மழையால் பாதிக்கப்பட்ட பாசன மற்றும் மானாவாரி பயிர்களுக்கும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் சமீபத்தில் மழை வெள்ளத்தால், விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. நெல் மற்றும் பிற பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு நிவாரண தொகையை அரசு அறிவித்தது.
நெல் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு 8,000 ஆக அறிவிக்கப்பட்டது. இதை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரியதை அடுத்து, மறுபரிசீலனை செய்த முதல்வர் கருணாநிதி, நிவாரண தொகையை பத்தாயிரமாக உயர்த்தினார்.
இந்த நிலையில், பிற பயிர்களுக்கும் நிவாரண தொகையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையும் முதல்வர் மறுபரிசீலனை செய்து, 23.12.2010 அன்று உயர்த்தி அறிவித்தார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அண்மையில் பெய்த பெருமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை ரூ.8 ஆயிரத்தை, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் கருணாநிதி கடந்த 20ம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மற்ற பாசன மற்றும் மானாவாரி பயிர்களுக்கும் நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அவற்றை பரிசீலனை செய்த முதல்வர், பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக இருந்ததை ரூ.7,500 ஆகவும், மானாவாரி பயிர்களுக்கு ரூ.2 ஆயிரமாக இருந்ததை ரூ.4 ஆயிரமாகவும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment