கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 1, 2011

2ஜி விவகாரம்: உண்மையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானம்


2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் உண்மையை நிலைநாட்ட திமுக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் 27.04.2011 அன்று திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தொடர்பாக அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை, இலங்கை பிரச்சனை குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2ஜி அலைக்கற்றை தொடர்பான தீர்மானத்தில், பூதத்தை பூனைக்குட்டி விழுங்கிவிட்டது என்று கூறுவதைப்போல, அனுமானமாக பலபல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக தலைமைக் கணக்காயர் தெரிவித்தது முதல் இந்தப் பிரச்சனையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயன்று வருவதை நாடறியும்.

2ஜி பிரச்சனையில் சிபிஐ விசாரணை தொடங்கப்பட்டு, அதன் தொடர்பாக தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவை கைது செய்து திகார் சிறையில் வைத்துள்ளனர். கலைஞர் தொலைக்காட்சிக்காக 200 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ள விவரம் ஆவணங்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரரான கனிமொழி, இயக்குநர் சரத் ஆகியோரை சிபிஐ 2வது குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கும் செய்தி வியப்பில் ஆழ்த்துகிறது.

2ஜி வழக்கை திமுக தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி, பல ஏடுகளும் ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதோடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியினரிடையே அவ நம்பிக்கையை உருவாக்கவும், கூட்டணியை உடைக்கவும், ஊழலையே கலாச்சாரமாகவும், வாழ்க்கை முறையாகவும் கொண்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். அப்படிப்பட்ட பிரச்சார மாயைக்கு திமுக இரையாகாது என்பதுடன், முறை அறிந்து செயல்பட்டு உண்மையை நிலைநாட்டும் சிறப்படைய திமுக. இந்த வழக்கிலும் உண்மையை நிலைநாட்டிட சட்டப்படியான நடவடிக்கையை திமுக மேற்கொள்ளும்.

இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு நடவடிக்கை தேவை: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானம்

இலங்கை போர் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.


போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது.


இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

புட்டபர்த்தி சாய்பாபா சிறந்த ஆன்மீகவாதி. சமுதாய தொண்டு அறம் புரிவதையே தூய பணியாக மேற்கொண்டு தன் வாழ்நாள் எல்லாம் அதற்காகவே செலவிட்டவர். தமிழகத்தின் மீதும் தமிழர்கள் பாலும் மிகுந்த அன்பு கொண்டு அவரது அறக்கட்டளை சார்பில் ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டு, முதல்வர் கருணாநிதி வேண்டுகோளின்படி கிருஷ்ணா நீரை சென்னை வாழ் மக்கள் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக அளிக்க முன்வந்தவர். அவர் இயற்கை அடைந்ததை எண்ணி இந்த குழு பெரிதும் வருந்துவதோடு, அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில் திமுக மீதும், திமுக அரசு மீதும் ஜெயலலிதா பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்களை குழப்பமடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். குறிப்பாக சில மூத்த அரசு அதிகாரிகள் பெயர்களை குறிப்பிட்டு தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று அந்த அதிகாரிகள் தமிழகத்தில் பல இடங்களில் வன்முறையை தூண்டி தேர்தல் நடத்த விடாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த திட்டமிட்டதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை குறைத்து விட்டதால் பணியாற்ற மாட் டார்கள் என்றும் கற்பனையான குற்றச்சாட்டுகளை அறிக்கை வாயிலாக சுமத்தி தேர்தலில் மக்களை திசை திருப்பும் காரியங்களில் ஈடுபட்டார்.
அவை தவறானவை என்று நிரூபிக்கப்பட்டதோடு, அவரது பொய் பிரச்சாரங்களை மீறி அமைதியாக நடந்த இந்த தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றிக்காக பாடுபட்ட முன்னணியினர் செயல் வீரர்கள், தொண்டர்களுக்கும், இந்த கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்களித்த பொதுமக் களுக்கும் இந்த குழு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது.

இவ்வாறு திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டதில் முடிவு எடுக்கப்பட்டது.

கனிமொழியை கட்சியின் தொண்டர் என்கிற முறையில்தான் பார்க்கிறேன்: கலைஞர்

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் பேசியதாவது,

என்னைப் பொறுத்த வரையில் நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கின்ற சூழ்ச்சிக்கு என்றைக்கும் அடி பணிந்தவனல்ல. என்னைத் தலைவனாகக் கொண்டு இயங்குகின்ற இந்த இயக்கமும் அடி பணிய வேண்டு மென்று கருதுகிறவனும் அல்ல. நானே கைது செய்யப்பட்டபோது கூட என்னை இழிவான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியபோது கூட அவைகளை சிரித்த முகத்தோடு தான் ஏற்றுக் கொண்டேன். இன்றைக்கு கனிமொழியை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலேதான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என்னுடைய மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது. நான் இன்று காலையில் ஒரு புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தேன். அரசு சார்பில் வேலையில்லாதோருக்கு பணிகள் கிடைக்கப்பாடுபட்டிருக்கிறோம் என்ற போதிலும் தொண்டறம் பேணும் அமைப்புக்களின் துணையுடன்; மாநிலங்களவை உறுப்பினர், கவிஞர் கனிமொழி அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட ஆட்சியர்களோடும், தொழில் நிறுவனங்களோடும் இணைந்து, காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலை வாய்ப்பினைத் தேடித்தரும் முகாம்களை நடத்தி, இந்த அனைத்து இடங்களிலும் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 998 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 36 ஆயிரத்து 297 பேர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 22 ஆயிரத்து 408 பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 19 ஆயிரத்து 98 பேர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் 17 ஆயிரத்து 2 பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 16 ஆயிரத்து 663 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் 5 ஆயிரத்து 77 பேர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 165 பேர் காரியாப்பட்டியில் 1 ஆயிரத்து 196 பேர். இவ்வாறு வேலை வாய்ப்பு கிடைத்தவர்களை அணியில் 55 ஆயிரத்து 656 பேர்களின் வேலை வாய்ப்பு ஆய்விலே உள்ளது. இவர்களுக்கும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புக் கூறு கள் உள்ளன என்றும் சொல்லியிருக்கிறார்கள். எனவே கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன். சென்னையிலே பல இடங்களில் மக்களைக் கவருகின்ற அளவிற்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் கிறித்தவ பெருமக்கள் இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக தங்களை இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இயக்கத்தின் மீது அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக, பொறுத்துக் கொள்ள முடியாமல், சகித்துக் கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப்படக் கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயிலிலே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்ககாத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்துக் கொண்டு வந்தேன்.

அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்ற பாடு எனக்குத் தான் தெரியும். நான் மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கி விடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதையெல்லாம் கூறினேன்.

இவ்வாறு கலைஞர் பேசினார்.

தனி ஈழமே திமுகவின் குறிக்கோள்: கலைஞர்

பின்னர் திமுக உயர்நிலைக்கூட்ட தீர்மானத்தை விளக்கி செய்தியாளர்களுக்கு கலைஞர் பேட்டி அளித்தார்.


கேள்வி: இலங்கையில் 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், இலங்கை அரசை போர்க் குற்றவாளி என்றும் ஐ.நா. அறிவித்து உள்ளது. இந்தப் பிரச்சினையில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

பதில்:
இன்று அது குறித்தும் தீர்மானம் போட்டிருக்கிறோம். எங்கள் கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்வோம்.

கேள்வி: இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கருத்து கூறியிருக்கிறாரே?

பதில்:
அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: இலங்கையில் தனி ஈழம் அமைய மத்திய அரசு உதவவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்:
அங்கு தனி ஈழம் அமைய வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். இன்று நேற்றல்ல, தந்தை செல்வா காலத்திலேயே தனி ஈழம் எங்கள் குறிக்கோள் என்பதை கூறியிருக்கிறோம். அதனை அடைவதற்கு முன்பு இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள் ஆகியோருக்கு இடையே சமத்துவ நிலை உருவாக வரைமுறைகளை வகுக்கவேண்டும் என்பது நாங்கள் வற்புறுத்தும் வேண்டுகோள்.

கேள்வி: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறதே?

பதில்:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதா மீதான சொத்து சேர்ப்பு வழக்கு பெங்களூரில் நடந்து வருகிறது. அதற்கு அவர் கெடு மேல் கெடு கேட்டு தாமதித்துக் கொண்டு வருகிறார். அங்குள்ள உயர்நீதி மன்றத்தில் தடை வாங்குகிறார். இது நீடித்துக் கொண்டே போகிறது. மீண்டும் இந்தப் பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று அவர்கள் இறுதி முடிவு அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி: சி.பி.ஐ. நடத்தி வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியாக உள்ளதா?

பதில்:
இன்று நிறைவேற்றிய எங்கள் தீர்மானத்தில் இது பற்றி சொல்லி இருக்கிறோம்.

கேள்வி: இந்தப் பிரச்சினை உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?

பதில்:
தர்மருக்கு பாரதத்தில் ஏற்பட்ட சங்கடம் எங்களுக்கு ஏற்படாது. என்ன சங்கடம் என்பதை விவரிக்க விரும்பவில்லை.

கேள்வி: இந்த வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பற்றி ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று கூறியிருக்கிறீர்களே?

பதில்:
ஒவ்வொரு நாளும் காலையில் பத்திரிகை படிப்பவர்கள், மாலை இரவு டி.வி.யை பார்ப்பவர்களுக்கு இது தெரியும்.

கேள்வி: இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று கூறியிருக்கிறீர்கள். கனிமொழி முன் ஜாமீன் வாங்குவாரா?

பதில்:
இப்போது அது பற்றி சொல்ல இயலாது. இந்த வழக்கில் ஈடுபடக்கூடிய வழக்கறிஞர்கள் எடுக்க வேண்டிய முடிவு அது.

கேள்வி: அடுத்த மாதம் 6 ந்தேதி ஆஜராக வேண்டும் என்ற சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவுப்படி கனிமொழி ஆஜர் ஆவாரா?

பதில்:
சட்டப்படி அவர் நடந்து கொள்வார். பெங்களூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் ஜெயலலிதா இது வரை ஆஜராகவில்லை. உங்கள் கண்களுக்கு அது தெரியவில்லை.

கேள்வி: போபர்ஸ் வழக்கில் சி.பி.ஐ. முறையாக செயல்படவில்லை என்ற கருத்து உள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. நடந்து கொள்ளும் முறைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:
பழைய விவகாரங்களை கிளற விரும்பவில்லை.

கேள்வி: 87 வயதான உங்களுக்கு நீண்ட அரசியல் அனுபவம் உள்ளது. ஊடகங்களும், சில சதிகளும் உங்களை தலைமைப் பதவியில் இருந்து அகற்றி விடும் என்று நம்புகிறீர்களா?

பதில்:
இயற்கை ஒன்றுதான் என்னை அகற்ற முடியும்.

இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் பதில் அளித்தார்.

சட்டப்படி சந்திப்போம் - கனிமொழி எம்.பி. பேட்டி :

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 27.04.2011 அன்று காலை நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த கனிமொழி எம்.பி.யை நிருபர்கள் பேட்டி கண்டனர்.

அப்போது ஒரு நிருபர் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதே? இது குறித்து என்ன கருத்து சொல்கிறீர்கள் என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த கனிமொழி, வழக்கு கோர்ட்டில் உள்ளது, அதை சட்டப்படி சந்திப்போம் என்று கூறினார்.


No comments:

Post a Comment