திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் கருணாநிதி 50,249 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி (தனி) ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி, திருவாரூர் திருவிக கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,09,337 பேர். பதிவான வாக்குகள் 1,71,927.
தபால் ஓட்டில் கருணாநிதிக்கு 746 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனுக்கு 49 வாக்குகளும் கிடைத்தன. முதல் சுற்று முடிவில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 5,257. அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் பெற்ற வாக்குகள் 2,794. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த அனைத்து சுற்றுகளிலும் கருணாநிதி தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
2வது சுற்றில் 6,296, 3வது சுற்றில் 7,002, 4வது சுற்றில் 6,293, 5வது சுற்றில் 5,564, 6வது சுற்றில் 6,283, 7வது சுற்றில் 6,175, 8வது சுற்றில் 7,653, 9வது சுற்றில் 6,815, 10வது சுற்றில் 6,840, 11வது சுற்றில் 6,332, 12வது சுற்றில் 5,443, 13வது சுற்றில் 5,240, 14வது சுற்றில் 5,749, 15வது சுற்றில் 4,359, 16வது சுற்றில் 5,634, 17வது சுற்றில் 5,710, 18வது சுற்றில் 5,623 வாக்குகளும் பெற்றார்.
இதன் மூலம், அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை விட 50,249 வாக்குகள் அதிகம் பெற்று கருணாநிதி வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,09,014. அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் பெற்ற வாக்குகள் 58,765.
தமிழக தேர்தல் வர லாற்றில் 12வது முறையாக சட்டப் பேரவை உறுப்பின ராக கருணாநிதி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
மக்கள் அளித்த நல்ல ஓய்வு
சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்வி அடைந்து இருக்கிறதே? என்ற நிருபரின் கேள்விக்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், “மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்” என்றார்.
திமுக அமைச்சரவை ராஜினாமா கடிதம் - ஆளுனர் ஏற்பு :
முதல்வர் கருணாநிதி 13.05.2011 அன்று மதியம் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை, ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடம் கொடுத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட ஆளுனர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இன்று தாங்கள் கொடுத்த கடிதத்தில் தெரிவித்தபடி நான், தாங்களின் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டேன். இருப்பினும், புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் வரையிலும், மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரையும் தற்போதுள்ள அரசே தொடர வேண்டும். மேலும், எனக்கு இதுவரை தாங்கள் அளித்து வந்த ஒத்துழைப்பு, ஆலோசனைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆளுனர் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவு குறித்து ஆலோசனை - கருணாநிதியுடன் தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு :
13.05.2011 அன்று திமுக தலைவர் கருணாநிதியுடன் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.
வாக்கு எண்ணும் பணி தொடங்கியதும் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் சென்றார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், ஆற்காடு வீராசாமி, மத்திய இணை அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், நெப்போலியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நடிகை குஷ்பு, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் சென்றனர். அவர்கள் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், வெளியே வந்த தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த 5 ஆண்டுகளில் சாதித்த சாதனைகளுக்கும், நலத் திட்டங்களுக்கும் உரிய பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணியும் வலுவாக இருந்தது. ஆனால், எதிர்பாராத முடிவு வந்தது. அரசியலில் வெற்றி, தோல்வி ஏற்படுவது சகஜம். மக்களின் முடிவுக்கு தலை வணங்குகிறோம். தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
நடிகை குஷ்பு கூறுகையில், ‘சட்டப்பேரவை தேர்தல் தோல்வி திமுக கூட்டணிக்கு கிடைத்த தோல்வி அல்ல; மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. திமுக அரசு 5 ஆண்டுகளில் மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியது. இனி 5 ஆண்டுகள் மக்கள் கஷ்டப்படுவார்கள். அப்போதுதான் ஏன் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தோம் என்று நினைத்துப் பார்ப்பார்கள்’ என்று கூறினார்.
No comments:
Post a Comment