவ்வை என்றெல்லாம் அனைத்து இலக்கியங்களையும் இலக்கிய கர்த்தாக்களையும் பாகுபாடு பாராமல், இணைத்து எழுதிய பாடல் சமச்சீர் கல்விப்பாட புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளது தான் அரசின் இந்த முடிவுக்கு காரணமா? ஆம் என்றால் அந்தப்பாடல் நான் தொகுத்து எழுதியது என்பதையே எடுத்து விட்டு அல்லது அந்த பாடலையே முழுமையாக எடுத்து விட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே?


இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment