கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, May 5, 2011

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பற்றிய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கருத்து உதாசீனப்படுத்தக்கூடியதல்ல - முதல்வர் கருணாநிதி அறிக்கை


தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து உதாசீனப்படுத்தக் கூடியதல்ல என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 02.05.2011 அன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை வருமாறு:
சோ ராமசாமி இந்தப் பொதுத் தேர்தலில் ஜெயல லிதா தலைமையிலான அதிமுகதான் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைப்படுகிறாரே?
‘‘தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால், அந்தத் தீர்ப்பை நீங்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வீர்களா?’’ என்ற கேள்விக்கு; ‘‘ஏற்றுக் கொள்வேன். வேறுவழி? ஆனால் அந்த ஏற்பில், முழு மனது என்ன, கால் மனதுகூட இருக்காது. மக்கள், மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறபோது, முடிவு வேறுவிதமாக அமைந்தால், அதை எப்படி முழுமனதாக ஏற்க முடி யும்?’’ என்று சோ மிகவும் ஆதங்கத்துடன் அங்கலாய்த்துப் பதிலளித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில், தேர்தலுக்குப் பிறகு நடத்திய ஆய்வு, தி.மு.க கூட்டணி முன்னணியில் இருப்பதைக் காட்டுவதாக விளக்கியபோது, சோ ராமசாமி, தி.மு.க. முன்னணியில் உள்ளது என்பதை ஏற்க மறுத்ததோடு ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்று ஜெயலலிதாவைப் பாராட்டி பதிலுரைத்தார்.
14.1.2002 அன்று சென்னையில் பத்திரிகை ஆண்டு விழா நிகழ்ச்சியில் சோ ராமசாமி ‘‘இப்போது டான்சி உட்பட ஐந்து வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். 1991&1996 ஆண்டுகளில் பதவி வகித்த அதிமுக ஆட்சியின்போது ஊழல் நடந்தது உண்மையே. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் போட்ட வழக்குகளை பொய் வழக்கு என்றும் கூறமாட்டேன். அதிமுக ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றம் சாட்டியதில் எந்த தவறும் இல்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவ்வளவுதான்’’ என்று பேசியதை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
ஜெயலலிதா ஊழல் குற்றம் புரிந்தவர் என்றும், அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி என்றும் சாடிய அதே சோ தான், இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கி, ஆட்சிக்கு வர வேண்டுமென்று எண்ணுகிறார். ‘‘எண்ணங்கள் குதிரைகளானால், எண்ணிய நேரத்தில் காத தூரம் பறக்கலாம்’’ என்பது பழமொழி. முழு மனதென்ன, கால் மனதென்ன, மனதையே காலால் மிதித்து நசுக்கி விட்டவர்களுக்கு நாளொரு சிந்தனை, பொழுதொரு பேச்சு என்ற நயவஞ்சகப் போக்கு இருப்பதில் என்ன ஆச்சரியம்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமான பொதுக் கணக்குக் குழு அறிக்கையை, நாடாளுமன்றத்தின் சபாநாயகருக்கு, முரளி மனோகர் ஜோஷி அனுப்பி வைத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளதே?
இந்த குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே, பத்திரிகைகளுக்கு வெளி யானது குறித்து ஏற்பட்ட சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. 21 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவின் 11 உறுப்பினர்கள் அறிக்கையை நிராகரித்து விட்டனர். எனினும் ஜோஷி, அறிக்கையை மக்களவை சபாநாயகர் மீரா குமாருக்கு அனுப்பி வைத்து விட்டார். ஜோஷி அறிக்கை குறித்து சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. வரைவு அறிக்கையின் நகல் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்மீது பத்திவாரியாக உறுப்பினர்களின் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்த அறிக்கையில் ஏதாவது ஒரு பகுதியோ அல்லது முழுவதுமோ தங்களுக்கு ஏற்புடையது இல்லை என்று உறுப்பினர்கள் கருதினால், அதைப் பற்றி தனித்தனியாக அதே அறிக்கையில் பிற்சேர்க்கையாக பதிவு செய்து கொள்ளலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து பொதுக் கணக்குக் குழு விசாரித்திருக்க வேண்டும்.
குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதுதான் நடைமுறை. மாறாக, நாடாளுமன்றத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து, அதனை ஏற்றுக் கொள்வதும், நிராகரித்து விடுவதும், பெரும்பான்மை உறுப்பினர்களைப் பொறுத்ததாகும்.
ஜோஷி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, ‘‘பல உறுப்பினர்கள் வாக்கெடுப்பு வேண்டுமென்றார்கள். சிலர் அதை எதிர்த்தார்கள். எண்ணிக்கை முக்கியமானதல்ல. பின்பற்றக்கூடிய செயல்முறைதான் முக்கியமானதாகும். பெரும்பான்மை என்பதன் அடிப்படையில் என்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அறிக்கையினை பெரும்பான்மையினர் என்போர் நிராகரித்து விட முடியாது என்று சொன்னதாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்திருக்கிறார். ஜோஷி அப்படிச் சொல்லியிருந்தால், ஜனநாயகத்தின்மீது அவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்டும். ஜனநாயகம் என்பது எண் ணத்தை மட்டுமல்ல. எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசா ரணை வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, நாடாளுமன்ற நடவடிக்கைகளையே முடக்கியவர்கள் பா.ஜ.க.வினர். அப்படிப்பட்டவர்கள் ஜனநாயக நெறிமுறைகளுக்கும், நாடாளுமன்ற மரபுகளுக்கும் மாறாக, பொதுக் கணக்குக் குழு விவகாரத்தில் நடந்து கொண்டது எப்படி என்பதைத்தான் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.
