தொடக்கத்தில் இருந்தே குழப்பம். தேர்தல் நாள் வரையும் அக்குழப்பம் தீர்ந்த பாடில்லை.
தி.மு.க. தலைவர் கலைஞர் தன்கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப்பேசி, ஒதுக்கீடு செய்து கொண்டிருந்த நேரத்திலும் கூட, அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா அக்கட்சியின் கூட்டணித் தலைவர்களை அழைத்துப் பேசவில்லை. காத்துக் கொண்டிருந்தார்கள் மதிமுக, தேமுதிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள்.
ஒருவழியாக இரண்டாம் நிலைத் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் பேசினார்கள். மீண்டும் மீண்டும் இழுபறியுடன் பேசினார்கள். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது என்றார்கள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜெயலலிதா அறிவித்தார் அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளை. அதிர்ந்து போனார்கள் கூட்டணியினர்.
‘பாரம்பரியம் ’ மிக்க கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகளின் தலைவர்கள், தங்களின் பாலன் இல்லத்திலோ ‡ இராமமூர்த்தி நினைவு இல்லத்திலோ எதையும் பேசாமல், நேற்று முளைத்த தேமுதிக கட்சியின் வாயிலில் நின்று அதிமுகவுக்கு எதிராகப் பேசினார்கள். தங்களை மதிக்கவில்லை. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுக தொகுதிகளாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா. இதோ மூன்றாம் அணி அமைக்கிறோம் என்றார்கள். அதற்கு விஜயகாந்தே தலைவர் என்றும் சொன்னார்கள்.
மூன்றாம் அணி என்பது ஜெயின் வயிற்றில் புளியைக் கரைத்தது. திட்டமிட்டிருந்த அவரின் தேர்தல் பயணம் ரத்தானது. மீண்டும் பன்னீர்செல்வம் ‡ செங்கோட்டையன் சமாதானப் பேச்சு.
அவ்வளவுதான். மூன்றாம் அணி, விஜயகாந்த் தலைமை என்பதைக் குப்பையில் வீசிவிட்டுப் போயஸ் தோட்டம் ஓடினார்கள், கம்யூனிஸ்டுகள். வேறு வழியின்றி முதல்வர் கனவில் இருந்த விஜயகாந்தும் சரணாகதியானார். போயஸ் தோட்டத்தில். மதிமுக தலைவர் வைகோ வெளியேற்றப்பட்டார்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவுக்கு உற்ற துணையாக, அரசியல் நடத்திய வைகோவைக் கடைசிவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலேயே 7 அல்லது 8 சீட்டுதான் தருவேன் என்று சொல்லி, தானாகவே வெளியேறச் செய்தார் ஜெயலலிதா.
அடிப்படையில் வைகோ திராவிடச் சிந்தனை உடையவர். இது ஒன்றே அவரின் அறிவு ‡ படிப்பு ‡ துடிப்பு ‡ வேகம் ‡ ஆற்றல் இவைகளைப் பின்னுக்குத் தள்ளி “ நான் பாப்பாத்திதான் ” என்று சொன்ன ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட காரணமாயிருந்தது.
திமுக சார்பில் கலைஞர் தம் தேர்தல் அறிக்கையை, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அறிவாலயத்தில் முறையாக அறிவித்தார்.
அதிமுக தலைவியோ திடீரென திருச்சி செய்தியாளர்களிடம் தம் கூட்டணிக் கட்சித்தலைவர்களை அழைக்காமலே அவரின் தேர்தல் அறிககையை அறிவித்தார் ‡ ஏதோ பேட்டி அளிப்பது போல.
கலைஞர் திருவாரூரில் தன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் போது, கூட்டணித் தலைவர்கள், தொண்டர்கள் என உடன் சென்ற காட்சியைத் தொலைக்காட்சியில் மக்கள் பார்த்தார்கள்.
ஜெயலலிதா திருச்சியில் தன் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, “ நானும் உடன் வருகிறேன் ” என்று வலியச் சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் டி.கே.ரங்கநாதன் போன்றவர்களைக் கூட அதிமுக தலைமை மறுத்துவிட்டது.
கலைஞர் பிரச்சாரத்திற்கும் போகும்போதெல்லாம், அந்தந்த மேடையில் கலைஞருடன் கூட்டணித்தலைவர்கள், வேட்பாளர்கள் இருந்தார்கள்.
ஜெயலலிதா கூட்டணியில் அப்படி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. “ நவக்கிரகச் சிலைகளைப் ” போல, ஒவ்வொரு திசையில் ஒவ்வொருவரும் முகத்தைத் தீருப்பிக் கொண்டிருந்தார்கள். அதையும் தாண்டி, அத்திபூத்தாற்போல ஒரு மேடையில் கூட்டணித் தலைவர்கள் ஏறினார்கள். அங்கேயும் கூட்டணியின் பிரதானத் தலைவர் விஜயகாந்தைக் காணவில்லை.
அந்த மேடையில் பண்ருட்டி ராமச்சந்திரன் நாங்கள் ஒரே கூட்டணிதான். ஆனால் “ அடுத்த முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் ” என்று தெளிவாகப் பேசினார். பாவம் ! முதல்வர் கனவு புகழ் விஜயகாந்த் மீது அவருக்கு என்ன கோபமோ ! யாருக்குத் தெரியும்?
திமுக தன் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி,58 வயது தொடக்கம் முதியவருகளுக்கு இலவசப் பேருந்துப் பயணச் சலுகை, மகப்பேறு பெண்களுக்கு 10000 ரூபாய், ஏழைப் பெண்களின் திருமணச் செலவுக்கு 30000 ரூபாய் நிதி உதவி போன்றவைகளையும், அரசு நலத்திட்டங்களையும் இடம் பெறச் செய்திருந்தது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதிமுக அறிக்கையில் ஜெயலலிதா, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று நடைபாதைக் கடைக்காரர்கள் ஏலம் விடுவதைப போல், திமுக தேர்தல் அறிக்கையின் மறுபதிப்பாக, கூடுதல் ஒரு மிக்சி, கூடுதல் ஒரு கிரைண்டர் என்று சொல்லியிருக்கிறார். இது “ ஏட்டிக்குப் போட்டி ” என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். அதனால்தான், அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் இந்தப் போட்டி நகல் தேர்தல் அறிக்கை இடம் பெறாமல் போயிற்று.
கிடைக்கும் இடைவெளியில் நுழைந்து கொண்டு உளறிக் கொட்டும் துக்ளக் சோ கேட்கிறார், “ மிக்சி, கிரைண்டர் இலவசமாகக் கொடுக்கிறார்கள். அதை இயக்க மின்சாரத்தை யார் கொடுப்பார்கள் ” என்று.
சோ வீட்டில் மெழுகுவர்த்திகளை வைத்துக்கொண்டா இருக்கிறார்கள். மின்விளக்கு எரியவில்லையா? காற்றாடி சுழலவில்லையா? குளிரூட்டு இயந்திரம் இயங்கவில்லையா? அதற்கெல்லாம் யார் கொடுத்தார்கள் மின்சாரம்?
விஜயதாந்த் கேட்கிறார், இலவச அரிசி தருகிறாராம். அப்படியானால் “ குழம்புக்கு ” மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு அரசியல் தலைவரின் அறிவார்ந்த பேச்சு இது.
தன் வேட்பாளர் பெயரே தெரியாமல், மாற்றிச் சொன்ன விஜயகாந்த், தன் வேட்பாளரையே அடித்த விஜயகாந்த், “ என் கட்சிக்காரனை நான் அடிப்பேன் ‡ யார் கேட்பது ” என்று சொன்ன விஜயகாந்த், அதிமுக வேட்பாளருக்கு முரசு சின்னத்தில் வாக்கு கேட்ட விஜயகாந்த், மதிமயங்கி உளறிக் கொட்டும் விஜயகாந்த் சொல்கிறார், கலைஞர் தமிழ்நாட்டை விற்றுவிடுவாராம் !
அரசியல் தெளிவற்ற இந்தப் பேச்சுக்கு விடை “குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு” என்பதுதான்.
கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் பிரச்சாரம் அவர்களுக்கும் புரியவில்லை, மக்களுக்கும் புரியவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா “ அதிமுக தேர்தல் அறிக்கையில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பெருக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன ” என்று திருவாரூரில் கூறியிருக்கிறார்.
அடப்பாவமே ! இவர் திமுக அறிக்கையைப் புகழ்கிறாரா? அதிமுகவைப் புகழ்கிறாரா? திமுகவின் நகல் தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்பதைக் கூடவா புரியாமல் இப்படிப்பேசிக்கொண்டிருக்கிறார் இவர்.
மீண்டும் சொல்கிறார், “ திமுகவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கிராமப்புறப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டது ” என்று. ஆனால் “ அரசின் நலத்திட்டங்கள் அப்படியே தொடரும் ” என்று அதிமுக தேர்தல் அறிக்கை சொல்லும் வாசகம் திமுகவின் கடந்த கால நலத்திட்டங்களைப் பாராட்டுவதாக அல்லவா அமைந்திருக்கிறது. பிறகு ஏன் இந்த ராஜா இப்படி முரண்பாடாகப் பேசிக்கொண்டிருக்கிறார். இரகசியம் ஒன்றும் இல்லை‡ யாருக்கும் புரியாமல் பேசுவதுதான் அக்கட்சிகளின் வாடிக்கை. குறிப்பாக மக்களுக்குப் புரியக்கூடாது.
அடுத்து ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம். இதைத் தூக்கிப் பிடித்து அங்கலாய்க்கின்றன நாளிதழ்கள். என்ன சொல்கிறார் ஜெயலலிதா?
கலைஞர் கொள்ளைக்காரர். நாட்டைக் கொள்ளையடித்துவிட்டார். அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாளு அம்மையார் என்று சகட்டு மேனிக்குத் தனிநபர் விமர்சனம் செய்து அசிங்கமாக எழுதி வைத்துப் பேசுவதே அவரின் வாடிக்கை.
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, நகைக்கடையாய்த் தன் உடன்பிறவாத் தோழியுடன் காட்சிதந்த நடமாடும் நகைக்கடை ஜெயலலிதாவின் நிழல்படம், பத்திரிகைகளில் வெளிவந்ததே! மக்கள் மறந்தா போய்விட்டார்கள். 100 கோடி செலவில் வளர்ப்பு மகனின் திருமணத்தை நடத்தியவர் ஜெயலலிதா தானே! இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு ஜெயலலிதாவின் ஊழல் பண விவகாரம் தானே! இவர் சொல்கிறார் கலைஞர் கொள்ளையடித்து விட்டாராம்.
கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினர் மீதான தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அவரின் பிரச்சாரத்தில் நாட்டு நலன், மக்கள் நலன் என்று ஏதும் இல்லை.
தேர்தல் நெருங்கும் வேளையைப் பார்த்து உச்சநீதிமன்றத்தில் சு.சாமி என்ற ஒருவர் தொடுத்த வழக்கால், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கு வந்தது.
ஸ்பெக்ட்ரம் ஒன்று போதும், “ திமுக அவுட் ” என்று பேசினார்கள். பத்திரிகைகள் எல்லாம் இதையே முதன்மைச் செய்தியாக்கினார்கள். நாட்கள் ஆக ஆக, இதைப் புரிந்துகொண்ட மக்கள் 2001 வாஜ்பாய் ஆட்சி தொடக்கம் இதில் பலருக்குப் பங்கு இருக்கிறது என்று இப்பிரச்சினையைக் கண்டு கொள்ளவே இல்லை.
ஆனாலும் கூட “ தினமணி ” இதழ், ஸ்பெக்ட்ரம் பிரச்சினை வரும்போதெல்லாம் வேறு ஏதாவது பிரச்சினை வந்து, இப்பிரச்சினை அமுங்கிவிடுகிறது என்று அங்கலாய்த்தது. அதுவும் எடுபடவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள்.
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரே´ “ தேர்தல் நேரத்தில் அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப் படுவதை நாங்கள் தடுக்கிறோம். அதனால் தேர்தல் ஆணையத்தின் மீது ஆளுங்கட்சி அதிருப்தியில் இருப்பது வழக்கமான ஒன்றுதான் ” ( தினமணி : 9 ‡ 4 ‡ 2011 ) என்று கூறியிருக்கிறார்.
இதில் அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும், ஆளும் கட்சி அதிருப்தியில் இருக்கிறது என்றும் சொல்வதில் இருந்து எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக ஆணையம் இருக்கிறதோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்படத் தொடங்கிவிட்டது.
ஆனாலும் கட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லும் குரே´, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை பற்றி ஏதும் கூறாதது ஏன் என்று புரியவில்லை.
தேர்தல் ஆணையம் கெடுபிடிகள் குறித்த பொதுநலன் வழக்கொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் என்.ஜோதி வாதாடும் போது :
“ தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வானளாவிய அதிகாரம் இருப்பதைப்போலச் செயல்பட்டு வருகிறது. தேர்தல் கமிசன் நடவடிக்கை எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துகிறது. இந்தச் சர்வாதிகார நடவடிக்கையைக் கோர்ட் தடுத்து நிறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் தங்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கியிருப்பதாகத் தேர்தல் கமிசன் கூறுகிறது. ஆனால் சில நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. தேர்தல் கமிசன் நடிவடிக்கையில் தமிழகத்தில் மக்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. வியாபாரிகள் பொருட்கள் எடுத்துக் செல்ல அவதிப்படுகிறார்கள். நிதி நிறுவனங்கள் யாருக்கும் கடன் கொடுக்கவும் முடியவில்லை. தேர்தல் கமிசன் தொல்லையால் மக்கள் பணத்தை வெளியே எடுத்துச் செல்லவே பயப்படுகிறார்கள். ஆதாரம் கொடுத்தாலும் பணத்தைப் பறிமுதல் செய்து குற்றவாளிகளைப் போல எப்.ஐ.ஆர் போடுகிறார்கள்... இந்தியக் குடிமக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதி களைப் பிடிப்பது போல இயந்திரத் துப்பாக்கி ஏந்திய துணை இராணுவத்தினர் துணையுடன் மக்களிடம் சோதனை நடத்தி வருகின்றனர். எமர்ஜென்சி காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை ” ‡ என்று கூறியிருக்கிறார். தேர்தல் ஆணைய நடவடிக்கை எப்படி இருந்தது என்பதற்கு இது சான்று !
தமிழகத் தேர்தலில் மட்டும் சுவரொட்டி டிஜிட்டல் பதாகைகள் கூடாது என்று தடைவிதித்த ஆணையம் இதே நடைமுறையை மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் ஏன் கடைபிடிக்க வில்லை. ஒரு கண்ணில் வெண்ணெய் ; ஒரு கண்ணில் சுண்ணாம்பா?
தேர்தல் ஆணையம் ஏப்ரல் 13ஆம் நாள் வாக்குப்பதிவை நடத்தி முடித்துவிட்டது. மக்கள் வாக்களித்து விட்டார்கள். வாக்களித்த மக்களுக்குத் தேர்தல் முடிவை விரைவில் அறிய உரிமை உள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையம் வாக்களித்த நாளில் இருந்து 30 நாட்கள் கழித்துத் தேர்தல் முடிவை அறிவிக்க இருக்கிறது. ஏன்?
ஆணையம் சொல்கிறது, இந்தத் தேர்தல் முடிவு மற்ற மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பாதிக்குமாம்! எப்படிப் பாதிக்கும்? எந்த ஒரு விளக்கமும் இதுவரை இல்லை.
தமிழகம், கேரளம், மேற்குவங்கம், அசாம் போன்ற மாநிலங்கள் நிலம் சார்ந்தும், மொழி சார்ந்தும், அரசியல் சார்ந்தும் முற்றிலும் மாறுபட்டவை.
இந்த மாநிலங்களில் எல்லாம் ஒரே வகையான கட்சிகள் இல்லை. ஒரே வகையான கொள்கைகள் இல்லை. ஒரே வடிவிலான அரசியல் இல்லை. இம்மாநிலத் தலைவர்கள் வேறு வேறானவர்கள், ஒத்த கருத்துடையவர்கள் அல்ல !
அப்படி இருக்கும்போது எப்படி ஒரு மாநிலத் தேர்தல் முடிவு, மற்ற மாநிலத் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்? முரண்பாடாக இருக்கிறது.
இப்படி எதிர்க்கட்சிகளிடமும், ஆணையத் திடமும் பல்வேறு முரண்பாடுகள், அவைகளுக்குப் பத்திரிகைகளின் பேராதரவு இருந்த நிலையில்தான் கலைஞர், காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு, பாமக தலைவர் இராமதாசு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட ஏனைய தோழமைக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு தேர்தல்களம் கண்டார்.
அவர் தேர்தல் பயணத்தில் அவதூறு பேசவில்லை, ஏகவசனத்தில் யாரையும் புண்படுத்த வில்லை. தோழமைக் கட்சியினரைப் புறக்கணிக்க வில்லை.
தன் ஆட்சிக் காலத்தில் செய்த மக்கள் நலத் திட்டங்களைச் சொன்னார். இனி செய்ய இருக்கின்ற மக்கள் நலத்திட்டங்களையும் சொன்னார். அனைத்தையும் மக்கள் பார்த்தார்கள்.
அவர்களுக்குத் தெரியும் கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி, தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே ‡ இத்தேர்தல், என்று!
மயிலை மக்கள் ரசிப்பார்கள், ஆதரிப்பார்கள் ‡ வான்கோழியை...?
இருளைக் கிழித்து வருவது உதயசூரியன் !
தடையை கடந்து வருவது திமுகழகம்
மக்களின் விருப்பத்தை யார் தடுக்க முடியும் ‡ கலைஞர்தான் முதல்வர் ‡ ஆறாவது தடவையாக!
நன்றி : கருஞ்சட்டைதமிழர்
No comments:
Post a Comment