அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வைகைச்செல்வம். இவர் தேர்தல் நேரத்தில் அறிவித்த ஒன்றை நிறைவேற்றவில்லை என்று ஒரு வார இதழில் செய்தி வெளியாகி இருந்தது.
இந்த செய்தியை ஜெராக்ஸ் பிரதி எடுத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய திமுகவினர் சிலர் ஏற்பாடுகளைச் செய்தனர்.
அருப்புக்கோட்டை திமுக நகர செயலாளர் மணி இந்த வார இதழில் வந்த செய்தியை பந்தல்குடி ரோட்டில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் கடையில் ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்தார்.
இந்த ஜெராக்ஸ் பிரதிகள் பண்டல்களாக கட்டப்பட்டன. இதுகுறித்த தகவல் டவுன் எஸ்ஐ பத்மாவதிக்கு தெரிய வந்தது. விரைந்து வந்த அவர் ஜெராக்ஸ் பண்டல்களை பறிமுதல் செய்தார்.
மேலும் விசாரணைக்கு வரும்படி நகர திமுக செயலாளர் மணியை போலீஸ் ஸ்டேஷனுக்கு எஸ்ஐ அழைத்தார். தன் மீது எந்த புகாரும் இல்லாத போது தான் ஸ்டேஷனுக்கு வர முடியாது என்று மணி தெரிவித்தார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், நகராட்சித் தலைவர் சிவபிரகாசம், துணைதலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர் சிக்கந்தர், மீனவரணி செயலாளர் சோலையப்பன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டனர். போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் மேலும் முற்றியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்த அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி விரைந்து வந்து, திமுகவினரை சமாதானப்படுத்தினார்.
இந்த ஜெராக்ஸ் பிரதிகளை விநியோகம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார். இதையடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
No comments:
Post a Comment