இப்போது நடந்துள்ள நிகழ்ச்சிகளையெல்லாம் பார்க்கும்போது, நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதைவிட, அறிக்கையை வேகமாகத் தயாரித்து, அதிலுள்ள அம்சங்களை வெளியிடும் அவசரம் மட்டுமே தெரிகிறது. இந்த விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுப்பார். அவரது முடிவை அரசு ஏற்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கருத்து தெரிவித்திருப்பதையும், ஜோஷியே மீண்டும் பொதுக் கணக்குக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கேரளாவில், 90 வயதான மூதாட்டி ஒருவர் நான்காம் வகுப்பு தேர்வு எழுதியதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தீர்களா?
கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பாத்திமா பீவி என்பவர், சிறுவயதில் கல்வி கற்க முடியாத நிலை இருந்ததால், தற்போது வயது முதிர்ந்து, 90ஐ எட்டிய நிலையிலும் நான்காம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளார்.
குறைந்தபட்சம் நான்காம் வகுப்பு தேறியிருந்தால் மட்டுமே, அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளதால், அதுவும் தேர்வு எழுத அந்த மூதாட்டிக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது. இந்த வயதில் தேர்வு எழுத வேண்டுமென்ற ஆர்வம் காட்டிய பாத்திமா பீவியை பாராட்டி ஆக வேண்டும்.
அதனால்தான் அய்யன் திருவள்ளுவர், ‘கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?’ என்று கல்வியின் அரிய சிறப்பினை அழகாகச் சொல்லியிருக்கிறார்.
12வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவினை தயாரிப்பதற்குரிய முயற்சிகள் தொடங்கி விட்டதாக செய்திகள் வருகின்றனவே?
2012&2017ம் ஆண்டுகளுக்கான 12வது ஐந்தாண்டுத் திட்டத்திற்குரிய பணிகள் தொடங்கி விட்டன. இந்தத் திட்டம் 2012ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதற்கான அணுகுமுறை அறிக்கையைத் தயாரித்திடும் முயற்சியில் மத்திய திட்டக்குழு ஈடுபட்டிருக்கிறது.
ஐந்தாண்டுத் திட்டங்களுக்கான வரைவுகளைத் தயாரிப்பதில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகளிலிருந்து சற்று விலகி, அனைவரும் பாராட்டத்தக்க ஒரு மாற்றத்தை மத்திய திட்டக் குழு உருவாக்கியிருக்கிறது.
அதன்படி, தொடக்கம் முதலே மத்திய மாநில அரசுகளை மட்டுமல்லாமல், திட்டம் தயாரிப்பதில் ஈடுபாடும், அனுபவமும் உள்ள பொதுமக்கள், பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், அரசியல் பார்வையாளர்கள் என அனைவருடனும் கலந்தாலோசனை செய்யத் திட்டக்குழு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு மாறுதலாகும். இப்படிச் செய்வதால் திட்டம் தயாரிப்பதில் அனைவரையும் இணைத்துக் கொள்ளவும், பல்வேறு வகையான கருத்துக்களை அறிந்து கவனத்தில் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளைப் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறாரே?
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதிமுறைகளை தேர்தல் கமிஷன் கடைபிடித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் தேர்தல் கமிஷன் அதிக கெடுபிடி விதித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று ப.சிதம்பரம் சிவகங்கையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்க தாகும். தமிழகத்தில் எத் தகைய கெடுபிடிகள், காவல் துறை நடவடிக்கைகள், தேடுதல் வேட்டைகள், ஜனநாயக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில் விதிக்கப்பட்ட வரையறைகள் தேர்தல் ஆணையத்தால் கடைபிடிக்கப்பட்டன என்பதை அனைவரும் அறிவர்.
தேர்தல் ஆணையம் இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. தேர்தல் ஆணையம் என்பது விருப்புவெறுப்புகளை அகற்றி, அனைவருக்கும் பொதுவாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டிய ஒரு அமைப்பாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு அளவுகோள்களை தேர்தல் ஆணையம் கடைபிடித்திடக் கூடாது என்பதே சிதம்பரத்தின் கருத்தாகும்.
தேர்தல் ஆணையத்திற்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு, முறைப்படுத்த வேண்டுமென்பதில், அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஒரே அமைப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றுவது என்பது ஜனநாயகத்தை வளப்படுத்துவதற்கு உதவாது. இந்திய அரசியல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை.
ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி இருப்பதைப் போல நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிப்பதுடன், இதுகுறித்து அரசியல் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனநாயகத்தின் மீதும், நமது அரசியல் சட்டத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து; உதாசீனப்படுத்தக் கூடியதல்ல.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment