நாளும் உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் வளம்பெற வேண்டும் என, தொழிலாளர்களுக்கு கலைஞர் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முதல் அமைச்சருமான கலைஞர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில்,
மே நாள்! உழைப்பாளிகளின் பெருமையை உலகெங்கும் உரைத்திடும் உன்னதத் திருநாள்! உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த நாள், இந்த மே நாள்! மேதினி போற்றும் இந்நன்னாளில் தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் எனது இதயம் கனிந்த மேதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"திராவிட இனமே பாட்டாளி இனம்" என்றார், பேரறிஞர் அண்ணா. அவரது கொள்கை வழிநின்று பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தில் தொழிலாளர்களின் நலன்களைக் காத்திடும் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
1969 ஆம் ஆண்டிற்குப்பின் தொழிலாளர் நலனுக்குத் தனி அமைச்சகம், மே தினத்திற்கு அரசு விடுமுறை; தொழிலாளர் நல வாரியம், ஒப்பந்தத் தொழிலாளர் நலனுக்குத் தனிச் சட்டம்; விவசாயத் தொழிலாளர்கள் பயன்பெற குடியிருப்பு அனுபோகதாரர்கள் சட்டம்; விபத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் பயன்பெற தொழில் விபத்து நிவாரண நிதி; தொழிலாளர் கல்வி நிலையம் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டன; 1990ஆம் ஆண்டு மே தின நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நேப்பியர் பூங்காவிற்கு, ‘மே தினப் பூங்கா’ எனப் பெயரிட்டு; அங்கு மே தின நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது; வரையறுக்கப்படாத பல்வகைத் தொழில்களிலும் ஈடுபட்டு; எவ்விதப் பாதுகாப்புமின்றி அல்லல்படும் தொழிலாளர் குடும்பங்களின் மேம்பாட்டிற்காக உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம், விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 35 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுத் தாராளமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
தொழிலாளர்களுக்குத் தடையின்றி 20 சதவீத போனஸ், ஊக்கத் தொகை; நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம்; விவசாயக் கூலிகளாகவும், வேறுபல தொழில்களில் உழைப்பாளிகளாகவும் திகழும் ஏழை எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதியுதவி; உழைப்பாளி வர்க்கத்தின் பொது அறிவு வளர்ச்சிக்காக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்; தொழிலாளர் குடும்பங்களின் பசிப்பிணி போக்கிட ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்; உழைப்பாளிகளின் உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்; குடிசைகளில்லா கிராமங்கள், குடிசைப்பகுதிகளில்லா நகரங்கள் கொண்ட தமிழகம் காணும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை வழங்கி, நாளும் உழைத்திடும் ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் எனத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது இந்த அரசு என்பதனைச் சுட்டிக்காட்டி தொழிலாளர் சமுதாய உடன்பிறப்புகளுக்கு மீண்டும் எனது மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
வாழ்க மே தினம்! வெல்க தொழிலாளர் சமுதாயம்!
இவ்வாறு கலைஞர் தனது மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment