கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, December 6, 2010

கலைப்புலி தாணு விலகல்! வைகோவுக்கு மனம் திறந்த மடல்!


ம.தி.மு.க. முன்னணி தலைவர்களில் ஒருவர் கலைப்புலி தாணு, அக்கட்சியில் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக இருந்தார். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ம.தி.மு.க.வில் இருந்து கலைப்புலி தாணு 06.12.2010 அன்று விலகினார்.


இதுகுறித்து வைகோவுக்கு கலைப்புலி தாணு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் கலைப்புலி தாணு கூறி இருப்பதாவது:

கடந்த சில தினங்களாக என் இளைய மகன் திருமணத்திற்கு கலைஞருக்கு முதலில் நான் அழைப்பிதழ் அளித்ததாகவும் உங்களுக்கு நான் அழைப்பிதழ் தரவில்லை என்றும், பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தி வந்து கொண்டிருப்பதால் அதற்கு விளக்கமளிப்பது எனது கடமை என்பதால் இதனை எழுதுகிறேன்.

வழக்கம் போல் எனது இளைய மகன் திருமணத்திற்கும் முதலில் உங்களுக்கு அழைப்பிதழை கொடுத்து விட்டுத்தான் மற்ற தலைவர்களுக்கு கொடுப்பது என்று தீர்மானித்து உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நீங்கள் என்னிடம் பேசவே இல்லை.

இதுபற்றி ம.தி.மு.க. அமைப்பு செயலாளர், வேலூர் ந.சுப்பிரமணியத்திடம் முறையிட்டேன். சுப்பிரமணியம் உங்களிடம் இதுபற்றி பேசிய போது அது எனக்கும், தாணுவுக்கும் உள்ள விஷயம், நீங்கள் தலையிட வேண்டாம் என்று பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

மகள் திருமணத்தின் போது நடந்தது...

1998ல் எனது மகள் திருமணத்தின் போது முதல்வர் கலைஞரையும் அழைத்தேன். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித் தலைவியையும் அழைத்தேன். 12 மந்திரிக ளோடு கலைஞரும் வந்தார். அப்போது அங்கே நீங்களும் இருந்தீர்கள். அடுத்து 2002 ல் மூத்த மகன் திருமணத்திற்கு கலைஞரையும் அழைத்தேன். அன்று முதல்வராய் இருந்த புரட்சித் தலைவியையும் அழைத்தேன். உங்களையும் அழைத்தேன். நீங்கள் வந்தீர்கள்.

ஆனால் இப்போது என் இளைய மகன் திருமணத்திற்கு மட்டும் அழைப்பிதழை வாங்க மறுத்தது ஏன் என்று தெரியவில்லை. நான் அழைப்பிதழ் தரவில்லை என்ற தவறான செய்தியை பத்திரிகைக்கு தருவதும் ஏன் என்றும் புரியவில்லை. பதிலையும் நானே சொல்கிறேன்.

உங்களை எதிர்த்து கேள்வி கேட்டதால்...

கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் ஆட்சி மன்றக் குழுவில் எம்.பி.க்கான வேட்பாளராக, தகுதியில்லாதவரின் பெயரை நீங்கள் சொன்ன போது நான் அதனை எதிர்த்தேன். கட்சிக்காக உழைக்கும் நாஞ்சில் சம்பத் போன்றவர்களுக்கு இடம் கொடுக்காமல், தகுதியில்லாதவருக்கு ஏன் தருகிறீர்கள் என கேள்வி கேட்டேன்.

நான் யாரை தகுதியில்லை என எதிர்த்தேனோ, அவரிடமே, முன்பெல்லாம் தாணு நான்கு சுவர்களுக்குள் என்னை கேள்வி கேட்பார் ஆனால் இன்று சபையிலேயே ஆட்சி மன்றக் குழுவிலேயே கேள்வி கேட்கிறார் என்று வருத்தப்பட்டிருக்கிறீர்கள்.

அன்றெல்லாம் நான் கேள்விகள் கேட்டதை நீங்கள் தவறாக நினைக்கவில்லை. ஏனென்றால் அன்று கட்சியில் பல முன்னணி தலைவர்களும் உடன் இருந்தார்கள். கட்சியின் நன்மை கருதி அவர்கள் கேள்வி கேட்டார்கள். கட்சியில் ஜனநாயகம் இருந்தது.

ஆனால் அந்த ஜனநாயகத்தை மதிக்காமல், தன்னிச்சையாய் கட்சி, நலனுக்கு எதிர்ப்பாய் நீங்கள் நடக்கத் துவங்கியதிலிருந்துதான் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியானது. கட்சிக்கு சொந்தமான புதிய தாயகம் கட்டிடத் துவக்க விழாவில், அண்ணா சிலையை திறந்து வைக்கும் போது இடம் பெற்ற கல்வெட்டில் வைகோ, எல்.ஜி., மு.கண்ணப்பன், பொன்.முத்துராமலிங்கம், செஞ்சி, ராமச்சந்திரன். கவிஞர் குடியரசு, கலைப்புலி தாணு, மதுராந்தகம் ஆறுமுகம் என 8 பெயர்கள் உள்ளன. ஆனால் இன்று.

கேள்வி கேட்கிறார்கள் என்று ஒவ்வொரு மூத்த தலைவர்களையும் கட்சியை விட்டு விலக வைத்தீர்கள். இன்று அந்த 8 பேரில் உங்களோடு இருப்பது நான் மட்டுமே. தி.மு.க.வில் இருந்து நீங்கள் வெளியேறிய போது, மீண்டும் உங்களை தி.மு.க.வில் இணைக்க தி.மு.க. தலைவர் கலைஞரிடம் நேரிலேயே அதிக உரிமையோடு உங்களுக்காக வாதாடியவன் நான்.

நானாக தேடி வரவில்லை...

ம.தி.மு.க. என்ற பெயரில் நீங்கள் தனி இயக்கம் கண்ட போது, நானாக உங்களை தேடி வரவில்லை., நீங்களாகத்தான் என்னைத் தேடி என் இல்லம் வந்தீர்கள். என் கரங்களைப் பற்றிக் கொண்டு கலங்கினீர்கள். அப்படி நீங்கள் என்னிடம் கலங்கிய நாட்கள் பல. உங்கள் கண்ணீரில் கரைந்தவன் நான். அதையே சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உங்களோடு என்னை இணைத்துக் கொண்டீர்கள் அதற்காக உங்களிடம் கட்சிப் பதவி எதையும் கேட்டதில்லை நான்.

நிழல் என்று சொன்னாலே நீதான் என் நினைவுக்கு வருவாய் என்றீர்கள். கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளல் போல், வைகோவிற்கு தாணு என்றீர்கள். அப்படி யெல்லாம் பாராட்டி கவிதையாய் பேசிய உங்களுக்கு தொடர்நது கேள்விகள் கேட்டதால் நான் சுடுகிற நிழலானேன், சடையப்ப வள்ளலாய் தெரிந்தவன் சங்கடம் தருபவனாகத் தெரிந்தேன். ஆகவே என்னையும் கட்சியை விட்டு விலக்க திட்டமிட்டே ஒவ்வொரு நிகழ்ச்சியாக என்னை புறக்கணிக்க ஆரம்பித்தீர்கள்.

கடந்த வருடம் நடந்த திருச்சி மாநாட்டில் அதை தொடங்கி வைத்தீர்கள். 15 வருடங்களாக எல்லா மாநாடுகளிலும் முக்கிய பொறுப்பகளில் இருந்து சிறப்பாக பணியாற்றிய என் பெயர் திருச்சி மாநாட்டின் அழைப்பிதழிலும் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சங்கொலியிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

அதனை பொறுத்துக் கொண்டேன். நாடக காட்சிகள் நடக்கும் போது எழுந்து செல்வது நாகரீகமாக இருக்காது என்பதால் தொண்டர்களுக்கு தொண்டாற்றி அமைதி காத்தேன்.

திருச்சி மாநாட்டில் புறக்கணிப்பு...

திருச்சி மாநாட்டை தொடர்ந்து கட்சியில் அடுத்தடுத்து நடந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் நான் புறக்கணிக்கப்பட்டேன். அதையும் தாங்கி கொண்டே கட்சி பணியாற்றினேன். இறுதியாக இந்த வருடம் செப்டம்பரில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டிற்கு நான் அழைக்கப்பட வில்லை. முற்றிலுமாக தவிர்க்கப்பட்டேன்.

இப்படியெல்லாம் தொடர்ச்சியாக என்னை இருட்டடிப்பு செய்வதாலும் அவமானப்படுத்துவதாலும் கட்சியை விட்டு நானாகவே போய்விட வேண்டும். தன்னை கேள்வி கேட்க யாரும் இருக்கக் கூடாது என்று நீங்கள் நினைத்தீர்கள். என் இல்லத்திருமண நிகழ்ச்சியை புறக்கணித்தது வரை அத்தனையும் அதன் பொருட்டு திட்டமிட்டு நடந்தவையே.

எம்.பி. தேர்தலில் நிற்க சொல்லி நீங்கள் என்னை வற்புறுத்திய போது எல்.ஜி. மு.கண்ணப்பன்
செஞ்சியார் போன்றவர்களோடு வந்து மீண்டும், மீண்டும் என்னை வற்புறுத்தி எம்.பி. தேர்தலில் நிற்க சொன்ன போதும் பதவி ஆசை இல்லை என உதறினேன். கட்சியில் பதவியையும் உதறி, கோடிகளில் பணத்தையும் இழந்த நான் மட்டுமா இன்று வேதனையில் உள்ளேன். தங்களின் ஆவேசப்பேச்சைக் கேட்டு, ரசித்து, கைத்தட்டிய தொண்டர்களில் பலரும் வெளியே சொல்ல முடியாத வேதனையில் தான் உள்ளனர்.

தாணு என்ற பெயரை சொன்னதும் அரங்கம் அதிரும் வண்ணம் கைத்தட்டி தொண்டர்கள் என் மனதை குளிர வைப்பார்கள். அந்த தொண்டர்களே எனது கோவில் அந்த தொண்டர்களை இயக்கத்தின் சார்பாகத்தான் பிரிகிறேனே தவிர இதயத்திலிருந்து பிரியவில்லை. என்றும் என் அன்பு வாசல் அவர்களுக்காக திறந்தே இருக்கும்.

உங்கள் சுயநலத்தால் உருவான வெறுப்பு...

நல்ல தொண்டர்களை பற்றி கவலைப்படாமல், நம்பி வந்த முன்னணியினரை பற்றி சிந்திக்காமல் எடுத்தேன். தொடுத்தேன் என சுய நலத்துடன், தனிப்பட்ட காழ்ப்புணர்வில் நீங்கள் அவ்வப்போது எடுத்திடும் முடிவுகள் மக்களால் மட்டுமல்ல உங்கள் மீது மதிப்புக் கொண்டவர்களிடமும் வெறுப்பை உருவாக்கியுள்ளது.

வீரம்.. போர்க்களத்தில் விளையாடும் போது புகழப்படும். தன்னலத்தால் சோரம் போகும் போது இகழப்படும். வீரனாக உங்களைப் பார்த்த தொண்டர்கள், இன்று ஏமாற்றத்தால் கேள்விக்குறியாய் நிற்கிறார்கள். ஏற்றத்தை இழக்கலாம். ஒரு காலும் தோற்றத்தை இழக்கக் கூடாது. இயக்கம் என்றால் அங்கே ஜனநாயக மலர்கள் பூத்துக்குலுங்க வேண்டும். கருத்து சுதந்திரம் வேண்டும் தொண்டர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் ம.தி.மு.க.வில் இடம் இல்லை என்பதை காலம் கடந்தே நான் புரிந்து கொண்டேன்.

ஆக, உங்கள் விருப்பப் படியே ம.தி.மு.க.வின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் உட்பட அடிப்படை உறுப்பினரில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலம் எல்லாம் எம் தமிழை ஆதரிப்பதுதான் என் பணியாக இருக்கும். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தொடர்ந்து தமிழ் பணியாற்றுவேன் எனக் கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். இதையே என் விலகல் கடிதமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment