திமுக தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வியாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் விழா, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ஜூன் 2ம் தேதி நடக்கிறது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 88வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, முத்தமிழறிஞரை கவிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்கள் பாடிப் பாராட்டிப் போற்றும் விழா என்ற பெயரில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஜூன் 2ம் தேதி மாலை 5 மணிக்கு விழா நடக்கிறது.
விழாவுக்கு, முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தலைமை தாங்குகிறார். சென்னை மேயரும், திமுக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளருமான மா.சுப்பிரமணியன் வரவேற்கிறார். திரைப்பட பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பங்கேற்று கலைஞர் வாழ்த்து பாடுகிறார். ‘கலைஞர் ஒரு அண்ணா நூலகம்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து, ‘கலைஞர் ஒரு வள்ளுவர் கோட்டம்’ என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், ‘கலைஞர் ஒரு அறிவாலயம்’ என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி, ‘கலைஞர் ஒரு திரைக்காவியம்’ என்ற தலைப்பில் நடிகை குஷ்பு, ‘கலைஞர் ஒரு தொல்காப்பிய பூங்கா’ என்ற தலைப்பில் கவிஞர் அப்துல் காதர் ஆகியோர் பேசுகிறார்கள்.
தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு, திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் இ.ஜி.சுகவனம் எம்.பி., ஆர்.ராஜேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment