கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

பிரச்சாரத்தை முடுக்கிவிடவேண்டும் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை


சட்டமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2ஜி அலைக்கற்றைப் பிரச்சினையில் ஊழல் என்று கூறி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை முடுக்கிவிட முனைந்துள்ளனர். இந்நிலையில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் (UPA) தனித்தனியாகவோ, கூட்டாகவோ தெருவில் இறங்கி மறுப் பிரச்சாரத்தை முடுக்கிவிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற இரண்டாவது தலைமுறை வரிசை அலைக்கற்றை வழங்கப்பட்ட முறையை சாக்காகக் கொண்டு, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை கடந்த 22 நாள்களாக முடக்கி, கூச்சல் குழப்பத்தால் நடத்திய வெட்கக்கேடு மிகப்பெரிய அண்மைக்கால தேசிய அவமானமாகும்!

நாடாளுமன்ற முடக்கத்தால் 22 நாள் செலவு ரூ.146 கோடி

சுமார் 146 கோடி ரூபாய் பொருள் இழப்பு - மக்கள் வரிப்பணம் பாழானதோடு, சென்றால் திரும்பவே பெற முடியாத நாடாளுமன்ற விவாத காலத்தையும் இழந்துள்ளது இரு அவைகளும்!

இப்படி கூச்சல் - குழப்பம் செய்யவா மக்கள் இவர்களை அனுப்பினார்கள்?

ஊழலை ஒழிப்பதுதான் தங்கள் இலக்கு என்பது உண்மையானால், பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் என்ன செய்திருக்கவேண்டும்?

பல்வேறு ஆதாரங்களை அங்கே தாக்கல் செய்து, அறிவார்ந்த ஆணித்தரமான வாதங்களை எடுத்துரைத்து, உலகமே அவைகளை அறியும்படிச் செய்திருந்தால், அது உண்மைகளை உலகுக்குப் புரிய வைக்கக் கூடியதாக இருந்திருக்கும்!

கிளிப்பிள்ளைப் பேச்சு!

வெறும் கிளிப் பிள்ளைகளைப் போல சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ஜே.பி.சி. (JPC) என்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை நியமிக்கவேண்டும் என்றே பிடிவாதம் காட்டினர்.

இதற்கு முன்னால், நடைபெற்ற கூட்டுக் குழு விசாரணைகளில் எதிலும் குற்றமிழைத்தோர் சரியாக அடையாளம் காட்டப்பட்டதோ, தண்டனை பெற வைத்ததோ எதுவும் நடைபெறவில்லையே; பின் ஏன் வீண் பிடிவாதம் என்ற ஆளுந்தரப்பினரின் கேள்விக்கு சரியான விடை தரவில்லை எதிர்க்கட்சியினர்!

சி.ஏ.ஜி. (CAG) என்ற தணிக்கையாளர் தந்த அறிக்கையில் இழப்புத் தொகை இவ்வளவு என்று கணக்கிட்டு திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளாரா? இல்லையே!

59 பக்கம் உள்ள அந்தத் தணிக்கை அறிக்கையின் இறுதி - இத்தொகை (அதுவும் ஊகம், உத்தேசம்தான்) விவாதம் செய்து முடிவு செய்யலாம். (‘‘The Loss Amount is Debatable’’) என்று எழுதுவாரா? எந்தத் தணிக்கை அறிக்கையிலாவது இப்படி ஒரு உத்தேசத் தொகை விவாதம் செய்து முடிவு செய்துள்ளார்கள் என்ற வரலாறு உண்டா? எங்காவது கூட்டுப் புள்ளிக்கு விடை விவாதத்தின்மூலம் பெற்ற கேலிக் கூத்து உண்டா?

பொதுக்கணக்குக் குழுவின்மீது நம்பிக்கை இல்லையா?

நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு (PAC) என்பதில் தலைமை தாங்கி விசாரணை - ஆய்வு செய்பவர் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் (எதிர்க்கட்சியினர் இடதுசாரிகள் உள்பட பலரும் உள்ளனர்) முரளிமனோகர் ஜோஷி. விசாரணை தொடங்கிவிட்டது. அதில் எதிர்க்கட்சியின ருக்கே நம்பிக்கை இல்லை போலும்!

இந்தப் பிரச்சினை 2ஜி அலைக்கற்றை உச்ச நீதிமன்றத்தின் ஆணைப் படி அடி முதல் நுனிவரை மத்திய புலனாய்வுத் துறையால் (சி.பி.அய்.) நடத்தப்பட்டு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய் யப்படுகிறது-அவ்வப்போது என்ற நிலையும் தொடர்கிறது!

இந்நிலையில், போகாத ஊருக்கு, இல்லாத பாதை யைத் தேடுவதுதானே எதிர்க்கட்சிகளின் முயற்சி?

தெருவுக்குக் கொண்டு போவார்களாம்

இப்போது வரும் 22 ஆம் தேதி இப்பிரச்சினை தெருவுக்கு கொண்டுபோக ஒரு பெரும் கண்டனக் கூட்டம் நடத்திட திட்டமிடப் போகிறார்களாம்!

அதனுடைய உள்நோக்கம், UPA அரசினையே இயங்க விடாமல் செய்யத் திட்டம் என்பதைத் தவிர வேறு என்ன?

இதற்கு தகுந்த முறையில் பதிலடி கொடுப்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த கடமையல்லவா?

பெரும்பான்மையாக உள்ள காங்கிரசுக்கு - அது தலைமை தாங்குவதால் - மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் உண்டு.

அமைச்சர் இராசாவை ராஜினாமா செய்ய வைத்து, தி.மு.க ஜனநாயக ரீதியில் உயர்ந்துவிட்டது.

கருநாடக முதல்வரைப் பதவி விலகச் செய்ய முடியாதது ஏன்?

கருநாடக பா.ஜ.க. முதல்வரை அப்படிச் செய்ய வைக்க முயற்சித்தும், பா.ஜ.க.வின் படே படே தலைவர்கள் பரிதாபமாக மூக்குடைபட்டார்களே!

எனவே, அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் இப்பிரச்சினையில் எதுவும் தவறோ, ஊழலோ உண்மை யான இழப்போ ஏற்படவில்லை என்பதை நாடு தழுவிய பிரச்சாரத்தின்மூலம், ஒரே குரலில் சொல்லியாக வேண்டும்.

உண்மைகளைப் பலியாக்கிவிட எதிர்க்கட்சியினர் முயலுகின்றனர்!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி பிரச்சாரத்தில் இறங்கட்டும்!

ஜே.பி.சி. கிடையாது என்ற முடிவில் காட்டிய உறுதியை, தவறு ஏதும் நடக்கவில்லை; நடந்ததாக பூதாகரமான ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) க்கு எதிரான முயற்சி என்ற அவர்களது பலூன் போன்ற பிரச்சாரத்தை - தங்களது ஊசி குத்திடுவது போன்ற முயற்சியின்மூலம் மக்களை விழிப்புறச் செய்யவேண்டும்.

எதிர்க்கட்சிகள் இப்படி கூச்சல் போட்டு தெரு முனைக்கு வருவது ஏன் தெரியுமா? அடுத்த 4, 5 மாதங்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம், புதுச்சேரி, கிழக்கே சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்வர இருப்பதாலே அரசியல் மூலதனமாக இதனை ஆக்கத் திட்டமிட்டுள்ளனர்!

இந்த முகமூடியைக் கிழித்தெறிந்து காட்டுவது அவசர- அவசியமாகும்!

இதை ஒரு கட்சிப் பிரச்சினையாகக் கருதி, கடைசி வீட்டில் தானே தீ எரிகிறது என்று நினைத்தால், அதே வரிசை வீடுகளுக்கும் தீ பரவுவது உறுதி.

எனவே, கூடிக் கலந்து பேசி, நாடு தழுவிய மறுப் பிரச்சாரத்தை, அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் கூட்டாகவோ, தனியாகவோ செய்தால்தான் மலையென வரும் எதிர்ப்பு - பனியென விலகிட வாய்ப்பு ஏற்படும்!

செயலாற்றும் காலம் இது!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிட முடியாது என்று தெரிந்துள்ளதால் அவர்கள் அதற்கு முயற்சிக்க முன்வரவில்லை!

மக்களுக்கு ஆளுந்தரப்பில் விளக்கிடவேண்டும். இது தனிப்பட்ட ஒரு அமைச்சரைச் சார்ந்ததோ ஒரு கூட்டணிக் கட்சியைச் சார்ந்த பிரச்சினையோ அல்ல!

கூட்டு முயற்சி உடனே தேவை!

இல்லையேல், கொடுக்கவேண்டிய விலை அதிகமாகி விடும். கூட்டணிக் கட்சித் தலைவர்களும், அனைவரும் சிந்திப்பார்களாக! செயலாற்றும் காலம் இப்போது வந்துவிட்டது!

தலைவர்,

திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment