மறைந்த எழுத்தாளர் சின்னக்குத்தூசி, சுயமரியாதை சிந்தனைகளுடன் சமுதாய சீர்திருத்தவாதியாக வாழ்ந்து பலருக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மூத்த பத்திரிகையாளரும், திராவிட இயக்க சிந்தனையாளருமான சின்னக்குத்தூசியார் நிறைவேந்தல் கூட்டம் 29.05.2011 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னக்குத்தூசியின் நினைவு மலரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
சின்னக்குத்தூசி மிகப்பெரிய எழுத்தாளர். சுயமரியாதை சிந்தனைகளுடன் சமுதாய சீர்திருத்தவாதியாக வாழ்ந்து பலருக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். முரசொலி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட விருதை அவர் ஏற்க மறுத்தார். திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் பின்னர் விருதை பெற்றுக்கொண்டார். அந்த விருதுக்கான தொகையை அறக்கட்டளைக்கே அவர் திரும்பி வழங்கினார். எதற்கும் ஆசைப்படாமல், எதற்கும் தன்னை அடிமைப்படுத்திக்கொள்ளாமல், ஒரு சுயமரியாதை சுடரொலியாக வாழ்தவர். அப்படி வாழ்ந்த அந்த தன்மானச் சிங்கம் இன்றைக்கு நம்மிடத்தில் இல்லை. அவர் இல்லை என்று சொன்னாலும், அவர் விட்டுச்சென்றிருக்கூடிய அளப்பரிய அந்த உணர்வுகள் எல்லாம் இன்றைக்கும் நம்முடைய உள்ளத்திலே தேங்கி இருக்கிறது என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், மறைந்த சின்னக்குத்தூசி பெரியார் சிந்தனைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் மக்களிடம் பரப்பியவர். திராவிட இயக்க சிறப்பான எழுத்தாளர்களுக்கு சின்னக்குத்தூசி அவர்கள் பெயராலே, ஒவ்வொரு ஆண்டும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பாக பரிசு வழங்கப்படும் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், அக்ரஹாரத்தில் பிறந்த பெரியவருக்கு, அய்யா பெரியாரின் நினைவிடத்திலே நினைவேந்தல் எடுக்கக்கூடிய அளவுக்கு அவரது கொள்கை ஈடுபாடு இருந்திருக்கிறது என்பதுதான் பெரிய செய்தி என்றார்.
No comments:
Post a Comment