கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 12, 2010

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக தனி வாரியம் அமைக்கப்படும் -


வெளிநாடு களில் வாழும் தமிழர்களின் நலனுக்காக தனி வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் கருணா நிதி அறிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ‘நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்‘ விருது வழங்கும் விழா தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நேற்று (11.12.2010) மாலை நடந்தது. விழாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக தலைவருமான கே.எம்.காதர் மொய்தீன் தலைமை வகித்தார். மாநாட்டில் தமிழக முதல்வருக்கு ‘நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்‘ விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

’’ எனக்கொரு குறை. பெரியாருடைய பெரும் தொண்டன், அண்ணாவின் அருமை தம்பி நான் என்பதையும் வாழ்த்திலே எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒன்றை விட்டுவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை? காயிதே மில்லத்தினுடைய அடியொற்றி நடந்தவன் நான் என்ற அந்த வாசகத்தை ஏன் விட்டு விட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய இயக்கத்தைப் பற்றிச் சொன்னால், அது சுயவிளம்பரமாகி விடும் என்று கருதி விட்டுவிட்டார்களோ - என்னவோ தெரியவில்லை. ஆனாலும், எனக்கு பெரிய மனக்குறை அது.

பெரியாரை, அண்ணாவை தமிழகத்திலே நினைவு படுத்துகிற நேரத்தில் காயிதே மில்லத்தை மறந்து விட்டால் நான் நம்முடைய பேராசிரியர் பெரியவர் என்பதால் இந்த வார்த்தைகளை ஜாக்கிரதையாகச் சொல்லுகிறேன் - மன்னிக்க முடியாத குற்றம். இரவு வீட்டுக்குச் சென்றாலும் அவருக்கு தூக்கம் வராது.

எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை நினைத்து நினைத்து மனம் உருகுவார் என்பதும் எனக்குப் புரியும். அதனால் தான் அவர் படிக்கும்போது மாத்திரமல்ல - படித்து முடித்த பிறகும்கூட - எடுத்து திரும்பத் திரும்ப பார்த்தேன். காயிதே மில்லத் பெயர் இருக்குமா; என்று. இல்லை என்பதற்காக நான் மீண்டும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.


இதற்கிடையே `நல்லிணக்க நாயகர்' என்கின்ற பெயர் எனக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. பட்டங்களை அளித்தவர்கள் என்ன உள்ளத்தோடு, எத்தகைய நம்பிக்கையோடு இதை வழங்கியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்து அவர்களுடைய உள்ளமும் மகிழ்கின்ற அளவிற்கு நடந்து காட்ட விரும்புகின்றவன் நான்.

அப்படி நடந்து காட்டுவேன் என்பதை இந்த நேரத்திலே, இந்த மாபெரும் மாநாட்டிலே உறுதியோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.


இந்த மாநாட்டில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகளையெல்லாம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையோடுதான் நீங்கள் இந்தத் தீர்மானங்களையெல்லாம் இன்றைக்கு எனக்கு அளித்திருக்கிறீர்கள். முதல் தீர்மானம் - சமச்சீர் கல்வியில் உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்ற தீர்மானமாகும்.


"நமது'' மொழியான உருது மொழிக்கு பெருமை சேர்க்க அதை சிறப்பு செய்ய, அதற்கு உரிமைகளைப் பெற்றுத் தர எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் இந்த அரசு அல்ல - இன்றைக்கு இந்த அரசு இருக்கலாம், நாளைக்கு வேறு அரசு வரலாம். (நீங்கள்தான் முதல்வராக வருவீர்கள் என்று, கூட்டத்தில் இருந்து குரல்) அது உங்களுடைய ஆசை. 40 ஆண்டுகள் நான்தான் முதலமைச்சராக இருப்பேன் என்று இங்கே மாநாட்டுத் தலைவர் "சாபம்''கூட (?) விட்டார். நான் அதை சாபமாகத்தான் கருதுகிறேன்.


40 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து நான் இன்னும் கஷ்டப்பட வேண்டும் - படாதபாடுபட வேண்டும் என்று நம்முடைய மாநாட்டினுடைய தலைவர் அவர்கள் விரும்புகிறார் என்றால், நான் என்ன சொல்வது? இன்னும் 40 ஆண்டுகள்.


என் மீது என்ன கோபம் உங்களுக்கு? இன்னும் 40 ஆண்டு காலம் கஷ்டப்படு என்கிறீர்களே என்றால், இயலாது - இயற்கை இடம் தராது - இடம் தருகின்ற வரையிலே மட்டும் சில காலம் இருந்து இந்த மக்களுக்கு, சமுதாய மக்களுக்கு என்னலான பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பேன்.


ஒரு சில அம்மையார்கள் எங்கள் தலையிலே குப்பை கொட்டத் தயாராக இருக்கிறார்கள். அப்படிக் கொட்டப்படுகிற குப்பையையெல்லாம் நாங்கள் எங்களுக்கு அளிக்கப்படுகின்ற பன்னீர்க் குளியல் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை - ஏற்றுக் கொள்கிறோம்.


எங்கள் தலையிலே குப்பை கொட்டியவர்களுக்கு அறிவு புகட்டுவோமே தவிர, நாங்கள் ஆத்திரப்பட்டு, எரிச்சல்பட்டு, அவர்கள் மீது கோபப்பட்டு, கொந்தளித்து, அதன் காரணமாக அமைதி இழந்து, நல்லெண்ணத்தை பரப்புவதற்கு பதிலாக, நச்சுக் கருத்துக்களைப் பரப்புகின்ற குற்றத்திற்கு ஆளாகி விடுவோம் என்பதை நாங்கள் மிக நன்றாக உணர்ந்தவர்கள்.


எனவேதான், இங்கே சொல்லப்பட்ட இந்தக் கருத்துக்கள் - கோரிக்கை வடிவிலே வந்திருக்கிறது. அதிலே ஒரு கோரிக்கைதான் - உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.


அனைத்துத் தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்ட பொதுகருத்துக்கள்; பாடத்திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பிப்பதற்கு 4 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்தல்; அனைத்து மொழிப்பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரித்தல்;

சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடத்துதல்; மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண் இடம் பெறச் செய்தல் - இதன்மீது உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்ற உறுதியை இந்த மாநாட்டிலே தெரிவித்துக் கொள்கிறேன்.


’தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில்,

மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, ``அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம்'' எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்'' ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.


வெளிநாட்டிலே இருக்கின்ற - இங்கிருந்து சென்ற தமிழர்கள் கூட அல்ல, அங்கே உள்ள தமிழர்கள் - அவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடினால், தங்களுடைய நலன்களுக்காகப் போராடினால், அவர்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - அந்த அரசின் சார்பில் நான் இங்கே சொல்லுகின்றேன் - ``அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் நல ஆணையரகம்'' எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்'' ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்யும்.

உலகப் புகழ் பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளைகள் மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதைப்போல, தமிழகத்திலும் அமைக்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம். நிச்சயமாக மத்திய அரசை இதற்காக வலியுறுத்துவோம் - வெற்றி பெறுவோம் என்பதை தெரிவிக்க விரும்பு
கிறேன்.

தமிழ்வளர்த்த முஸ்லிம் தமிழறிஞர்களைக் கண்டறிந்து அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்கள் மரபுரிமையர்க்குப் பரிவுத் தொகை வழங்கி வருகிறது.

இவ்வகையில் கா.மு. ஷெரிப், புலவர் முகம்மது நயினா மரைக்காயர் ஆகியோரின் மரபுரிமையர்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய்; புலவர் குலாம் காதிறு நாவலரின் மரபுரிமையர்க்கு 6 லட்சம் ரூபாய்; சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர், மணவை முஸ்தபாவின் மரபுரிமையர்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய்; டாக்டர் எஸ்.எம். கமால் அவர்களின் மரபுரிமையர்க்கு 7 லட்சம் ரூபாய் என மொத்தம் 43 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டு; 6 முஸ்லிம் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, மேலும் கோரிக்கைகள் வரப்பெறுமாயின் அதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
மத்திய இணை அமைச்சர் அகமது, மாநில அமைச்சர்கள் துரைமுருகன், அன்பரசன், மைதீன்கான், எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, தாம்பரம் நகராட்சி துணை தலைவர் காமராஜ், பல்லாவரம் நகராட்சி தலைவர் இ.கருணாநிதி, மாவட்ட நிர்வாகிகள் அப்துல் வகாப், அப்துல் ரசீத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment