தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நமது எம்ஜிஆர் நாளிதழ் மீது முதல்வர் கருணாநிதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.ஷாஜகான், செஷ ன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
கடந்த 3ம் தேதி, நமது எம்ஜிஆர் நாளிதழில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:
சட்டம்& ஒழுங்கு, லஞ்ச வாவண்யம், விலைவாசி, மின்பற்றாக்குறை, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவற்றால் மக்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக திமுக அரசு இழந்துவிட்டது என்பது பல்வேறு கருத்துக் கணிப்புகளில் தெரியவந்தது. இதையடுத்து, கருணாநிதியால் வளர்ப்பு மகன் என்று புகழப்பட்ட உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட் எதிரணியை பிளவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஜாபர்சேட்டின் இந்த ஒருசார்பு நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரியவரவே, அவரை தமிழகத்திலிருந்து வேறு மாநில தேர்தல் பணிக்கு தேர்தல் ஆணையம் மாற்றியது. ஆனாலும், அவர் அந்த பணியை ஏற்காமல் விடுமுறை எடுத்துக் கொண்டு, சென்னையில் இருந்து கொண்டு கருணாநிதிக்கு ரகசிய ஆலோசனைகளை கூறி வந்ததுடன், உளவுத்துறையிலுள்ள தனது ஆட்கள் மூலம் திமுகவுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்தார்.
அவர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படிதான் காவல்துறை வாகனங்கள், அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனங்கள், �108� ஆம்புலன்ஸ்கள் மூலம் திமுகவினர் பணப்பட்டுவாடாவை தங்கு தடையின்றி செய்தனர்.கருணாநிதியால் வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு உள்பட பல்வேறு சலுகைகளைப் பெற்று வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட ஜாபர்சேட், அதற்கு நன்றிக்கடனாக கருணாநிதிக்கு பலவகைகளிலும் சட்டத்துக்கு புறம்பாக உதவி வருகிறார். கடுமையான சவால்களுக்கிடையே சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடித்தபோதிலும், வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்நிலையில், தமிழக காவல் துறையில் எந்த பொறுப்பிலும் இல்லாத முன்னாள் உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட் காவல் துறை உயரதிகாரிகளின் ரகசிய கூட்டத்தை கூட்டியுள்ளார். அதுவும் டிஜிபி அலுவலகத்திலேயே இந்த கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்டிருப்பதால், காவல் துறை தலைவருக்கும் இதிலே சம்பந்தம் இருக்கும் என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஜாபர்சேட்டின் நம்பிக்கைக்கு பாத்திரமான தற்போதைய, முந்தைய அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். 5 மணி நேர ஆலோசனைக்குப் பின் காவல் துறை அதிகாரிகள் கலைந்து சென்றுள்ளனர். தமிழ்நாடு காவல் துறைக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒருவர், காவல் துறை தலைவர் அலுவலகத்திலேயே இப்படி ஒரு கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்பதே காவல் துறை உயரதிகாரிகள் கேட்கும் கேள்வி.
காவல் துறையிலுள்ள கருணாநிதியின் அடிவருடிகள் இப்படி பகிரங்கமாக தங்களை இனம் காட்டிக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டு எண்ணிக்கையின்போது திமுகவுக்கு ஏற்படும் பிரச்னைகள் என் னென்ன, அப்போது அதனை எப்படி எதிர்கொண்டு திமுகவுக்கு சாதகமாக திருப்புவது என்பது குறித்து ஜாபர்சேட் ஆலோசனைகள் வழங்கியுள்ளார். பதவியில் இல்லாத போதிலும் இப்படி நடந்து திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உத்தரவுகளை பிறப்பிக்க, கலந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள் பக்தி சிரத்தையோடு அதைக் கேட்டுக்கொண்டார்களாம். இந்த சதிக்கூட்டம் பற்றி தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கிடைக்கவே உண்மைகளை கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யார், யார். பேசப்பட்ட விவரங்கள் என்னென்ன என்பது இப்போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும்போது இங்கு இருந்தால் திமுகவுக்கு சாதகமாக செயல்படுவார் எனக் கருதி அன்றாடப் பணிகளில் தலையிடா மலிருக்க வெளி மாநிலத்துக்கு மாற்றப்பட்ட காவல்துறை அதிகாரியான ஜாபர்சேட் பகிரங்கமாக கூட்டத்தை கூட்டியிருப்பதும், அதிலே காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருப்பதும் அதிர்ச்சி தரும் விஷயமாகவே கருதப்படுகிறது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எந்தவித ஆதாரமும் இல்லாமல் உள்நோக்கத்துடன் முதல்வரின் நற்பெயருக்கும் தமிழக அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் மீதும் அரசு மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அரசுப் பணிகளை செய்யவிடாமல் தடுக்க முயற்சி நடந்துள்ளது.
கருணாநிதி 5 முறை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று 6வது முறையாக பொறுப்பேற்கவுள்ளார். அவர் மீது தமிழக மக்களும் அதிக நன்மதிப்பும் மரியாதையும் உள்ளது. இவற்றைக் கெடுக்கும் வகையில் செய்தி வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500 மற்றும் 501ன் (அவதூறு பரப்புதல்) கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியர் பி.ஆர்.சண்முகம் மீதும், நாளிதழின் பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் வி.கே.சசிகலா மீதும் அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் விடுமுறைகால நீதிபதி ராஜகோபால் முன்னிலையில் 11.05.2011 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment